வேட்பாளர் பட்டியலில் விடுபட்ட பெயர்... அரசியலிலிருந்தே விலகிய பாஜக மூத்த தலைவர் ஹர்ஷ் வர்தன்!

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த மாத இறுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலக் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்த வண்ணம், தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று முந்தினம் வெளியிட்டது.

அமித் ஷா, மோடி

இதில், தற்போது எம்.பி-யாக இருக்கும் 33 பேருக்குப் பதில் புதுமுகங்களை பா.ஜ.க வேட்பாளர்களாக களமிறக்கியிருக்கிறது. அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போது பதவியிலிருக்கும் எம்.பி-யுமான கட்சியின் மூத்த தலைவர் ஹர்ஷ் வர்தனும் ஒருவர். இந்த நிலையில்,பா.ஜ.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் விடுபட்ட அடுத்த நாளான நேற்று, அரசியலிலிருந்தே விலகுவதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஹர்ஷ் வர்தன் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``5 சட்டமன்றத் தேர்தல், 2 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி, கட்சி, மத்திய, மாநில அரசுகளில் பல மதிப்புமிக்க பதவிகள் என முப்பது ஆண்டுகளுக்கும் மேலான எனது அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு, என்னுடைய தொடக்கத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். கான்பூரிலுள்ள GSVM மருத்துவக் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு MBBS படிப்பில் சேரும்போது, ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதே என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அதன்பின்னர், அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைமையின் வலியுறுத்தலின் பேரில் தேர்தல் களத்தில் குதித்தேன்.

ஹர்ஷ் வர்தன்

அரசியல் என்பது நம்முடைய மூன்று எதிரிகளான வறுமை, நோய், அறியாமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடக்கூடியது என்று அவர்கள் என்னை இதற்குள் இழுத்தார்கள். இதில், டெல்லி சுகாதார அமைச்சராகவும், இரண்டு முறை மத்திய சுகாதார அமைச்சராகவும் நான் பணியாற்றியது என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. போலியோ இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கும், கொரோனா சமயத்தின்போது நம் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கவும் எனக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது.

மனித குலத்தின் நீண்ட வரலாற்றில், மிக மோசமான ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அதை நான் தட்டிக்கழிக்காமல் பெருமையோடு எனக்குள் வரவேற்றுக்கொண்டேன். இதனை நான் பெருமையோடு கூறுவேன். என்னுடைய இந்த மூன்று தசாப்த பயணத்தில் என்னுடனிருந்த எனது கட்சி நிர்வாகிகள், கட்சித் தலைவர்கள், என் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஹர்ஷ் வர்தன்

பிரதமர் மோடியுடன் பணியாற்றியதைப் பாக்கியமாகக் கருதுகிறேன். புகையிலை, போதைப்பொருள்களுக்கு எதிராகவும், காலநிலை மாற்றத்துக்கு எதிராகவும், எளிய மற்றும் நிலையான வாழ்க்கை முறைகளைக் கற்பிப்பதற்காகவும் எனது பணியைத் தொடர்ந்து தொடர்வேன். இனியும் என்னால் காத்திருக்க முடியாது. நான் உறங்குவதற்கு முன் இன்னும் பல மைல் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. கிருஷ்ணா நகரிலுள்ள எனது ENT கிளினிக்கும் எனது வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/84Jf2ti

Post a Comment

0 Comments