தம்பட்டம் அடித்தது போதும்... முன்னேற்றத்துக்கான நடவடிக்கை எடுங்கள்!

இன்னும் 23 ஆண்டுகளில்... அதாவது, 2047-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 34.7 லட்சம் கோடி டாலராக இருக்கும் என மதிப்பிட்டு தன் கணிப்பை சொல்லியிருக்கிறது டெல்லியில் இருக்கும் தொழில் துறை அமைப்பான பி.ஹெச்.டி சேம்பர் ஆஃப் காமர்ஸ் (PHD Chamber of Commerce).

இந்தக் கணிப்பைப் பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. காரணம், தற்போதைய நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் 3.70 லட்சம் கோடி டாலர் மட்டுமே. இந்த நிலையில் இருந்து அடுத்த 23 ஆண்டு களில் ஏறக்குறைய 10 மடங்கு வளர்ச்சி என்பது மகிழ்ச்சியான விஷயமே! அது மட்டுமல்ல, தற்போது 2600 டாலராக உள்ள நம் நாட்டு மக்களின் தனிநபர் ஆண்டு சராசரி வருமானம், 2047-ல் 21,000 டாலராக உயரும் என்றும் சொல்லியிருக்கிறது.

நமது பொருளாதார வளர்ச்சி பற்றி ஆச்சர்யம் தரும் தகவல்கள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அவை தேர்தல் நேரமாகப் பார்த்து, தனிப்பட்ட அமைப்புகளின் பெயரால் வெளியிடப்படுவது யோசிக்கவும் வைக்கிறது. அப்படியே, நம் நாட்டின் வளர்ச்சி பற்றிய சில விமர்சனக் குரல்களை நோக்கி கவனத்தைத் திரும்பவும் வைக்கிறது.

பொருளாதார நிபுணரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான ரகுராம் ராஜன், நம் நாடு சிறந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வர செய்ய வேண்டிய விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்ன அவர், ‘டெமோகிராபிக் டிவிடெண்ட்’ என்று சொல்லப்படும் இளைஞர் சக்தியை நாம் இன்னும் சரியாகப் பயன்படுத்தவில்லை; சீனா, கொரியா போன்ற நாடுகள் இளைஞர் சக்தியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதால்தான் சிறப்பான வளர்ச்சியைக் கண்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

அதேபோல, இந்திய ரிசர்வ் வங்கியின் மற்றொரு முன்னாள் கவர்னரான சுப்பா ராவ் சொல்லியிருக்கும் விஷயத்தையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ‘‘நாம் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் ஆகி என்ன பயன்? தனிநபர் ஆண்டு சராசரி வருமானத்தில் நாம் 139-வது இடத்தில் அல்லவா இருக்கிறோம்... பிரிக் (BRICS) மற்றும் ஜி-20 (G-20) நாடுகளில் மிக ஏழ்மையாக அல்லவா இருக்கிறோம்...’’ என்று சொல்லியிருப்பது நிச்சயம் சிந்திக்கத் தகுந்த விஷயம்.

நமது பொருளாதார வளர்ச்சி கடந்த காலத்தைவிட இப்போது வேகமாக அதிகரித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த காலத்தில் நாம் மிகப் பெரிய சாதனையைச் செய்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே இருக்காமல், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே உண்மையான தேச பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்!

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/nhIYulp

Post a Comment

0 Comments