குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி நரேந்திர் மோடி மைதானத்தில் நடந்திருந்தது. திரில்லாகச் சென்ற இந்தப் போட்டியில் இறுதியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
ஹர்திக் மும்பை அணியின் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில் மும்பை அணி தோற்றிருக்கிறது. `எங்களின் கணிப்பு தவறிவிட்டது.' என கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்விக்குக் காரணம் சொல்லியிருக்கிறார்.
மும்பை அணிக்கு டார்கெட் 169. அந்த அணி சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தது. கடைசி 5 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 43 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கையில் 7 விக்கெட்டுகள் இருந்தது. எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை மும்பை அணி கோட்டைவிட்டது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை எனும்போது அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசியிருந்தார். முதல் இரண்டு பந்துகளில் சிக்சரும் பவுண்டரியும் அடித்த ஹர்திக் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அத்தோடு மும்பை அணி நம்பிக்கையையும் இழந்தது. தோல்வியை தழுவியது.
தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, 'நாங்கள் அந்த கடைசி 5 ஓவர்களில் போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட முடியும் என நினைத்தேன். ஆனால், நாங்கள் கடைசி 5 ஓவர்களுக்கு இவ்வளவு ரன்கள் அடிக்க முடியும் என கணித்து வைத்திருந்ததைவிட குறைவாகவே அடிக்க முடிந்தது. எங்களின் கணிப்பு தவறிவிட்டது. திலக் வர்மா சிங்கிள் எடுக்காமல் தவிர்த்ததைப் பற்றிக் கேட்கிறீர்கள். அந்த சூழலில் அதுதான் சரியென அவர் நினைத்திருக்கூடும். நான் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர் பக்கம் நிற்கிறேன். இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது. அவற்றில் சந்திப்போம்.
குஜராத் மைதானத்துக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. இங்கு ரசிகர்களின் உற்சாகத்தை முழுமையாக உணர முடியும்.' எனக்கூறினார்.
மும்பை அணி பல சீசன்களில் தங்களின் முதல் போட்டியை தோல்வியுடன்தான் தொடங்கியிருக்கிறது. அதனால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. முதல் போட்டியில் தோற்றால்தான் எங்களுக்கு ராசி என மும்பை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஜாலி செய்து வருகின்றனர்.
மும்பையின் தோல்விக்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!
from Vikatan Latest news https://ift.tt/y7GXL8r
0 Comments