கோடைக் காலத்தின் (Summer) வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வெளியே வெயிலில் அதிகம் இருக்க வேண்டாம் எனவும், அதிகளவு தண்ணீர் பருகும் படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் உயிரினங்களும் கொளுத்தும் வெயிலால் பாதிப்புக்குள்ளாகின்றன.
தெருநாய்கள், பூனைகள் நிழல் தேடி காருக்கு அடியிலும் பெரிய வாகனத்திற்கு அடியிலும் பதுங்கும். இதனால் வண்டியை எடுக்கும்போது பார்த்து எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நீர் தேடிப் பல உயிரினங்கள் மனித வசிப்பிடங்களுக்கு வரும். அதனால் மொட்டை மாடியில் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கலாம்.
இதைத் தாண்டி அதிக வெப்பத்தினால் நிலத்திலுள்ள பாம்புகள், எலி மற்றும் ஊரும் உயிரினங்களும் மனித வசிப்பிடங்களுக்குள் நுழைவதற்கு வாய்ப்புண்டு. ஆங்காங்கே வசிப்பிடங்களுக்குள் பாம்புகள் நுழைந்த செய்தியையும் சமீபத்தில் காண முடிகிறது.
இப்படி பாம்புகள் வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு வனத்துறை அதிகாரி கூறுகையில், ``தரைதள கட்டடத்தில் தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்கள், நீண்ட நேரம் ஜன்னல்களையோ, கதவுகளையோ திறந்து வைக்க வேண்டாம்.
பொதுவாக மாலை நேரங்களில் விஷ பூச்சிகள் மற்றும் உயிரினங்கள் வீட்டிற்குள் வரும் என்பதால் மாலை நேரங்களில் வீட்டின் கதவுகளை அதிக நேரம் திறந்து வைக்க வேண்டாம்.
தரையில் படுப்பவர்கள் தூங்குவதற்கு முன்பு பாயை உதறிச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு கட்டிலில் படுப்பவர்கள் போர்வைகளையும், கட்டிலுக்கு அடியிலும் சரிபார்க்க வேண்டும்.
சிலர் காற்றோட்டமாக வீட்டிற்கு வெளியிலோ அல்லது மொட்டைமாடியிலயோ படுக்கலாம். இரவு நேரங்களில் படுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மரத்தின் அடியில் வாகனங்களை நிறுத்தி வைத்தால், வாகனங்களை எடுப்பதற்கு முன்பு, அதில் ஏதாவது உயிரினங்கள் புகுந்துள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை பாம்பு வீட்டிற்குள் புகுந்துவிட்டால், உடனடியாக அதைக் கொன்று விட வேண்டும் எனப் பதற்றப்படாமல், வனத்துறைக்கு விவரத்தைச் சொல்லி அழைக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
from Vikatan Latest news https://ift.tt/L27quXB
0 Comments