Electoral Bond: நன்கொடையில் முதலிடத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம்! - தரவுகள் சொல்வதென்ன?

உச்ச நீதிமன்றம் கடந்த மாதம், தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தை சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்தது. அதோடு, தேர்தல் பத்திரங்களின் அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-க்குள் எஸ்.பி.ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதை மார்ச் 13-க்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நான்கு மாத காலம் எஸ்.பி.ஐ அவகாசம் கேட்க, `மார்ச் 12-க்குள் மொத்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கண்டித்துகொண்டது. அதன்படி மார்ச் 12-ம் தேதி மாலை தேர்தல் பத்திர தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ ஒப்படைத்தது.

எஸ்.பி.ஐ வங்கி

அதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயமாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ அளித்த தேர்த பத்திர தரவுகளை, தேர்தல் ஆணையம் இரண்டு பட்டியலாக தனது இணையதளப் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதில், ஒரு பட்டியியலில் எந்தெந்த நிறுவனங்கள்/தனிநபர் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் என்று தரவுகள் இருக்கின்றன. மற்றொரு பட்டியலில், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி எந்தெந்த தேதியில் பெற்றன என்று தரவுகள் இருக்கின்றன. ஆனால், எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன எனத் தரவுகள் இல்லை.

எனினும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி உள்ள பத்திரங்கள், அதன் மதிப்பு மற்றும் அதனை வாங்கிய நிறுவனங்கள் முதலிய தகவல்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் முதலாவது பட்டியலின்படி, தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்களின் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது ஃப்யூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் என்ற நிறுவனம்(Future Gaming and Hotel Services ) ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது

லாட்டரி நிறுவனமான ஃப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ், ரூ.1,200 கோடிக்கும் அதிமான மதிப்புள்ள சுமார் 1,200 -க்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரிய வந்திருக்கிறது. ‘லாட்டரி அதிபர்’ மார்ட்டின் தலைமையில் இந்நிறுவனம் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்நிறுவனம் மீது பணமோசடி தொடர்பாக விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. .

தற்போதைய தகவலின் படி, இரண்டாம் இடத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த Megha Engineering & Infrastructures Ltd என்ற நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் தோராயமாக 900 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது..

இதனிடையே தேர்தல் பத்திர தரவுகளின் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பியூஷன், ``மேகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் ஏப்ரல் 11, 2023 தேதியில் மட்டும் 100 கோடிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்திருக்கிறது. பின் ஒரே மாதத்தில் ரூபாய் 14,400 கோடி மதிப்பிலான சுரங்க சாலை கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் அந்த நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நிதி வழங்கியது என்ற தகவலை எஸ்பிஐ வெளியிடவில்லை. இருப்பினும் சில நிறுவனங்கள் கொடுத்த நிதியும் அது எந்த கட்சிக்கு கொடுக்கப்பட்டது என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தரவுகள் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன!



from Vikatan Latest news https://ift.tt/MpvuN5U

Post a Comment

0 Comments