நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து, வேட்பாளர்களை அறிவிக்கும் படலம் தேர்தலை அடுத்த பரபரப்பு கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க 21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது. இந்நிலையில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார் என்பதை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி தென்காசி மக்களவைத் தொகுதி (தனி) வேட்பாளராக சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதி சங்கர் காலனியைச் சேர்ந்தவரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அரசு மருத்துவராக உள்ளார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வரும் இவர், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தனி மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 2002 முதலே தி.மு.க-வில் தன்னை உறுப்பினராக இணைத்து பணியாற்றிவரும் ராணி ஸ்ரீகுமார், மக்களவைத் தேர்தல் மூலமாக முதன்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். இவரின் கணவர் ஸ்ரீகுமார் அரசு ஒப்பந்ததாரராகவும், தி.மு.க விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். டாக்டர் ராணி ஸ்ரீகுமாரின் தந்தை சிவக்குமார், ஓய்வு பெற்ற எழுத்தர், தாய் செல்வமணி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை ஆவார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சிட்டிங் எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்தனர். இதில் தனுஷ் குமார் எம்.பி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி ஆகியோரின் பெயர்கள் இறுதிகட்ட நிலை வரையிலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆயினும் யாரும் எதிர்வாராத விதமாக ராணி ஸ்ரீகுமார், வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் மாவட்ட திமுக சீனியர்கள்.
வேட்பாளர் தேர்வின் பின்னணி குறித்து அவர்களிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``வேட்பாளருக்கான ரேஸில் கடைசி வரை பரிந்துரைக்கப்பட்டது முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வியின் பெயர்தான். கூடுதலாக சிவகிரியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் பெயரும் அடிபட்டது.
ஆனால் முத்துச்செல்வி அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்தவர் என்பதால், உடனடியாக அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என மூத்த நிர்வாகிகள் கூறிவிட்டனர். அதன்பேரில் அடுத்தக்கட்ட நபரைத் தேர்வு செய்ய கமிட்டியினர் பரிந்துரைத்தனர். அதன்பேரில் கட்சியில் சிறப்பாக வேலை செய்யும் அதேசமயம் நன்றாகச் செலவு செய்யக்கூடிய நபராக உள்ளவர் யார் என விசாரணை நடத்தப்பட்டதில், ராணி ஸ்ரீகுமாரின் பெயர் அடிபட்டது.
மேலும், கனிமொழி எம்.பி சிபாரிசின் அடிப்படையிலும் கடைசி நேரத்தில் ராணி ஸ்ரீகுமார் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின், பெரியப்பா பே.துரைராஜ், சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து ஏற்கெனவே இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது" என்றனர்.
இந்த நிலையில் வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், சென்னை அறிவாலயத்தில் நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தென்காசி மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிட்டிங் எம்.பி தனுஷ் குமார் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/LZDToti
0 Comments