"பழனிசாமி தண்டனை அனுபவிப்பார்; ஜெயக்குமார் தமிழகத்துக்குள் நடமாட முடியாது" - காட்டமான ஓ.பி.எஸ்

ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

ஓ.பி.எஸ்

இக்கூட்டத்தில் பேசிய ஒ.பி.எஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக அழிந்து விடக்கூடாது என நினைத்து எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, நாய் வாலை நிமிர்த்த முடியுமா? இணைந்து செல்ல சம்மதிக்கவில்லை.

ஒ.பி.எஸ் கைய்யொப்பமிட்ட ஏ மற்றும் பி பார்ம் மூலம்தான் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் எம்.எல்.ஏ க்களாக வெற்றி பெற்றனர், ஒ.பி.எஸ்ஸால் வெற்றி பெற்ற 4 பேருக்கும் மானம், ரோஷம் இருந்தால் ராஜினாமா செய்வார்களா?

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உடைத்து அழிக்க நினைக்கிறார், அந்த சர்வாதிகாரியை ஒழிக்கும் வரை நாம் கடுமையாக போராட வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி அணியினரை தோற்கடிக்க பாடுபட வேண்டும்" என்று பேசினார்

எடப்பாடி, ஓபிஎஸ் 

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசும்போது "ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒ.பி.எஸ் மட்டுமே கட்சி, ஆட்சிக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை எற்க என்ன அவசரம்? அவர் என்ன, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவா? கூட்டணிக்கு யாராவது வருவார்களா என எடப்பாடி பழனிசாமி கடை விரித்து உட்கார்ந்து இருக்கிறார், அவர் பின்னால் இருப்பவர்களில் யாருக்கும் முதுகெலும்பு இல்லை" என்றார்.

ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது,  "தேர்தல் மூலமாகவே அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் கட்சி விதிகளை கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி எனும் சர்வாதிகாரி போலியான பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதிகளை எடப்பாடி பழனிசாமி காலில் போட்டு மிதித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமியை தேர்தலிலிருந்து ஓட ஓட விரட்டி அடிப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சின்னம்மா,  ஊர்ந்து ஊர்ந்து சென்றுதான் முதல்வர் ஆனார்.

அதிமுகவுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன தியாகம் செய்தார்? அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றரை கோடி தொண்டர்கள் ஏகமனதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது.

ஜெயலலிதா சொல்லும் சொல்லை மீறாத தொண்டனாக அதிமுக-வில் இருந்துள்ளேன். ஒரு தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்த பின்னர் 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது,

வழிகாட்டும் குழுவில் முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை, தான்தோன்றித்தனமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும், ராஜினாமா செய்யவில்லையென்றால் தொண்டர்கள் தூக்கி எறிவார்கள். எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்காக தண்டனை அனுபவிப்பார், ஜெயக்குமார் நாவை அடக்கி பேச வேண்டும், அப்படி இல்லையென்றால் தமிழகத்துக்குள் எங்கும் நடமாட முடியாது.

இபிஎஸ், ஓபிஎஸ்

நாடாளும்மன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க போராடி வருகிறோம், நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானது, நிரந்தர தீர்ப்புகள் வரவில்லை, நிலைமையை புரிந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாக்கப்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/s6RdoGl

Post a Comment

0 Comments