DCvRCB: `வந்துட்டோம்னு சொல்லு' அசுர டெல்லியை வீழ்த்தி கோப்பையை வென்ற RCB; ஈ சாலா கப் நமதே நிஜமானது!

'ஈ சாலா கப் நமதே' கனவாக இருந்த காலகட்டத்தைக் கரையேற்றிருக்கிறது பெங்களூர் பெண்கள் அணி. வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றிருக்கிறது பெங்களூர் அணி.
RCB

'சில சமயங்களில் நீங்கள் நினைப்பதை போல எல்லாம் நடக்காது. தனிப்பட்ட முறையில் நான் நல்ல ஃபார்மில் இல்லை. எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால், அதற்காக நாங்கள் மோசமான அணி எனக் கூறிவிட முடியாது. எங்களிடம் திறமையான வீராங்கனைகள் இருக்கிறார்கள். பயமறியா இளைஞர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அடுத்த சீசனில் வலுவாக கம்பேக் கொடுப்போம்.' கடந்த வுமன்ஸ் ப்ரீமியர் லீக் சீசனில் பெங்களூர் அணி மோசமாக தோற்று வெளியேறியபோது அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இப்படி பேசியிருந்தார். மந்தனாவின் இந்த வலிமிகு வார்த்தைகள் இந்த சீசனில் உண்மையாகவே பலித்திருக்கிறது. இது மந்தனாவும் பெங்களூருவும் நினைத்ததெல்லாம் நடப்பதற்கான சீசனாக மாறியிருக்கிறது. பெங்களூர் அணி ரசிகர்களின் ஏக்கமும் கனவும் நிறைவேறியிருக்கிறது. அந்த அணி முதல் முறையாக ஒரு கோப்பையை வென்றிருக்கிறது.

இது அவ்வளவு எளிதில் நடந்த விஷயம் அல்ல. கடந்த சீசனில் சிறப்பான வீராங்கனைகளை கொண்டிருந்த போதும் பெங்களூர் அணி பலத்தை அடியை வாங்கியது. 8 போட்டிகளில் இரண்டே இரண்டு போட்டிகளை மட்டுமே வென்றிருந்தது. இந்த முறையும் லீக் சுற்றில் பெங்களூர் அணி அத்தனை அபாரமாகவெல்லாம் ஆடவில்லை. ஆனால், அந்த அணியிடம் ஒரு துடிப்பு இருந்தது. தோல்விகளிலிருந்து மீள வேண்டும் என்கிற வேட்கை இருந்தது. அசாத்தியங்களை செய்து முடிக்கும் விருப்பம் இந்த அணிக்கு அதிகம் இருந்தது. அணி சிக்கலில் சிக்கும்போதெல்லாம் எதோ ஒரு வீராங்கனை முன் நின்று பொறுப்பேற்று அணியை காப்பாற்றியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் பெங்களூர் அணியின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நல்ல பந்துவீச்சாளர்களை இந்த அணி கொண்டிருந்தது.

RCB

மும்பை அணி வலுவான அணி. நடப்பு சாம்பியன். அவர்களை பெங்களூர் அணி எலிமினேட்டரில் எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 130 + ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மும்பை மாதிரியான ஒரு அணியை இந்த ஸ்கோருக்குள் வீழ்த்துவது இமாலய சவால். ஆனால், பெங்களூர் அணி அதை செய்து காட்டியது. 5 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. ஸ்ரேயங்கா பாட்டீல், எல்லிஸ் பெர்ரி, மொலினக்ஸ் என ஒட்டுமொத்த யூனிட்டும் சிறப்பாக பந்துவீசியிருந்தது. மும்பைக்கு எதிரான கடைசி லீக் போட்டியையுமே பெங்களூர் அணி வென்றிருந்தது. அந்தப் போட்டியில் மும்பை அணியை 113 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருப்பார்கள். எல்லிஸ் பெர்ரி மட்டும் 6 விக்கெட்டுகளை அந்தப் போட்டியில் வீழ்த்தியிருந்தார். அதேமாதிரி, உத்தரபிரதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 157 ரன்களை டிபண்ட் செய்து 2 ரன்களில் பெங்களூர் அணி வென்றிருந்தது. அந்தப் போட்டியில் ஆஷா ஷோபனா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இப்படியாக இந்தத் தொடர் முழுவதுமே பெங்களூர் அணியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. கடந்த சீசனில் அப்படி இருந்திருக்கவில்லை. ஆண்கள் சீசனின் நீட்சியாக அடி மேல் அடி வாங்கியிருந்தார்கள்.

