மிஸ்டர் மியாவ்

‘சார் ஆபீஸிலருந்து பேசுறோம்’ என சினிமாக்காரர்கள் பலருக்கும் ‘தீ’யாக போன் பறக்கிறதாம். நடிப்பு, பிசினஸ் உள்ளிட்ட பல சிபாரிசுகளை மிரட்டல் தொனியில் கேட்கிறார்களாம். சமீபத்தில் மிரட்டிய ஒருவரை விசாரித்தால், ஆளும் தரப்புக்கு மிக நெருக்கமான மருத்துவராம் அவர். புகார் செய்வதா, வேண்டாமா எனக் குழம்பிக்கிடக்கிறார்கள் திரைப் பிரபலங்கள்!

விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் ஓடிடி உரிமையை, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. ரூ.90 கோடிக்கு விலைபோயிருப்பதாக வெளியே பேசப்படும் தொகை உண்மையா, பரபரப்பா எனத் தெரியவில்லை. ஆனால், சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.80 கோடிக்குக் கைப்பற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விளைவு, ‘விஜய்க்கும் சூர்யாவுக்கும் இடையேயான ஓடிடி பிசினஸ் கிட்டத்தட்ட ஒரே தொகைதானா?’ என்கிற கேள்வி இப்போது பரபரப்பாகியிருக்கிறது.

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் உறுதியாகியிருக்கிறது. மிக நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே குறுந்தகவலாகத் திருமணம் குறித்துப் பகிர்ந்துகொண்ட சித்தார்த், அதிதி ராவிடம் சில உணர்வுபூர்வமான உறுதிமொழிகளைத் தந்தாராம். `படங்களில் நடிக்கத் தடையில்லை. எத்தகைய பாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கலாம். எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்’ என சித்தார்த் சொல்ல, அதிதி நெகிழ்ந்துபோனாராம். இருவரும் இணைந்து நடிக்கிற திட்டமும் இருக்கிறதாம்.

நான்கு வருடங்களாக ஹீரோக்கள் கிடைக்காமல் காத்திருந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை இயக்கிவருகிறார். இதற்கிடையே சல்மான் கானை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் முருகதாஸ் சொன்ன ஒன்லைன் இப்போது ஓகேயாகியிருக்கிறது. அதனால், சிவகார்த்திகேயன் படத்தைச் சீக்கிரமே முடித்துவிட்டு, பாலிவுட்டுக்குக் கிளம்புகிறார் முருகதாஸ். இதுவரையிலான பட்ஜெட்டைத் தவிடு பொடியாக்கும் பிரமாண்டப் படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அறிவிப்பு வெளியாகிவிட்டாலும், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது எவருக்குமே தெரியவில்லையாம். ‘விடாமுயற்சி’ படத்துக்கான ஷூட்டிங்கே இன்னமும் முடியாத நிலையில், நான்கைந்து மாதங்களுக்குப் பிறகே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித்தின் தேதி கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், அவ்வப்போது அஜித்தை வீடு தேடிப்போய்ச் சந்தித்து கதை குறித்து விவாதித்துவருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்துக்காக அஜித்திடம் மொத்தமாக 50 நாள்கள் கேட்கப்பட்டிருக்கிறதாம்.

பிருத்விராஜ், உடலை உருக்கி நடித்த ‘ஆடு ஜீவிதம்’ படம், நிஜத்தின் சாட்சியாக நெஞ்சை உலுக்கியிருக்கிறது. பிருத்விராஜின் நடிப்பை மொத்தத் திரையுலகமும் கொண்டாடித் தீர்க்கிறது. அதேநேரம், ‘அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இல்லை’ என்கிற கருத்தும் பரவலாகிவருகிறது. ‘உண்மைக்கதைகளை இப்படித்தான் எடுக்கணும்’ எனச் சொல்லி விமர்சனங்களைக் கடந்துபோகிறது படக்குழு.



from Vikatan Latest news https://ift.tt/jUtkeVc

Post a Comment

0 Comments