`கொலைகாரிக்கா சோறாக்கி போட்டு, வேர்க்கக் கூடாதுன்னு விசிறினேன்?'- மகனைக் கொன்ற மருமகள்; கதறும் தாய்!

"ஓட்டுப்போடறதுக்காக ரெண்டு வருசத்துக்குப் பெறகு ஊருக்கு வந்தவளுக்கு சுடச்சுட சோறாக்கி போட்டு, வேர்க்க கூடாதுன்னு பக்கத்துல உக்காந்து வீசிக்கிட்டிருந்தேன், அப்பக்கூட என் மவனை கொன்னது இவதான்னு எனக்கு தெரியலயே..." என்று வெடித்து அழுகிறார் கொலைசெய்யப்பட்ட ஸ்ரீகாந்தின் தாயார் காளிமுத்து.

ஸ்ரீகாந்த்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவி கொலைசெய்த மனைவி உள்ளிட்ட கொலையாளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பின் போலீஸாரிடம் சிக்கிய சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய திருவாடானை  காவல்துறையினர், ``கொடுங்குளம் நரசிங்கம்-காளிமுத்து தம்பதியின் மகன் ஶ்ரீகாந்த்,  சில ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆண்டிகாடு கிராமத்தில் ஆடு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தபோது அந்த ஊரைச் சேர்ந்த கணவனை இழந்த ஆர்த்தியை காதலித்துள்ளார். தன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து அங்கு சில காலம் வாழ்ந்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன்  கொடுங்குளத்திற்கு வந்து செட்டிலாகியுள்ளார். ஆடு விற்கும் தொழிலில் பெரிய வருமானம் கிடைக்காததால் தையல் தொழிலில் ஈடுபட்ட ஶ்ரீகாந்த், ஆர்த்தியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இதில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. இதனால் இளையராஜா அடிக்கடி ஶ்ரீகாந்தின் வீட்டிற்கு வந்து போய்க்கொண்டிருந்தபோது, ஆர்த்திக்கும் அவருக்கும் இடையே நட்பு  ஏற்பட்டு பின்னர் தகாத உறவாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் இதை உணராத ஸ்ரீகாந்த், பின்பு அவர்களின் நெருக்கத்தை கண்டு அதிர்ச்சியாகி ஆர்த்தியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இனி வீட்டுக்கு வரக் கூடாது என்று இளையராஜாவையும் ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளார்.

இளையராஜா-அஜீத்-ஆர்த்தி

ஸ்ரீகாந்திடம் லட்சக்கணக்கில் வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதாலும், ஆர்த்தியுடனான உறவுக்கு இடையூராக இருப்பதாலும் ஶ்ரீகாந்தை கொலை செய்ய திட்டமிட்டு, அதை ஆர்த்தியிடம் இளையராஜா தெரிவிக்க... அவரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்காக முப்பையூரைச் சேர்ந்த அஜீத், சிவகங்கையை சேர்ந்த ஆசை, சமயத்துரை ஆகியோரை கூலிக்கு ஏற்பாடு செய்த இளையராஜா, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்கள் மூலம் மாடு விற்பதாகக் கூறி ஶ்ரீகாந்தை காரில் அழைத்துச் செல்ல வைத்துள்ளார்.

தேவகோட்டை அருகிலுள்ள
கண்மாய்க்கரைப் பகுதியில் அமர்ந்து ஸ்ரீகாந்துடன் கூலிப்படையினர் மது குடித்துள்ளனர். அந்த நேரம் அங்கு வந்த இளையராஜாவுடன் சேர்ந்து ஸ்ரீகாந்தை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்து, அப்பகுதியிலேயே குழி தோண்டி புதைத்துள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகன் எங்கோ கோவித்துக்கொண்டு போய்விட்டான் என்று ஸ்ரீகாந்தின் பெற்றோர் நினைத்துக்கொண்டிருக்க, சில நாள்கள் மட்டும் அவர்களுடன் வசித்த ஆர்த்தி, தன் குழந்தைகளுடன்  ஆண்டிகாட்டிற்கு சென்று விட்டார்.

குற்றவாளிகளிடம் போலீஸ் விசாரணை

சமீபத்தில் ஓட்டுப்போட ஆர்த்தி கொடுங்குளம் வந்துள்ளார். 
இந்த நிலையில்தான் திருவாடானை டி.எஸ்.பி-க்கு, 'ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார், அவர் மனைவி நடவடிக்கையில் சந்தேகம் உள்ளது விசாரியுங்கள்' என்று யாரோ தகவல் கொடுத்துள்ளனர். டி.எஸ்.பி நிரேஷ் இத்கவலை உதாசீனப்படுத்தாமல், யாரும்  புகார் கொடுக்காத நிலையில் ஆர்த்தியை க்ளோசாக வாட்ச் செய்ய டீம் அமைத்துள்ளார். ஆர்த்தியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே அவரை ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரித்ததும் உண்மையை ஒப்புக்கொண்டார். அதன் பின்பு இளையராஜாவையும், அஜீத் என்பவரையும் கைது செய்து, சித்தானூர் கண்மாய்க்கரைக்கு அழைத்துச் சென்று புதைக்கப்பட்டிருந்த எலும்புகள் மட்டுமிருந்த ஸ்ரீகாந்தின் உடலை மீட்கப்பட்டது" என்றார்கள்.

 ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்ட பின்பு சில நாள்கள் மட்டும்தான் இளையராஜாவுடன் உறவைத் தொடர்ந்த ஆர்த்தி, பின்பு அவருடன் சண்டை போட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றவர், பின்பு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு திருச்சியில் குடும்பம் நடத்தியுள்ளார்.  

மகனை இழந்து இரண்டு பேரன்களோடு அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஸ்ரீகாந்தின் தாய் காளிமுத்துவுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ``மகன் காணாமல் போனபின்பு ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை?" என்று கேட்டோம், "பொண்டாட்டி நடத்தை பிடிக்காமல் மனம் வெறுத்து எங்கோ போய்விட்டான், ஒருநாள் திரும்ப வருவான்னு நெனைச்சு இருந்தோம். ஏன்னா, எங்க உறவுக்காரர் ஒருத்தர் இதுபோல கோவித்துக்கொண்டு போய் 15 வருசம் கழிச்சு திரும்பி வந்தார். அந்த நம்பிக்கையில நாங்க போலீசுக்கு போகல. ஆனா, இப்படி நடந்துருக்குன்னு முன்பே தெரிஞ்சிருந்தா புகார் கொடுத்திருப்போம். என் மகன், கல்யாணமாகி புருஷன இறந்தவளை கட்டிக்கப் போறேன்னு சொன்னப்ப நாங்க ஒத்துக்கல, ஆனால், அதையும் மீறி அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் ஏத்துக்கிட்டோம். சம்பாதிப்பதில் திறமையானவன். டெய்லர் கடை வச்சிருந்தான், வீடு கட்ட பொருள் விப்பான், ஆடு, மாடு வியாபாரம் செய்வான். அவன் பொண்டாட்டி புள்ளைகளை செல்லமாத் தாங்கினான். அவன் நண்பன் இளையராஜா இவன்கிட்டே பல லட்சம் ரூபாவை கடனா வாங்கிட்டான். அப்படியிருந்தும் அவனும், இவன் பொண்டாட்டியும் ஸ்ரீகாந்துக்கு துரோகம் பண்ணிட்டாங்க. 

ஸ்ரீகாந்தின் தாயார் காளிமுத்து

அதோடதான் மனம் வெறுத்துபோய் ஊரைவிட்டு போயிட்டான்னு நெனைச்சோம். ஆனா, நைசா பேசி கழுத்தறுத்து கொன்னு புதைப்பாங்கன்னு நெனைக்கல. சரி அவன் காணாமல் போயிட்டதால் இவளும் அவ ஊருக்கு போயிட்டாள்னு இருந்தோம். ஓட்டுப்போடறதுக்கு ரெண்டு வருசத்துக்குப் பெறகு ஊருக்கு வந்தவளுக்கு சுடச்சுட சோறாக்கி போட்டேன். அவ வேர்க்க கூடாதுன்னு பக்கத்துல உக்காந்து வீசிக்கிட்டிருந்தேன், அவ வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு கவலைப்பட்டேன், அப்பக்கூட என் மவனை கொன்னது இவதான்னு எனக்கு தெரியலயே.. ஒரு வார்த்தைக்கூட அதைப்பத்தி அவ பேசலையே, வயசான காலத்துல இந்த ரெண்டு புள்ளைகளையும் நான் வளர்க்கணுமே, என்ன செய்வேன்" என்றார்.

திருவாடனை டி.எஸ்.பி நிரேஷிடம் பேசினோம், "யாரும் புகார் தராத நிலையிலும், கொலை நடந்தது சிவகங்கை மாவட்டதில் என்ற சூழலிலும், கொலை செய்யப்பட்டவரை  இங்கிருந்துதான் கூட்டி சென்றுள்ளார்கள் என்ற அடிப்படையில் இந்த வழக்கை எடுத்துக்கொண்டோம். எங்களுக்கு கிடைத்த தகவலை அந்த ஊரில் விசாரித்து உறுதி செய்தோம். அதன் பின்பு கார் டிரைவரிடம் விசாரித்து, அதன் பின்பு ஆர்த்தியின் நடவடிக்கைகளை ஃபாலோ செய்து குற்றவாளிகளை பிடித்தோம், ஆனால், உடல் புதைத்த இடத்தை கண்டுபிடிக்க ரொம்ப நேரம் எடுத்தது, உடலை மீட்டால்தான் குற்றம் உறுதியாகும் என்ற கவலை இருந்தது, கடைசியில் புதைக்கப்பட்ட உடலை மீட்டோம். யாரும் புகார் தரவில்லை என்று இந்த தகவலை அப்படியே கடந்திருந்தால், கொலைகாரர்களுக்கு அது மேலும் குற்றங்கள் செய்ய வாய்ப்பாக மாறிவிடும், அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வளவு முயற்சி எடுத்தோம்" என்றார்.

போலீஸ் விசாரணை

முறை தவறிய தகாத உறவு எந்தளவுக்கு செல்லும் என்பதற்கு கொடுங்குளத்தில் நடந்த இந்த சம்பவமே உதாரணம்!



from Vikatan Latest news https://ift.tt/FMXu79W

Post a Comment

0 Comments