அந்த சிறப்பான பந்துவீச்சை இறுதிப்போட்டியிலும் தொடர்ந்ததால்தான் கோப்பையையும் வென்றிருக்கிறார்கள். டெல்லி அணிக்கு எதிராக பெங்களூர் அணிக்கு உளவியல்ரீதியாக ஒரு பிரச்னை இருந்தது. அதாவது, இந்த இறுதிப்போட்டிக்கு முன் டெல்லி அணியை இதுவரை 4 முறை பெங்களூர் அணி எதிர்கொண்டிருக்கிறது. 4 முறையும் டெல்லியே வென்றிருக்கிறது. கடைசியாக ஆடிய போட்டியில் உருண்டு புரண்டு போராடியும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றிருப்பார்கள். இப்படிப்பட்ட ரெக்கார்ட் இருந்த சமயத்திலும் டெல்லியை வீழ்த்த காரணமாக அமைந்தது பெங்களூருவின் பௌலிங்தான். முதலில் டெல்லிதான் பேட்டிங் செய்திருந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டே இழக்கவில்லை. 60 க்கும் அதிகமாக ரன்கள் அடித்திருந்தார்கள். அதன்பிறகுதான் மொலினக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை பெங்களூர் பக்கமாக திருப்பினார். ஷெபாலி வர்மா, ஜெமிமா, கேப்ஸி என மூவரையும் வீழ்த்தியிருந்தார். இந்த திருப்பத்தை பயன்படுத்தி சீசன் முழுவதும் கலக்கி வந்த ஸ்ரேயங்கா பாட்டீல் இந்த போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

RCB
விளைவு, டெல்லி 113 ரன்களுக்கு ஆல் அவுட். பெங்களூருவுக்கு 114 ரன்கள் டார்கெட். முதல் முறையாக கோப்பையை வெல்ல கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என்பதால் சேஸிங்கை கொஞ்சம் கவனமாக அணுகினார்கள். பந்துக்கேற்பதான் ரன்னை ஏற்றிக்கொண்டு சென்றனர்.

கடைசி ஓவர் வரை சென்றாலும் எல்லிஸ் பெர்ரி பக்குவமாக நின்று சரிவு எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். 1 ரன் வித்தியாசத்தில் டெல்லிக்கு எதிராக தோற்றபோது விரக்தியில் இருந்த ரிச்சா கோஷ் பவுண்டரி அடிக்க பெங்களூர் அணி போட்டியை வென்றது. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

சீசன் முழுவதும் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே சூப்பர் ஸ்டாராக கலக்கியிருந்தார். பெங்களூருவின் வெற்றியில் இவரின் பங்களிப்பு அதிகம். மொத்தத்தில், தலைகுனிந்து சோகத்துடன் ஸ்மிருதி மந்தனா அடுத்த சீசனில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என சொன்னாரோ அதெல்லாம் இந்த சீசனில் அவர்களுக்கு அப்படியே நடந்திருக்கிறது.

எல்லிஸ் பெர்ரி ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கிறார். ஸ்ரேயங்கா பர்ப்பிள் தொப்பியை வைத்திருக்கிறார். பெங்களூர் கோப்பையை வைத்திருக்கிறது. இனி 'ஈ சாலா கப் நமதே' என்பதை யாரும் கலாய் மொழியாக பயன்படுத்த முடியாது. வாழ்த்துகள் RCB


from Vikatan Latest news https://ift.tt/VC0scKy

Post a Comment

0 Comments