MI v CSK : `தோனியின் சிக்சர்களும் பதிரனாவின் விக்கெட்டுகளும்!' - மும்பையை புரட்டியெடுத்த சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டிகள் ஏன் எல் க்ளாசிக்கோ என அழைக்கப்படுகின்றன என்பதற்கான மற்றுமொரு உதாரணமாக மாறியிருக்கிறது இந்தப் போட்டி. இரு அணிகளுமே தங்களின் வழக்கத்தை மீறிய உத்வேகத்துடன் ஆடிய இந்தப் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
CSK v MI

வான்கடே பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். பெங்களூருவுக்கு எதிரான கடந்த போட்டியில் 190+ டார்கெட்டை மும்பை அணி எவ்வளவு வேகமாக எட்டிப்பிடித்தது என்பதை சில நாட்களுக்கு முன்பாகத்தான் பார்த்தோம். ஆக, டாஸிம் போதே மனம் ஒரு ஹை ஸ்கோரிங் கேமுக்கு தயாரிகிவிட்டது. டாஸை வென்றது ஹர்திக் பாண்ட்யா. சேஸிங்கை தேர்வு செய்தார். சென்னை அணி பேட்டிங்.

ப்ளேயிங் லெவனையே மாற்ற தயங்கும் சென்னை அணி இந்தப் போட்டியில் ரிஸ்க் எடுத்து பேட்டிங் ஆர்டரையே மாற்றியிருந்தது. கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் நம்பர் 3 இல் வர ரஹானே ஓப்பனராக வந்தார். வான்கடே ரஹானேவின் சொந்த மைதானம் என்பதாலும் அவரால் ருத்துராஜை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியும் என்பதாலும் சென்னை அணி இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்த முடிவு எந்த பலனையும் கொடுக்கவில்லை.

Rutu

ரஹானே சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகினார். ரச்சின் ரவீந்திராவும் பெரிதாக அடிக்கவில்லை. 21 ரன்களில் ஸ்ரேயாஸ் கோபாலின் பந்தில் அவுட் ஆகினார். ருத்துராஜ் கெய்க்வாட்டும் சிவம் துபேவும்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 90 ரன்களை அடித்திருந்தனர். தனித்தனியாக இருவருமே அரைசதத்தை கடந்திருந்தனர். முதல் 10 ஓவர்கள் முடிகையில் சென்னை அணியின் ஸ்கோர் 80 ஐ சுற்றியே இருந்தது. இதன்பிறகு இருவருமே வேகமெடுத்தனர். ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வர வேண்டும் என்பதற்காக சிரத்தை எடுத்து ஆடினர். ஒரு பவுண்டரி சிக்சரை எப்படியாவது சிரமப்பட்டு அடித்து மற்ற பந்துகளில் உதிரியாக ரன்களை சேர்த்தனர்.

பும்ராவின் 4 ஓவர்களையுமே சேதாரமில்லாமல் கடத்திவிட்டனர். ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய ஒரு ஓவரில் 22 ரன்கள் வந்திருந்தது. சிவம் துபே சிக்சரும் பவுண்டரியுமாக வெளுத்தெடுத்திருந்தார். சென்னை அவி எதிர்பார்த்த பெரிய ஓவராக இது அமைந்தது. இருவருமே நன்றாக ஆடியிருந்தாலும் அணியின் ஸ்கோர் அந்த 200 ஐ தொடுமா என்பது சந்தேகமாகவே இருந்தது. ருத்துராஜ் அவுட் ஆன பிறகு டேரில் மிட்செல் உள்ளே வந்து உருட்டு உருட்டென உருட்டிவிட்டார்.

