டவுசர் கொள்ளையர்கள் அட்டூழியம்... அச்சத்தில் வத்தலகுண்டு மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் நள்ளிரவில் ஒவ்வொரு வீடாக கதவுகளைத் தட்டி தனியாக வெளியே வரும் பெண்களைக் குறிவைத்து நகையைப் பறிப்பது... அல்லது வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயல்வது என புகார் எழுந்தது. இதனால் கடந்த சில தினங்களாகவே வத்தலகுண்டு பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டனர். அதுமட்டுமல்லாது டவுசர் கொள்ளையர்கள் குறித்த பேச்சு மக்களிடையே காட்டுத்தீயாய் பரவியது.

செயின் பறிப்பு

இந்நிலையில் வத்தலகுண்டு அருகே கீழக்கோயில்பட்டியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் வீட்டின் பின்புற மாட்டுக் கொட்டகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாடுகள் சத்தம் போட்டன. இதனால் நடராஜனின் மனைவி 60 வயதான நித்தியகல்யாணி என்பவர் கொட்டத்திற்கு வந்து பார்த்தார். அப்போது டவுசர் அணிந்த கொள்ளையர்கள் சிலர் நித்தியகல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினைப் பறித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து அதேபகுதியில் பூட்டியிருந்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பொருள்களை சூறையாடிவிட்டுச் சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவுகளைத் தட்டிவிட்டு தப்பிஓடினா். இதனால் கீழக்கோயில்பட்டி பகுதி மக்கள் போலீஸாரிடம் புகார் அளிக்கச் செல்ல, கிராமமே விடியும் வரை அச்சத்தில் விழித்து கொண்டிருந்தது. டவுசர் கொள்ளையர்களின் அட்டூழியத்தால் வத்தலகுண்டு பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

கைது செய்யவடுவார்களா?

இது குறித்து வத்தலகுண்டு போலீஸாரிடம் விசாரித்தோம். ``பாதிக்கப்பட்ட முதியவரிடம் விசாரித்தபோது, டவுசர் அணிந்திருந்த சிலர் பின்பக்க வழியாக வந்ததாகக் கூறினார். இருளாக இருந்ததால் சரியாக எத்தனை பேர் என்பது அவருக்கு தெரியவில்லை. மேலும் அப்பகுதி மக்களிடையே விசாரித்ததில் அவர்கள் ஆட்டோவில் தப்பியதை பார்த்ததாக தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இதேபாணியில் கொள்ளையில் ஈடுபட்டோரின் விவரங்களை சேகரித்தும், வத்தலகுண்டு பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் தனிப்படை போலீஸார் டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்" என்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/fy6rDxu

Post a Comment

0 Comments