இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
``இது முற்றிலும் பா.ஜ.க-வின் தேர்தல் நாடகம்தான். மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 410 ரூபாயாக இருந்தது ஒரு காஸ் சிலிண்டரின் விலை. தற்போது ரூ.1,100-ஐ தொட்டுவிட்டது. கண்மூடித்தனமாக காஸ் விலையை உயர்த்திய மோடி அரசு, தேர்தல் நெருங்கியதும் நூறு ரூபாய் விலை குறைக்கிறேன்... என்று நாடகமாடுகிறது. இதுபோல மோசடி செய்து, மக்களை ஏமாற்றுவதை முழு நேர வேலையாகச் செய்துவருகிறது மத்திய பா.ஜ.க அரசு. இவர்கள் கொண்டுவந்த `உஜ்வாலா’ திட்டம் போன்ற ஒரு மோசடித் திட்டத்தை இந்த நாடு பார்த்திருக்காது. இந்தியாவின் 80 சதவிகிதக் குடும்பங்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், உஜ்வாலா திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கை வெறும் 25 சதவிகிதத்தைக்கூடத் தாண்டவில்லை என ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. பொய் சொல்லி, மக்களை ஏமாற்றக் கொஞ்சமும் வாய் கூசாதவர்கள் இவர்கள். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக இன்னும் என்னென்ன நாடகங்களை பா.ஜ.க அரசு அரங்கேற்றப்போகிறது என்று நாமும் பார்க்கத்தானே போகிறோம்... மோடியின் பொய்களைக் கேட்டுக் கேட்டு இந்திய மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். இனியும் இந்த ஏமாற்றுக்கார அரசை நம்பவும், பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.’’
ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க
``தி.மு.க-வினர் அனைத்தையும் அரசியலாக்குகிறார்கள். மகளிர் தினத்தில் வெளியான இந்த அறிவிப்புக்கும், வரப்போகும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் விடைபெறும்போது, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 14 கோடி மட்டுமே. இந்த எண்ணிக்கை தற்போது 32 கோடியாக உயர்ந்திருக்கிறது. 67 ஆண்டுகளில் 14 கோடியாக இருந்த எண்ணிக்கை, பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுக்கால ஆட்சியில் மட்டும் 18 கோடி அதிகரித்திருக்கிறது. அதோடு, பிரதமரின் `உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின்கீழ் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு, மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டுவருகிறது. இன்று இந்தியாவில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. விறகு அடுப்பில் சமைத்துவந்த பெண்களுக்கு முற்றிலுமாக விடுதலை வழங்கியது பா.ஜ.க அரசு. இதைப் பாராட்ட மனம் இல்லாத எதிர்க்கட்சிகள், விலைக் குறைப்பைத் தேர்தலோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். பா.ஜ.க அரசு மீதான எதிர்க்கட்சியினரின் பொய்க் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை.’’
from Vikatan Latest news https://ift.tt/jgyTGEJ
0 Comments