`காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்' என்ற ராகுல் காந்தியின் கருத்து?

ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க

“தோல்வி பயத்தில் பேசுகிறார் அவர். அரை நூற்றாண்டுக் காலம் அதிகாரத்திலிருந்த நேரு குடும்பத்தால், தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமல் இருக்க முடியவில்லை. இனி காங்கிரஸால் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது சோனியா குடும்பத்துக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் ஊழல், குடும்ப அரசியலில் திளைக்கும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, 2004 - 2014-போல ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கின்றனர். தொடர்ந்து இந்தியாவைக் கூறுபோடுகிற வகையிலும், சாதி, மதம், இனம், மொழிரீதியாகப் பிளவுபடுத்தும் வகையிலும் ராகுல் காந்தி பேசிவருகிறார். அதன் ஒரு பகுதிதான் சாதிரீதியாக இந்தியாவைப் பிளப்பது. அதற்காகவே `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்’ என இப்போது திரும்பத் திரும்பப் பேசிவருகிறார். இன்று வடமாநிலங்கள் மிகவும் பின்தங்கியிருப்பதற்கு காங்கிரஸ் அரசே காரணம். இப்போது பா.ஜ.க ஆட்சியில்தான் வடமாநிலங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ராகுல் காந்தியின் உண்மையான நோக்கம், மக்களின் முன்னேற்றம் அல்ல. எப்படியாவது மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி, தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவதுதான். அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. இந்திய மக்கள் மிகவும் பக்குவப்பட்டவர்கள். ராகுல் காந்தியின் பேச்சையெல்லாம் நம்பி வாக்களிக்க மாட்டார்கள். ராகுலின் பேச்சை காங்கிரஸ் கட்சியினரே சீரியஸாக எடுத்துக்கொள்ளாதபோது, நாம் ஏன் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்?”

ஏ.என்.எஸ்.பிரசாத், இனியன் ராபர்ட்

இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்.

“சரியான கருத்து. சாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. சுதந்திர இந்தியாவில், 2011-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தது காங்கிரஸ் அரசு. அந்தக் காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை முடக்கி, அந்த முடிவுகளை வெளியிடவிடாமல் பார்த்துக்கொண்டதும் பா.ஜ.க மட்டுமே. 2014-ம் ஆண்டு பிரசாரத்தில், `காங்கிரஸ் அரசு எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிடுவோம்’ என்று பேசினார் பிரதமர் மோடி. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிடவும் இல்லை. புதிதாக ஒரு கணக்கெடுப்பை எடுக்க முன்வரவும் இல்லை. இந்த பா.ஜ.க அரசின் ஆட்சியில், மத்திய அரசுப் பதவிகள் தொடங்கி, பல்வேறு உயர்நிலை பதவிகளிலும் ஒரு குறிப்பிட்ட உயர்சாதிச் சமூகத்தைச் சேர்ந்த ஆட்கள் மட்டுமே பதவியிலிருக்கிறார்கள். தன்னை ஒரு ஓபிசி என்று சொல்லிக்கொள்கிறார் பிரதமர் மோடி. ஆனால், அந்த ஓபிசி மக்களுக்கு எவ்வித சமூக நீதி திட்டங்களையும் கொண்டுவரவில்லை. நாடு முழுவதும் சாதி, மதங்களின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்துகிறவர்கள் பா.ஜ.க-வினர் என்பது அனைவருக்குமே தெரியும். நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பெரும்பான்மை மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது பெரும் வருத்தம்தான். தமிழ்நாட்டிலுள்ள சமூக நீதியை, காங்கிரஸ் அரசு ஆட்சி வந்ததுமே இந்தியா முழுவதுக்கும் உறுதியாக எடுத்துச்செல்லும்!”



from Vikatan Latest news https://ift.tt/wq6rAOf

Post a Comment

0 Comments