Election 2024: `ஆளுநரா... தேர்தல் அரசியலா?' - தமிழிசையின் திட்டம் என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை. சென்னை எம்.எம்.சி-யில் மருத்துவம் பயின்றார். பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், பா.ஜ.க கொள்கைகளால் ஈர்கப்பட்டார். இதையடுத்து 1999-ம் ஆண்டு அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்ப்பதில் தமிழிசையின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே அவரை உற்சாகப்படுத்தும் வகையில் மாநில பொதுச்செயலாளர், துணைத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தது, தலைமை. இறுதியாக மாநில பா.ஜ.க தலைவர் பதவியையும் எட்டிப் பிடித்தார்.

பாஜக

2006 சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நின்றவருக்கு தோல்விதான் கிடைத்தது. இதேபோல் 2011 தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் களம்கண்டார். முடிவில் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். மேலும் 2009 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டவருக்கு, தோல்வியே கிடைத்தது. இறுதியாக கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் களம் கண்டார். ஆனால் தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்தவர், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் புதுவை துணைநிலை ஆளுநராகவும் அவருக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆளுநராகப் பணியாற்ற தொடங்கியதும் அரசியல் குறித்து பேசாமல் இருந்தார். பிறகு படிப்படியாக தி.மு.க குறித்து விமர்சனம் செய்ய தொடங்கினார். குறிப்பாக சமீபத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது களத்துக்கு நேரடியாக வந்த தமிழிசை, மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்து கொடுத்தார். அப்போது 'தி.மு.க அரசு தனது கடைமையை செய்ய தவறி விட்டது. வீணாக மத்திய அரசுமீது குற்றம்சுமத்துகிறது' என கடுமையாகத் தாக்கிப் பேசினார். அதற்கு தி.மு.க, 'ஆளுநர் அரசியல் பேசுவது அழகல்ல' என விமர்சனம் செய்தது. இருப்பினும் தி.மு.க குறித்தான தனது விமர்சனத்தைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார், தமிழிசை.

கனிமொழி எம்.பி

இதில் கடுப்பான தி.மு.க-வினர், 'தெலங்கானா, புதுச்சேரி ஆளுநருக்கு தமிழகத்தில் என்ன வேலை?' என்பதுபோல பேசினர். அதற்கு அவர், 'எனக்கு வாக்களித்த மக்களுக்காகப் பேசுகிறேன்' என தடாலடியாக அறிவித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டிருந்த அறிக்கையில், `ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப்போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பதுபோலத் தெரிகிறது. மாநில அரசின்மீது விமர்சனம் செய்து, அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.க-வால், அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்' எனக் கொதித்திருந்தார். இந்த சூழலில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போகிறார் தமிழிசை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ப்ரியன்

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "தமிழகம் தொடர்புடைய விஷயங்களில் ஆளுநர் தமிழிசை தேவையில்லாமல் ஆஜராகிறார். அவருக்கு கவர்னராக இருப்பதில் விருப்பம் இல்லை. வரும் தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்றுவிட்டால் மத்திய அமைச்சராகிவிட வேண்டும் என நினைக்கிறார். எனவே வட சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அவர் களமிறங்கக்கூடும். பொறுத்திருந்து பார்க்கலாம்" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/GfF6vyl

Post a Comment

0 Comments