வெங்காயம், தக்காளி மட்டும் தான் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்குமா… `நான் என்ன வெத்தா’ என பூண்டும் (Garlic price) தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
உணவை தாண்டி பூண்டு செரிமானத்திற்கும், நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரையில் கிலோ 150 ரூபாய் என விற்கப்பட்டு வந்த பூண்டு, தற்போது கிலோ 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கால் கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது 110 ரூபாயில் இருந்து விற்கப்படுகிறது.
இதனால் பூண்டை உணவில் சேர்ப்பதையே பலர் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பூண்டின் விலை உயர்ந்ததற்கு காரணம் கேட்டதற்கு, சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன் கூறுகையில்,
``செரிமான பிரச்னை உள்ளவர்களுக்குப் பூண்டு ஒரு சிறந்த உணவு. மருத்துவ குணம் பூண்டிற்கு அதிகம். இதனால் பூண்டை ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்துவது அத்தியாவசியமானது.
ஒரு நாளைக்கு 5 கிராம் பூண்டையாவது சமையலில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எப்பொழுதும் பூண்டின் விலை 150 ரூபாய்க்குள்தான் இருக்கும். இந்த முறை 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
போதுமான மழை இல்லாததே விளைச்சல் குறைவுக்குக் காரணம். விளைச்சல் இருந்தால் வரத்து எப்போதும் இருக்கும். வரத்து குறைகிறது என்றால் விளைச்சல் குறைவு என்பதை புரிந்து கொள்ளலாம். சென்னைக்கு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களிலிருந்து பூண்டு வருகிறது. சில நேரங்களில் தமிழ்நாட்டின் மலைப் பகுதி பூண்டுகளும் வரும். வரத்து குறைவால் பூண்டின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது நடவு செய்யப்பட்டிருக்கும் பூண்டு விற்பனைக்கு வந்தால்தான் விலை குறையும். அதுவரைக்கும் இந்த விலையுயர்வு இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.
from Vikatan Latest news https://ift.tt/SlJaC6k
0 Comments