கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி. காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் பதவி வகித்துவந்த அனில் ஆண்டனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க-வில் அவருக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். இது அவரது தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே.ஆண்டனிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அனில் ஆண்டனி, "காங்கிரஸ் தலைவர்கள் காலாவதியானவர்கள்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதைத்தொடர்ந்து ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்தபோது, "எனது மகன் அனில் ஆண்டனி தோற்க வேண்டும். நான் காங்கிரஸ், எனது மதம் காங்கிரஸ்" என கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில் அனில் ஆண்டனி யூதாசின் அவதாரம் என காங்கிரஸ் செயல் தலைவரும், யு.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான எம்.எம்.ஹசன் விமர்சித்துள்ளார். எம் எம் ஹசன் செய்தியளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் காலாவதி ஆனவர்கள் என தன் தந்தையை போன்ற தலைவர்களை விமர்சித்து இருக்கிறார் அனில் ஆண்டனி. தந்தையை விமர்சித்ததன்மூலம் பித்ரு நிந்தை செய்துள்ளார்.
அனில் ஆண்டனி யூதாசின் புதிய அவதாரமாக தேர்தல் களத்தில் நிற்கிறார். அவரைபார்த்தால் பரிதாபம்தான் தோன்றுகிறது. அனில் ஆண்டனி வெற்றிபெற வேண்டுமானால் பத்தனம்திட்டாவில் காகம் மல்லாந்து பறந்தால்தான் அது நடக்கும். அனில் ஆண்டனி செலுத்தி உள்ள டெபாசிட் தொகை கூட அவருக்கு கிடைக்காது" என்றார். காங்கிரஸின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய உள்த்துறை அமைச்சர் என முக்கிய பதவிகளை அலங்கரித்த ஏ.கே.ஆண்டனியின் மகனை யூதாசின் அவதாரம் என விமர்சித்திருப்பது அரசியலில் அதிர்வலையை கிளப்பி உள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/eF8iuhm
0 Comments