திருச்சி கே.கே நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கு நவல்பட்டு பகுதியில் இருந்த காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பனை செய்வது தொடர்பாக, திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியதாகச் சொல்லப்படுகிறது. அப்படி மனையை பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் சபரிராஜன், கோபாலகிருஷ்ணனிடம் ரூ. 20,000 வரை லஞ்சம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. லஞ்சம் தர மறுத்த கோபாலகிருஷ்ணனிடம் சபரிராஜன், 'கேட்ட தொகையை தராவிட்டால், துரும்பும் அசையாது' என்று சொல்லியுள்ளார். இதனால், அப்போது சார்பதிவாளருக்கு லஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்ட கோபாலகிருஷ்ணன், 'பணத்தை ரெடி செய்துகொண்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
ஆனால், சார் பதிவாளருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மணிகண்டன் ஆலோசனைபடி கோபாலகிருஷ்ணன் பணம் கொடுக்க முன்வந்தார். சூர்யா என்பவர் மூலம் சபரிராஜனுக்கு லஞ்சம் கொடுத்தார் அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சபரி ராஜன் மற்றும் சூர்யாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுமனை விற்பனை தொடர்பான விவகாரத்தில் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Vikatan Latest news https://ift.tt/SMtCsDf
0 Comments