கீழ்வெண்மணி நினைவுச்சின்னம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்து சரியா? - ஒன் பை டூ

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.எம்

``அற்பத்தனமான கருத்தைச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். வள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி என வரிசையாக வன்மத்தைக் கொட்டியவர். இப்போது வெண்மணி தியாகிகளைக் குறிவைத்திருக்கிறார். உண்மையில், தான் சார்ந்த தத்துவார்த்தப்படி, ஆளுநர் சென்றிருக்கவேண்டிய இடம் தியாகிகள் நினைவிடம் அல்ல. 44 பேரை உயிருடன் கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவின் சமாதிக்குத்தான். வெண்மணி சம்பவத்துக்கும் தி.மு.க-வுக்கும் என்ன தொடர்பு... அது தொழிலாளர்களுக்கும் நிலப்பிரபுவுக்கும் இடையே நடந்த போராட்டம். வரலாறு தெரியாமல் அரைகுறையாக எதையாவது உளறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஆர்.என்.ரவி. உழைப்பாளிகளின் உரிமைக்குப் போராடி உயிர்நீத்தவர்களுக்காகப் பொதுமக்களிடம் நிதி திரட்டிக் கட்டப்பட்ட நினைவிடத்தைக் கீழ்மை செய்திருக்கிறார் ஆளுநர். தியாகிகள் வசிக்கும் குடிசைகளைப் பற்றிப் பேசுபவர், வெளிநாட்டு விருந்தினர் வரும்போது பச்சைத்துணி போட்டு ஏழைகளின் குடிசைகளை மூடுபவர்களையும், புல்டோசரால் பொதுமக்களின் வீடுகளை இடிப்பவர்களையும் பற்றிப் பேசுவாரா... பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி 25 சதவிகிதம்தான். 75 சதவிகித நிதியை வழங்குவது மாநில அரசுதான். ஆனால், ‘பிரதமர்’ பெயரில் அந்தத் திட்டத்துக்குப் பெயரிட்டு மக்களை ஏமாற்றுவது குறித்து வாய் திறப்பாரா ரவி... ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமட்டத் தொண்டனாக இருக்கும் ஆளுநர், கம்யூனிஸ்ட்டுகளின் தியாக வரலாறு குறித்துப் பேச அருகதையற்றவர்.’’

கே.பாலகிருஷ்ணன், ஏ.பி.முருகானந்தம்

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

``ஆளுநரின் கருத்தைத் தவறாகச் சித்திரிக்கும் செயலைச் செய்துகொண்டிருக்கிறது ஒரு தரப்பு. ‘இந்தக் காலத்திலும் கிராமப்புறங்கள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்களை, ஆளும் தி.மு.க அரசு மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. மாநில நிர்வாகத்துக்கு மக்கள் முன்னேற்றத்தில் எந்த அக்கறையும் இல்லை’ என்பதையே ஆளுநர் அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தார். தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார். மத்திய அரசுத் திட்டங்கள் மக்களை அடையாமல், வேண்டுமென்று தடுக்கப்படுவதையே குற்றச்சாட்டாகச் சொல்லியிருக்கிறார். தி.மு.க அரசின் ஊழல் மலிந்த ஆட்சியில், மக்கள் படும் துன்பத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பதிவுசெய்திருக்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் பேசியதை மடைமாற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ‘தொழிலாளர்களின் தோழர்கள்’ என்ற போர்வையில் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்ட்டுகளும் அதற்குத் துணைபோகிறார்கள். அதனாலேயே ஆளும் தி.மு.க அரசுமீது சொல்லப்படும் புகார்களுக்கு, கம்யூனிஸ்ட்டுகள் முந்திக்கொண்டு ஏகத்துக்கும் பொங்குகிறார்கள். வெண்மணிச் சம்பவம் நடந்தபோது ஆட்சியிலிருந்த தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. இறந்துபோன 44 பேர்களின் ஆத்மா ஒருபோதும் அவர்களை மன்னிக்காது. கம்யூனிஸ்ட்டுகளை மக்கள் புறம் தள்ளிப் பல ஆண்டுகள் ஆகின்றன. அவர்களின் கூச்சலை இங்கே யாரும் பொருட்படுத்துவதில்லை.’’



from Vikatan Latest news https://ift.tt/Uk1RPF7

Post a Comment

0 Comments