KKR v SRH: பயம் காட்டிய க்ளாஸன், ஹீரோவான ஹர்ஷித் ராணா; இந்த சீசனின் முதல் பிளாக்பஸ்டர் போட்டி!

புதிய கேப்டன், புதிய ஜெர்சி எனக் கடந்த சீசனில் கடைசி இடம்பிடித்ததை அப்படியே நினைவில் இருந்து அழிக்கும் உத்வேகத்தில் சன்ரைசர்ஸ் இருக்க, ஆலோசகராக கம்பீர் வருகை, கோடிகளில் வாங்கப்பட்ட ஸ்டார்க் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புதிய சீசனை வெற்றியுடன் தயாராக இருந்தது. சமீபகாலங்களில் அதிக ரன்கள் அடிக்கப்படும் மைதானமாக இருக்கும் ஈடன் கார்ட்ன்ஸில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பௌலிங்கைத் தேர்வுசெய்தார்.
Pat Cummins and Sheryas Iyer

இத்தனை ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் அணியில் எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டாலும் மாறாமல் இருப்பது புவனேஷ்வர் குமார் மட்டும்தான். முதல் ஓவரில் பந்துகளைச் சிறப்பாக ஸ்விங் செய்து 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இருந்தும் அடுத்த ஓவரில் பந்துவீச வந்த யான்சன் ரன்களைத் தாராளமாக விட்டுக்கொடுத்தார். ஸ்டம்புகளுக்கு வெளியே அவர் வீசிய மூன்று பந்துகளை அடுத்து அடுத்து சிக்ஸர் அடித்து தன் வருகையை ஐபிஎல் ரசிகர்களுக்கு அறிவித்தார் ஃபில் சால்ட். ஏலத்தில் அவர் வாங்கப்படாமல் இருந்ததே பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

Phil Salt

ஆனால், ஓப்பனிங் பேட்டர்கள் தேவைக்கும் அதிகமாக இருப்பதால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜேசன் ராய் விலகியதாலேயே இப்போது கொல்கத்தா அணிக்குள் வந்திருக்கிறார். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடவே ரஹ்மானுல்லா குர்பாஸை ஓரம்கட்டி அணியில் இடம்பெற்றார். மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் தனது திறமையை நிரூபித்துக்கொண்டிருக்க எதிர்முனையில் தேவையில்லாமல் விக்கெட்களை விட்டது கே.கே.ஆர்.

ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து திணறிக்கொண்டிருந்தது. சிறப்பாக பந்துவீசிய நடராஜன் தனது முதல் ஓவரிலேயே வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயஸ் ஐயர் என இருவரையும் அவுட் ஆகியிருந்தார். இப்படியான இக்கட்டான நிலையில் உள்ளே வந்த ரமன்தீப் சிங், சால்ட்டுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைக்க, கொஞ்சம் கொஞ்சமாக சரிவிலிருந்து மீண்டது கொல்கத்தா. மிடில் ஓவர்களில் அனுபவமிக்க ஸ்பின்னர் இல்லாத குறையை உணர்ந்தது சன்ரைசர்ஸ் அணி.

மயங்க் மார்கண்டே

மயங்க் மார்கண்டே பந்துவீச்சு எடுபடவில்லை. ஷாபாஸ் அஹ்மத்துக்கும் ஒரு ஓவருக்கு மேல் பந்தைக் கொடுக்கவில்லை கம்மின்ஸ். பொறுப்பை தன் தோள்களில் போட்டு அவரே வந்து ரமன்தீப் விக்கெட்டை எடுத்தார். 50 அடித்துவிட்டு சால்ட்டும் நடையை கட்ட, போட்டி மீண்டும் ஹைதராபாத் பக்கம் சாய்ந்தது. ஆனால், ட்விஸ்ட்டே அதன் பிறகுதான். கடந்த சீசன்களில் பெரிதாக பேட்டிங்கில் சோபிக்காத ரஸல், 'இது நான் யார்ன்னு உலகத்துக்குக் காட்டுற நேரம்!' என அடித்து விளாசினார். உண்மையில் இப்போது அவர் நிரூபித்தாக வேண்டும். டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற அது அவருக்கு அவசியம்.

ஒரு பக்கத்தில் ரிங்கு விக்கெட் விழாமல் பார்த்துகொள்ள, ரஸல் தனது வின்டேஜ் ஆட்டத்தில் மிரளவைத்தார். முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 7 ரன்கள் கொடுத்த புவனேஷ்வர் குமார் கடைசி இரண்டு ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்தார். இன்னிங்ஸ் முடிவில் சன்ரைசர்ஸுக்கு இருந்த ஒரே ஆறுதல் நடராஜன் வீசிய இறுதி ஓவர்தான். அதில் வெறும் 8 ரன்களை மட்டுமே அவர் விட்டுக்கொடுத்திருந்தார். அதற்கு முந்தைய 4 ஓவர்களில் 77 ரன்களை விளாசியிருந்தது ரஸல் - ரிங்கு சிங் இணை.
ரஸல்-ரிங்கு சிங்

