ஒன் பை டூ

பழ.செல்வகுமார்

மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“அண்ணாமலையின் பேச்சு, அதிகார ஆணவத்தின் உச்சம். கிராமப்புற, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைத் தடுப்பதும், கோச்சிங் சென்டர் நடத்துவோரை கொழிக்கச் செய்வதுமே நீட் தேர்வின் நோக்கம். இந்தத் தேர்வால், கனவு தகர்ந்து எத்தனை மாணவர்கள் தங்கள் இன்னுயிரைப் போக்கியிருக்கிறார்கள்... எத்தனை பேர் வேண்டா வெறுப்பாக வேறு படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்... எல்லாம் தெரிந்தும், ‘உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்துசெய்ய மாட்டோம்’ என்று அதிகாரத் திமிரோடு பேச பா.ஜ.க-வினரால் மட்டுமே முடியும். இன்னும் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நீட் தேர்வை பா.ஜ.க ரத்துசெய்யாது என்பதன் வெளிப்பாடுதான் அந்தப் பேச்சு. பாசிச பா.ஜ.க-வின் அடிமையான அண்ணாமலையின் இந்த மக்கள் விரோதப் பேச்சுக்கு ஜனநாயகரீதியில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தூக்கியெறியப்பட வேண்டியது நீட் தேர்வு மட்டுமல்ல, நீட்டைத் திணிக்கும் பா.ஜ.க-வும், அதைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்த அ.தி.மு.க-வும்தான். நீட் தேர்வை ரத்துசெய்ய அனைத்துச் சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்துவருகிறது தி.மு.க. `இந்தியா’ கூட்டணியின் ஆட்சி மத்தியில் அமையத்தான் போகிறது. அடுத்த நாளே, நுழைவுத்தேர்வை விரும்பாத அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.”

நாராயணன் திருப்பதி

மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.

“எங்கள் தலைவர் சொன்னது முழுக்க முழுக்கச் சரியே. நீட் தேர்வுக்கு முன்பாக 2005-2015 பத்து வருடங்களில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 211 பேர் மட்டுமே. ஆனால், எங்கள் ஆட்சியின் அறிவுரையின் பேரில் நீட் தேர்வில் அமல்படுத்தப்பட்ட 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் காரணமாக இதுவரை தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 500-க்கும் அதிகம். முன்பெல்லாம் ஒருசில மாவட்டங்களில் ஒரு மாணவர்கூட சேராத நிலை இருந்தது. ஆனால், தற்போது மாநிலம் முழுவதுமிருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வதைப் பார்க்க முடிகிறது. அதிலும் கோழிப்பண்ணைகள் போலச் செயல்படும் பள்ளிகளிலிருந்து 60 சதவிகிதம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வார்கள். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. தமிழகத்தில் மற்ற மாநில மாணவர்கள் வந்து மருத்துவம் படிப்பதால், இங்கிருக்கும் மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோகும் என்பது தவறான கருத்து. தமிழக மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதுமுள்ள மற்ற மாநில மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் நிலையும் உருவாகியிருக்கிறது. மாணவர்களின் நலன் கருதியே அண்ணாமலை உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்துசெய்ய மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார். அதை மக்கள் சரியாகப் புரிந்துகொள்வார்கள்!”

- துரைராஜ் குணசேகரன்



from Vikatan Latest news https://ift.tt/WNckhwm

Post a Comment

0 Comments