`கடந்த முறை தேர்தலின்போது, மசூதி பக்கம் செல்ல முடியவில்லை; ஆனால் இப்போது...' - செல்லூர் ராஜூ

"கட்சி என்பது எப்படி இருக்க வேண்டுமென்றால், அனைத்து சமூகத்தையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாஜக அப்படி கிடையாது..." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

செல்லூர் ராஜூ

மதுரை கோச்சடையில் ரேஷன் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

``திமுக-வுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்திட்டது திமுக தான். நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. திமுக காலத்தில்தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது. மத்திய அரசை எதிர்ப்பதுபோல் எதிர்ப்பது தான் திமுக-வின் கொள்கை.

தமிழ்நாட்டிலுள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான். மத்தியில் ஆளும்கட்சி என்ற மமதையில் அண்ணாமலை தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார். அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தலில் வாக்கு பெட்டியை உடைக்கும்போதுதான் பாஜக-வுக்கு மக்கள் என்ன மாதிரி ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா, தொடர்வாரா என்பது தெரியும்.

செல்லூர் ராஜூ

கட்சி என்பது எப்படி இருக்க வேண்டுமென்றால், அனைத்து சமூகத்தையும், மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும். பாஜக அப்படி கிடையாது, ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகிறது என்பதுதான் வேதனை. பிரதமருக்கு கூடிய கூட்டம், தானாக சேர்ந்த கூட்டம் இல்லை, அழைத்துவரப்பட்ட கூட்டம். இதற்கு தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்.

கூட்டணியில் இருப்பவர்கள் போனால் போகட்டும். எங்களுக்கு கவலை இல்லை. கடந்த முறை தேர்தலின்போது மசூதி பக்கம் செல்ல முடியவில்லை. பாஜக-வை விட்டு வாருங்கள் நாங்கள் அனுமதிக்கிறோம் என்று இஸ்லாமியர்கள் கூறினார்கள். பாஜக-வை ஆதரித்ததால் தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் ஓட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை அப்படி இல்லை இஸ்லாமியர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் தலைவரை இழிவாகப் பேசும் அண்ணாமலைக்கு எப்படி நாங்கள் துணை போவோம்?

செல்லூர் ராஜூ

விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள். 2026 தேர்தல் வரும்போது பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுக-வுக்குத்தான். ஏனென்றால், விஜய் ரசிகர்கள் பெரும்பாலோர் திமுக-வுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் திமுக-வுக்கு கோபம். அதிமுக-வுக்கு இப்போ ரூட் கிளியர். ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசுவது தேர்தல் ஸ்டன்ட். இது சாஃப்ட் கார்னர் எல்லாம் இல்லை. அவர் வேற மாதிரி செய்கிறார். இப்படியெல்லாம் பேசினால் அதிமுக ஓட்டுகள் மாறும் என நினைக்கிறார்" என கூறினார்.



from Vikatan Latest news https://ift.tt/p0iKyfZ

Post a Comment

0 Comments