Dhoni
ஆனாலும் சென்னை அணி 200 ரன்களை கடந்திருந்தது. காரணம், தோனி. கடைசி ஓவரில் மாஸாக எண்ட்ரி கொடுத்தவர் மும்பை அணியை சோதித்தெடுத்தார். எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலுமே சிக்சரை பறக்கவிட்டார். ஹர்திக் பாண்ட்யா மட்டுமல்ல ஒட்டுமொத்த மும்பை அணியுமே மிரண்டு போனது. 200 ரன்களை கடந்ததோடு தோனி கொடுத்த உற்சாகத்திலும் ஆர்ப்பரிப்பிலும் பயங்கர பாசிட்டிவ்வாக இன்னிங்ஸை முடித்தது சென்னை அணி.
Pathirana

மும்பைக்கு டார்கெட் 207. மும்பை அணி தொடக்கத்திலிருந்தே பரபரவென ஆடியது. ஓவருக்கு 10 ரன்களுக்கு மேலாகவே கொண்டு சென்று கொண்டிருந்தனர். ரோஹித்தும் இஷன் கிஷனும் சிறப்பாக ஆடியிருந்தனர். 7 ஓவர்களில் 70 ரன்களை சேர்த்து சேஸிங்கை ஈசியாக்கினர். இந்த சமயத்தில்தான் ட்விஸ்ட் நிகழ்ந்தது. பதிரானா கைக்கு பந்து சென்றது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள். இஷன் கிஷனும் காலி. சூர்யாகுமார் யாதவ்வும் காலி. இதன்பிறகு சென்னை அணி மெது மெதுவாக ஆட்டத்திற்குள் வந்தது. ஆனாலும் மும்பை பயம் காட்டிக் கொண்டே இருந்தது. ரோஹித் ஒரு முனையில் அப்படியே நின்று ஆடிக்கொண்டிருந்தார். திலக் வர்மா வேகமெடுத்துக் கொண்டிருந்தார். ஆட்டத்தில் இரு அணிகளின் கையும் இருந்தது.

இந்த சமயத்தில்தான் 14 வது ஓவரில் பதிரனா மீண்டும் வந்தார். திலக் வர்மாவின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். மீண்டும் ஒரு திருப்புமுனை. ஷர்துல் தாகூர் வீசிய 15 வது ஓவர் ரொம்பவே முக்கியமானது. ரோஹித் சர்மா, ஹர்திக் என இருவரையும் க்ரீஸூக்குள் வைத்துக் கொண்டு இரண்டே இரண்டு ரன்களை மட்டுமே கொடுத்தார்.
CSK

ரன்ரேட் அழுத்தத்தில் துஷார் தேஷ்பாண்டே வீசிய அடுத்த ஓவரில் ஹர்திக் வீழ்ந்தார். விக்கெட்டோடு அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே வந்தது. ஆட்டம் அப்படியே சென்னை பக்கமாக திரும்பியது. அடுத்தடுத்த ஓவர்களில் டிம் டேவிட்டும் ஷெப்பர்ட்டுமே அழுத்தத்தில் சரியாக பந்தை கனெக்ட் செய்ய முடியாமல் அவுட் ஆகினர். ஷெப்பர்ட்டின் விக்கெட்டை பதிரனா வீழ்த்தியிருந்தார். மொத்தமாக 4 விக்கெட்டுகள். 4 விக்கெட்டுகளுமே முக்கியமான விக்கெட்டுகள். பதிரானா தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பௌலர் என்கிற நிலையிலிருந்து மேட்ச் வின்னர் என்கிற நிலைக்கு இந்த ஆட்டத்தின் மூலம் உயர்ந்திருக்கிறார். ரோஹித் சர்மா மட்டும் கடைசி வரை நின்று சதத்தை கடந்தார். ஆனாலும் மும்பையால் வெல்ல முடியவில்லை. 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நடப்பு சீசனில் வெளியூரில் நடக்கும் போட்டிகளில் சென்னை அணி பெறும் முதல் வெற்றி இது.

தோனி அடித்த அந்த 3 சிக்சர்களும் பதிரனா வீழ்த்திய அந்த 4 விக்கெட்டுகளும்தான் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக இருந்தது. தோனியின் சிக்சர்களை கழித்துவிட்டு பார்த்தால் மும்பை இந்தப் போட்டியை சௌகரியமாக வென்றிருக்கும். அதேமாதிரிதான் பதிரனாவின் ஸ்பெல்லும். மும்பை அணியின் பிக் ஹிட்டர்களையெல்லாம் குறிவைத்து வீழ்த்திக் கொடுத்தார். சென்னைக்கு இது ஒரு சிறப்பான ஆட்டம். சிறப்பான வெற்றி.



from Vikatan Latest news https://ift.tt/XCwfoqE

Post a Comment

0 Comments