``பெண்களை அவமானப்படுத்துகிற கட்சி திமுக; 'சதுரங்க வேட்டை’ படப் பாணியில்..!” - விளாசிய எடப்பாடி

ரக்கோணம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து, சோளிங்கர் பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘ஸ்டாலினை ஒருப் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஸ்டாலினும், உதயநிதியும் தோல்வி பயத்தால் ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். பொய் பேசுவதற்கு ‘நோபல்’ பரிசுக் கொடுக்கலாம் என்றால், ஸ்டாலினுக்குக் கொடுத்தால்தான் பொருத்தமாக இருக்கும். கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஸ்டாலின். அவருக்குப் பிறகு உதயநிதியைக் கொண்டு வருவதற்காக அமைச்சர் இலாகா கொடுத்து... தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்ய அனுப்பியிருக்கிறார். தமிழ்நாடு என்ன, உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா..?. 'சதுரங்க வேட்டை’ படப் பாணியில் மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர் நீங்கள். இந்தத் தேர்தலுடன் மக்களே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

சோளிங்கர் (அரக்கோணம்)

கீழே இருக்கிற சக்கரம் மேலே வருகிறபோது, இதே கதி உங்களுக்கும் ஏற்படும். தில்லு, திராணி, தெம்பு இருந்தால் நான் கேட்கின்ற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். ‘செஞ்சோம்... செஞ்சோம்’ என்கிறீர்களே... அப்படி என்னச் செய்தீர்கள்?. அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறீர்கள். ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். வீட்டைவிட்டு அவரை வெளியே காட்டுவதில்லை. மேடையில் காட்டுவதோடு சரி. மறுபடியும் வீட்டுக்குப் போய்விட்டால், அடுத்த நாள்தான் அவரைப் பார்க்க முடிகிறது. அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகின்ற தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மிகப்பெரிய கோடீஸ்வரர். தமிழ்நாட்டிலேயே விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் அவரும் ஒருவர். அவரைக் கண்ணில்கூட பார்க்க முடியாது. மூன்று முறை இருந்துவிட்டார். போதும். நம்முடைய எளிமையான வேட்பாளரான இளைஞர் ஏ.எல்.விஜயனுக்கு வாய்ப்புக் கொடுங்கள்’’ என்றார்.

இதையடுத்து, வேலூர் அ.தி.மு.க வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டுப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ‘‘வேலூரில் மும்முனைப் போட்டி நடக்கிறது. அதில், முன்னணியில் இருப்பது நம்முடைய வேட்பாளர் பசுபதி தான். இங்கு நம்மை எதிர்த்து போட்டியிடும் ஏ.சி.சண்முகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட காரணத்தினாலேயே இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார். கடந்த தேர்தலின்போது, ‘அ.தி.மு.க-காரர் துரோகம் விளைவித்துவிட்டார்’ என்று அவர் பேசுகிறார். நன்றி மறக்கவேண்டாம். நன்றி மறந்தால் ஆண்டவன் உங்களைச் சும்மா விடமாட்டார். அந்தத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் நீங்கள் நிறுத்தப்பட்டபோது துரதிஷ்டவசமாக தேர்தல் தள்ளிப்போனது. உங்களுக்காகச் சிறப்பாக தேர்தல் பிரசாரம் செய்தோம். உங்களுக்கு நல்ல எண்ணம் இருந்தால்தானே வெற்றி பெற்றிருக்க முடியும். எண்ணம் சுத்தமாக இல்லை. அதனால்தான் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டீர்கள்.

வேலூர்

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் கடந்த முறை நிற்கின்றபோது பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளானார். அவரால்தான் தேர்தலே தள்ளிப்போனது. இந்த முறை வாக்குசேகரிக்கின்றபோது... பெண்களைப் பார்த்து, ‘பவுடர் போட்டீங்களா, லிப்ஸ்டிக் போட்டீங்களா, ஃபேர் அண்ட் லவ்லி போட்டீங்களா... பளீச்னு பளபளப்பாக இருக்கிறீர்கள்’ என்று கிண்டலாகப் பேசுகிறார். இதை கேட்கவா வேட்பாளராக நிற்கிறீர்கள்?. ஏதோ அவர் வீட்டில் இருந்து பணம் கொடுத்த மாதிரி பெண்களை பற்றி கிண்டலும், கேலியுமாக பேசுகிறார். தி.மு.க-வினரின் குணமே அப்படித்தான். இப்படி கிண்டல் அடிப்பவர்களுக்கு தாய்மார்கள் ஓட்டுப்போட வேண்டுமா? என்று எண்ணிப் பாருங்கள். பெண்களை அவமானப்படுத்துகின்ற கட்சி தி.மு.க. பெண்களை தெய்வமாகப் போற்றுகின்ற கட்சி அ.தி.மு.க. மக்கள் விழித்துகொண்டார்கள். இனிமேல் பிழைத்துகொள்வார்கள். விவசாயக் குடும்பத்தில் பிறந்த எங்களின் எளிமையான வேட்பாளர் பசுபதியை எதிர்த்து நிற்கின்ற இரண்டுப்பேருமே பலசாலிகள். செல்வம் படைத்தவர்கள். கோடீஸ்வரர்கள். எனவே, பொதுமக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்’’ என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/VbXoi8n

Post a Comment

0 Comments