"எத்தனை முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தாலும் மாற்றம் வராது..!" - கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் இருக்கும் மாஞ்சான் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட மழவராயன்பட்டியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம்,

``தமிழ்நாட்டில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை என்று பா.ஜ.க தலைமைக்கு தெரியும். அதனால், அவர்களுக்கு மையமாக உள்ள மாநிலத்தில் வேட்பாளரை பா.ஜ.க அறிவித்துள்ளது. பா.ஜ.க-வும் பல மாநிலங்களில் கூட்டணி முடிவு செய்யாமல் தான் உள்ளது. எங்கெங்கெல்லாம் கூட்டணி இல்லையோ அங்கங்கே தான் வேட்பாளரை பா.ஜ.க அறிவித்துள்ளது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி உறவு நீண்ட கால உறவு. அது என்றும் நிலைத்து நிற்கும். அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் சீட்டுகள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். இருப்பது 39 தொகுதி தான். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதற்குள் தான் அடங்க முடியும். இது தி.மு.க தலைமைக்கு நன்றாக தெரியும். அவர்கள் கூட்டணியில் இருக்கும் அனைவருக்கும் சுமூகமாக பிரித்துக் கொடுப்பார்கள். தி.மு.க கூட்டணியில் ஒரு கசப்பும் கிடையாது. வெற்றி கூட்டணி தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி. தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 தொகுதியிலும் வெற்றி பெறப் போகிறது.

அ.தி.மு.க தங்களது கட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் ஒருமுறை வேடிக்கையாக சொன்னார்... சாதி கணக்கு மூலம் ஒவ்வொரு கட்சித் தலைவரையும் அழைத்து கேட்டால் 100 சதவிகிதத்தை தாண்டி விடும் என்றார். அதேபோல், ஆசைப்படுகிற அரசியல் கட்சியை அழைத்து கேட்டால் அவர்களது ஓட்டு சதவிகிதம் 100 சததவிகிதத்தை தாண்டி விடும்.

கார்த்திக் சிதம்பரம்

அதனால், இதில் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க-வுக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம் உள்ளது என்பதை மே மாதம் வாக்கு எண்ணும் போது தெரிந்துவிடும். அப்போது பேசிக் கொள்ளலாம். 'கண்டா வரச் சொல்லுங்க...' என்று நோட்டீஸ் ஓட்டுகிறார்கள். என்னை தான் கண்டுவிட்டீர்களே. காணாதவர்கள் யாராவது இருந்தால் வரச் சொல்லுங்கள். இந்த நோட்டீஸ் வேடிக்கையாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அவரது கடமையை செய்கிறாரா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர அனைவரும் வீட்டிற்கு வந்தாரா என்ற எதிர்பார்ப்பு சிரமமான எதிர்பார்ப்பு. எத்தனை முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தாலும் மாற்றம் வராது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தி, இந்துத்துவா கொள்கையுடைய பா.ஜ.க-வை நிராகரிக்கப்பட வேண்டிய அரசியல் கட்சியாக தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸ் இருக்கும்போது பொருளாதாரம் எவ்வாறு இருந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வு எப்படி உள்ளது என்பதை பொதுமக்கள் பார்க்கிறார்கள்.

விலைவாசி கூடியதற்கு குழப்பமான ஜி.எஸ்.டி தான் காரணம். பிரதமர் என்பதால் எத்தனை முறை வேண்டுமென்றாலும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பிரதமர் மோடி செல்லலாம். அது அவரது உரிமை. அந்தப் பயணம் எந்த ஒரு பயனும் இல்லாத பயணமாக தான் நான் பார்க்கிறேன். திருப்பூரில் பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடியை வைத்து நடத்திய கூட்டம் கூட அவர்களுக்கு வெற்றியை தரவில்லை. இவர்கள் சேர்வார்கள் அவர்கள் சேர்வார்கள் என்றெல்லாம் கூறினார்கள். கடைசியில் யாரும் சேரவில்லை. வந்த கூட்டம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டத்திற்கு சென்றவர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக இருக்கிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது. பிரதமர் மோடி ரூ. 15 லட்சம் கொடுப்பது எவ்வாறு ஒத்திவைத்தார்களோ அதே போல் தான் பிற கட்சிகளில் இருந்து சேர்வார்கள் என்பதையும் ஒத்தி வைத்துள்ளார்கள். அம்பானியின் இல்ல திருமண விழாவிற்கு ஏர்போர்ட் வழங்கியதன் மூலம் இந்த அரசின் பார்வை, கொள்கை என்ன என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.

கார்த்திக் சிதம்பரம்

இந்த முக்கியத்துவத்தை மதுரையில் உள்ள விமான நிலையத்திற்கு தர வேண்டும் என்று கேட்டால் அது கமர்சியல் ரிசீசன் என்று கூறினார்கள். 370 சீட்டுகளை பெறுவோம் என்று எண்ணுவது அகண்ட பாரதத்தில் வேண்டுமென்றால் அவர்களது ஆசை நிறைவேறும். அகண்ட பாரதம் என்பதால் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் இது எல்லாம் அகண்ட பாரதத்தில் அடங்கும். அங்கெல்லாம் தேர்தல் நடந்து அதை அனைத்தையும் சேர்த்தால் அவ்வளவு சீட்டுகளை பா.ஜ.க வாங்கலாம். பா.ஜ.க ஆசைப்படுவது பேராசை...அல்பாசை. கட்சிக்குள் ஒருவருக்கு சீட் வேண்டும்...வேண்டாம் என்று சொல்வது இயல்பு தான். ஆனால், யாருக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும். மூன்று முறை காங்கிரஸில் இடம் ஒதுக்கி எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி பா.ஜ.க-வில் இணைந்தது வருத்தம் அளிப்பதாகத் தான் உள்ளது. ஆனால், இந்த சமயத்தில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது வாடிக்கை தான்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/CIWUZ4r

Post a Comment

0 Comments