208 என்ற டார்கெட் பெரிதாகத் தெரிந்தாலும் ஈடன் கார்ட்னஸ் சிக்ஸர் அடிப்பதற்கு ஏதுவான மைதானம் என்பதால் நம்பிக்கையுடன் பாசிட்டிவ்வாக பேட்டிங்கைத் தொடங்கியது சன்ரைசர்ஸ் அணி. தொடக்க வீரரான மயங்க் அகர்வாலும் அபிஷேக் சர்மாவும் 'இப்போது இல்லையென்றால் எப்போதுமே இல்லை' என பவர்ப்ளேயில் முழு அதிரடி காட்டினர். பல பந்துகள் பீல்டர்களை மிக அருகில் தாண்டிச் சென்றன. பவர்ப்ளே முடிவில் 65 ரன்களுக்கு மயங்கின் விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. அதன் பிறகுதான் கொல்கத்தா அவர்களது சுழலில் சன்ரைசர்ஸை கட்டிப்போட ஆரம்பித்தனர்.

சுனில் நரைன்.

ஒரு பக்கத்தில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் மிகச்சிறப்பாக சுனில் நரைன் பந்துவீச, இன்னொரு பக்கத்தில் விக்கெட்கள் வீழ ஆரம்பித்தன. போட்டி மொத்தமாக கொல்கத்தா பக்கம் சாய்ந்தது. தனது நான்கு ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார் சுனில் நரைன்.

க்ளாஸன் களத்திற்கு வந்தார். அவர் முரட்டு ஃபார்மில் இருந்தாலும் அவருடன் துணைநிற்கப்போவது யார் என்பதுதான் கேள்வியாக இருந்தது. 5 ஓவர்களில் 81 ரன்கள் என்ற இமாலய இலக்கு முன்னிருக்க, முக்கியமான அந்த ஓவரை வீச வந்தார் மிட்சல் ஸ்டார்க். மிகச்சிறப்பாக அந்த ஓவரை அவர் வீச, கடைசி நான்கு ஓவர்களில் 75 ரன்கள் தேவைப்பட்டன. அப்துல் சமத் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். அடுத்த ஓவரை வீச வந்தார் ரஸல்.

க்ளாஸன்

ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் என அடித்து அப்துல் சமத் நடையை கட்டினார். மூன்று ஓவர்களில் 60 ரன்கள் அடிக்க வேண்டும். ஓவருக்கு 20 ரன்கள் எல்லாம் வாய்ப்பே இல்லை என நினைத்தாரோ என்னவோ வருணிடம் பந்தைக் கொடுத்தார் கம்மின்ஸ். ஸ்பின் பௌலிங்கை விரும்பும் க்ளாஸன் அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடிக்க, ஷாபாஸ் ஒரு சிக்ஸ் அடித்து சத்தமில்லாமல் அவருக்கு உதவினார். இரண்டு ஓவரில் 39 ரன்கள் அடிக்க வேண்டும்.

19th over

அதுவரை ஸ்டார்க் ஓரளவு நன்றாகவே பந்துவீசியிருந்ததால் எப்படியும் கொல்கத்தாதான் போட்டியை வெல்லும் என்றுதான் அனைவரும் நினைத்திருப்பார்கள். ஆனால், க்ளாஸனும் ஷாபாஸும் அதிரடி காட்ட அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் பறந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும் என நினைத்த ஸ்டார்க்குக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.

கடைசி ஓவரில் வெறும் 13 ரன்கள். பந்துவீச வந்ததோ அனுபவம் இல்லாத ஹர்ஷித் சிங். 'ஸ்டார்க்கையே அடித்துவிட்டார்கள் இந்தப் பையன் என்ன பண்ணப்போகிறான்' என நினைத்தவர்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. முதல் பந்தில் சிக்ஸ் விட்டு கொடுத்திருந்தாலும் மூன்றாவது பந்தில் ஷாபாஸ் விக்கெட்டை வீழ்த்தி மைதானம் முழுவதும் இருந்த கொல்கத்தா ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்தவர், இரண்டு பந்துகளில் க்ளாஸன் விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை. ஆனால், கேப்டன் கம்மின்ஸால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

Harsith Rana's Last over
`எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என ஐபிஎல் மீண்டும் ஒரு த்ரில்லரை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது. அனுபவமிக்க ஸ்டார்க்கால் முடியாததை ஹர்ஷித் ராணா செய்துகாட்டியிருக்கிறார். ஸ்டார்க் ஏலத்தில் வாங்கப்பட்ட விலை 24.75 கோடி ரூபாய். ஹர்ஷித் ராணா வாங்கப்பட்ட விலை வெறும் 20 லட்சம் ரூபாய். இதுதான் டி20 கிரிக்கெட் நிகழ்த்தும் மாயாஜாலம். க்ளாஸன், ரஸல் அதிரடி பேட்டிங், சுனில் நரைனின் அற்புதமான பந்துவீச்சு என முழு விருந்து சாப்பிட்ட திருப்தியில் வீடு திரும்பியிருக்கும் ஈடன் கார்ட்ன்ஸ் ரசிகர்கள் கூட்டம்.


from Vikatan Latest news https://ift.tt/Sh0Oc7m

Post a Comment

0 Comments