வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கென மக்கள் மனதில் தனி இடம் உண்டு. நன்றியுணர்ச்சி, பாதுகாப்பு, அளப்பரிய பாசம் போன்ற காரணங்களுக்காக பலரும் நாயை வளர்க்க தேர்வு செய்கின்றனர். காலப்போக்கில் நாயை வளர்ப்பது பெருமைக்கு காட்டுவதற்காக மாறியது.
இதற்காகவே யாரும் வாங்காத வித்தியாசமான அதிக விலையுள்ள நாய்களை மக்கள் தேர்வு செய்து வளர்க்க தொடங்கினர். இந்தநிலை குளிர் காலநிலையில் வளரும் நாய்களை இறக்குமதி செய்து வளர்க்கும் அளவிற்குச் சென்று விட்டது.
இதனால் அந்த நாய்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, காலநிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் கூடிய விரைவிலேயே இறந்தும் விடுகின்றன. இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் குளிர் பிரதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்திற்குத் (Breeding) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் வெளியிட்டுள்ள புதிய தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கை வரைவில், (DRAFT TAMILNADU DOG BREEDING POLICY) நாய்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு குளிர்பிரதேசங்களைச் சேர்ந்த 9 நாய்களை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெப்பநிலையை தாங்கிக் கொள்ள இயலாத பாசெட் ஹவுண்ட் (Basset Hound), பிரஞ்சு புல்டாக் (French Bulldog), அலாஸ்கன் மலாமுட் (Alaskan Malamute), கீஷோண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாந்து (Newfoundland), நார்வே எல்கவுண்ட் (Norwegian Elkhound), திபெத்திய மாஸ்டிஃப் (Tibetan Mastiff), சைபிரியன் ஹஸ்கி (Siberian Husky), செயின்ட் பெர்னார்ட் (Saint Bernard) ஆகிய 9 நாய் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதோடு நாய் வளர்ப்பவர்கள் நாய்களின் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படாதவாறு இனப்பெருக்க நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் நாய்கள் ஆரோக்கியமாகவும், நல்ல குணநலத்துடன் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் (ill -tempered dogs) இருக்கும் நாய்களின் இனப்பெருக்கத்தை தடை செய்ய வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் இனப்பெருக்கம் செய்யும் நாய்களின் ஆரோக்கிய சான்றிதழை வழங்கும். இனப்பெருக்கம் செய்யும் நாயினம் குறித்து நாய் வளர்ப்பவர்கள் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/MQpJ53S
0 Comments