விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டின்பேரில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், "துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான். அவர் தற்போது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார். வைகோவிடம், `உங்களுக்கு பின்பு இந்தக் கட்சியை வழிநடத்த ஒரு ஆள் தேவை. அதற்கு துரை வைக்கோ பொருத்தமானவர் அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்’ என கூறினேன்.
சட்டமன்ற தேர்தலில் சாத்தூரில் துரை வைகோவை போட்டியிட வைக்க வேண்டுமென நானும் அமைச்சர் தங்கம் தென்னரசும் கூறினோம், எப்படியோ தப்பித்து விட்டார். தேர்தல் அரசியலில் துரை வைகோ நிற்க வேண்டும். இந்தியா முழுவதும் வாரிசு அரசியல் இல்லாமல் எந்த கட்சியும் இல்லை. அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு. அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. குறிப்பிட்ட நபர்கள் தான் தியாகம் செய்வார்கள் அதில் வைகோவும் ஒருவர்" என்றார்.
நிகழ்ச்சி முடிவில், ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மனக்கசப்புகள் இருந்தாலும், மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதற்காகதான் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தி.மு.க. கூட்டணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அதேபோல இந்த முறையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தமுறை என்ன சிறப்பு என்றால் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
இன்னும் 15 மாதங்கள் கால அவகாசம் இருப்பதால் மாநிலங்களவை பதவி தருகிறோம் என தி.மு.க. தெரிவித்துள்ளது. ம.தி.மு.க.வினர் நான் விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டுமென்பதை கட்சி தலைமைதான் முடிவுசெய்யும். நான் போட்டியிடுவது குறித்தும் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் தெரிவித்துவிட்டேன்.
போதைப் பொருள் கடத்தல், கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகத்தில் வளர்ந்த வண்ணமாகத்தான் உள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில 2013 நவம்பர் 11-ம் தேதி 40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் ஜாபர் சாதிக்கிடம் பிடிபட்டு கைது செய்யப்பாட்டார். தரவுகளும், சாட்சிகளும் சரியில்லாததால் அவர் விடுதலை ஆகிவிட்டார்.
அப்போதே அரசு தன் கடமையை சரியாக செய்திருந்தால் தற்போது ஜாபர் சாதிக் வெளியில் வந்திருக்கமாட்டார். அப்போது ஜாபர் சாதிக்கிற்கு ஆதரவாக பா.ஜ.க. வழக்கறிஞர் தலைவர் பால்கனகராஜ் வாதிட்டார். எனவே, இதுகுறித்து பேச அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் அருகதை இல்லை. 14 மாதங்களுக்கு முன்பாகவே சிவகாசியில் குறுங்காடுகள் தொடங்குவதற்கு நான் முயற்சி எடுத்தேன். எந்த அரசியலுக்காகவும் நான் இந்த முயற்சியை எடுக்கவில்லை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/PDREWze
0 Comments