புது ரூட்டில் `நாம் தமிழர் கட்சி’ - மக்களிடம் சென்றுசேருமா புதுச்சின்னம்?!

கரும்பு விவசாயி சின்னம் பறிபோன நிலையில், புதுச் சின்னத்தை எதிர்பார்த்து நிற்கிறது நாம் தமிழர் கட்சி. இதற்கிடையில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், இந்த சின்னம் விவகாரத்தை பேசுபொருளாக்கும் விதமாகவும் பல்வேறு வியூகங்களை அமைத்து சின்னத்துக்கான பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது நா.த.க

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 20 பெண்களையும் 20 ஆண்களையும் வேட்பாளராக களமிறக்கி நான்காவது பொதுத் தேர்தலை கூட்டணியின்றி தனித்து சந்திக்கிறது நாம் தமிழர் கட்சி. 2019 மற்றும் 2021 தேர்தல்களை கரும்பு விவசாயி சின்னத்துடன் சந்தித்த நிலையில், அச்சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கியிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் சின்னத்தை `பாரதிய பிரஜா ஆகியத்தா’ என்ற கட்சிக்கு கொடுத்தோம் என்கிறது தேர்தல் ஆணையம்.

சின்னம் பிரச்சாரம்

`இரண்டு பொதுத் தேர்தலை அந்த சின்னத்தை கொண்டே சந்தித்திருக்கிறோம், 6.87 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் நிலையில் லெட்டர் பேட் கட்சிக்கு எங்கள் சின்னத்தை ஒதுக்குவதா... எங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்’ என டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையிலும், அது பலன்கொடுக்கவில்லை. தற்சமயம் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடும் செய்திருக்கிறார்கள்.

இது குறித்து கட்சியின் உள் விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம்... ``நாம் தமிழர் பேசும் கொள்கைக்கும் அரசியலுக்கும், கரும்பு விவசாயி சின்னத்துக்கு ஏக பொருத்தம் உண்டு. ஆனால் பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கையால் சின்னம் பறிபோயிருக்கிறது என நம்புகிறார்கள் நா.த.க-வினர். மேலும் இனிமேலும் விவசாயி சின்னம் கிடைக்குமென காத்திருப்பதில் பிரயோஜனமில்லை என்ற நிலைக்கு நகர்ந்திருக்கிறது நா.த.க. இதற்கிடையில் சின்னம் பறிபோன விவகாரம் சீமான் முதல் கட்சியில் அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் உஷ்ணப்படுத்தியிருக்கிறது. `எங்களையா முடக்கப் பார்க்கிறீர்கள்?’ என வெடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒட்டப்படும் போஸ்டர்கள்

வேட்பாளர் அறிமுக மேடைகளில் பேசும் கட்சியின் முக்கியபுள்ளிகள்.. `எங்களுக்கு பேய் சின்னம் கொடுத்தாலும் பரவாயில்லை, செருப்பு சின்னம் கொடுத்தாலும் சரி.. அதை கொண்டே எதிரிகளை அடிப்போம். ஒரேநாளில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம்’ என பொங்குகிறார்கள். கட்சியினர் ஆதங்கத்தை பிரசார இயக்கமாக மாற்றலாம் என்ற கட்சியின் ஐ.டி விங்குக்கு ஐடியாவாக எழந்திருக்கிறது. அதற்கான செயல்திட்டங்களை வகுத்து சீமான் முன் சமர்பிக்க, அவரோ `மிக சிறப்பு’ என அப்ரூவல் கொடுத்திருக்கிறார், அதன் வெளிப்பாடாகவே எக்ஸ் தளத்தில் அதற்கான பிரசாரத்தையும் தொடங்கியிருக்கிறார்கள்” என்றனர்.

எக்ஸ் தள பிரச்சாரம்

நம்மிடம் பேசிய நா.த.க ஐடி விங் மாநில ஒருங்கிணைப்பாளர் சுனாந்தா தாமரைச்செல்வன், ``கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழரிடம் இல்லை என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது எங்கள் முதற்கட்ட பிளான். அதன்படி கரும்பு விவசாயி சின்னம் தாங்கிய எந்த பேனர், போஸ்டர்களையும் பயன்படுத்த வேண்டாம் என மேசேஜ் அனுப்பியிருக்கிறோம். மேலும் கரும்பு விவசாயி சின்னம் நம்மிடம் இல்லை, புதுச் சின்னம் வரப்போகிறதென உளவிலாக பதியவைக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் புதுச் சின்னம் குறித்த ஆவலை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறோம்.

சின்னம் பிரச்சாரம்

அதன் பகுதியாகவே ‘நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன?” என்ற பிரசாரத்தை தமிழ்நாடு முழுக்க மேற்கொண்டிருக்கிறோம். 40 தொகுதிகளிலும் சுவர் விளம்பரம், போஸ்டர்களாக மக்கள் மத்தியில் ஒரு வினாவை கேட்க செய்திருக்கிறோம். அதோடு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து இக்கேள்வியை பேசுபொருளாக மாற்றியிருக்கிறோம். நா.த.க-வுக்கு புதுச் சின்னம் ஒதுக்கப்படும்வரை இப்பிரசாரத்தை இன்னும் விரியமாக கொண்டு செல்லவிருக்கிறோம். கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினர், குழந்தைகள் `நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன?’ என வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சொல்லப்போனால் இதெல்லாம் வெறும் ட்ரெயிலர்தான்.

சுனாந்தா தாமரைச்செல்வன்

புதுச் சின்னம் ஒதுக்கப்பட்ட பின்பு, அதனை எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதை மட்டும் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் நம்பிக்கையுடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/4otHxSi

Post a Comment

0 Comments