‘இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சம பங்குதாரர்…’ மாணவரணித் தலைவரிலிருந்து தொடங்கி, நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர்வரை தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலும் தடம் பதித்த ‘டாஸ்க் மாஸ்டர்! நான்கு முறை மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தவர், அறுபது ஆண்டுகாலமாக தேசிய அரசியலிலும் தவிர்க்க முடியாத பெயர்! இன்று, எதிர்க்கட்சிகளை ஓரணியாகத் திரட்டியிருக்கும் ‘இந்தியா’ கூட்டணிக்கு விதை போட்ட முன்னோடியும் இவரே!
இந்தியாவின் பெரும்பாலான அரசியல் ஆளுமைகளைப் போலவே காங்கிரஸ் கட்சியிலிருந்து தன் பொதுவாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர் பவார். 1977-ல் அதே கட்சிக்கு எதிராக கலகம் செய்து, கட்சியை உடைத்து, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்த பவார் 22 ஆண்டுகள் கழித்து தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார். எந்தச் சூழ்நிலையில் அந்தக் கட்சி உருவானது. அதன் மூலம் மகாராஷ்டிர அரசியலில் சரத் பவார் சாதித்தது என்ன… சறுக்கியது எங்கே… தேசியவாத காங்கிரஸின் அரசியல் வரலாறு என்ன… விரிவாகப் பார்க்கலாம்!
1975-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி மாலை ஐந்தரை மணிக்கு, குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. உடன் மேற்குவங்க முதலமைச்சரும் முன்னாள் கல்வி மந்திரியுமான சித்தார்த்த சங்கர் ராயும் சென்ற நிலையில், இருவரையும் வரவேற்று அமரச் செய்தார் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி. ‘அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நாடு முழுக்க ‘எமெர்ஜென்சி’யை அமல்படுத்த வேண்டும்’ என்பது பிரதமர் இந்திராவின் கோரிக்கை. ராய் அதற்கான சட்ட நுணுக்கங்களை விவரிக்கிறார். சுமார் இரண்டு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரிடம் நாடு முழுக்க எமெர்ஜென்சியை அறிவிக்கக் கோரும் கடிதம் பிரதமரின் இல்லத்தில் தயாராகிறது. கேள்விகள், குழப்பங்கள், விளக்கங்கள், முடிவுகள் என அந்த நாளின் நள்ளிரவு வரை பரபரக்கிறது பிரதமர் இந்திராவின் இல்லம்!
மறுநாள் காலை ஐந்து மணிக்கே அமைச்சரவைக் கூட்டம். அதற்கு முன்பே கைது நடவடிக்கைகள் பரபரக்கின்றன. முதல் குறி ஜெயபிரகாஷ் நாராயணுக்கு… அடுத்தவர் மொரார்ஜி. கைதுப் பட்டியலை அவ்வப்போது டிக் அடித்துக்கொண்டே வந்தார் சஞ்சய் காந்தி. அமைச்சரவைக் கூடும் முன்பாக இந்த விஷயங்கள் வெளியில் செய்தித்தாள்களில் கசிந்துவிடக் கூடாதென பத்திரிகை அலுவலகங்களின் மின் இணைப்புகளைத் துண்டிக்கச் சொல்லி ரகசிய உத்தரவும் போடப்பட்டிருந்தது. நீதிமன்றங்கள் மூடப்பட்டன. அமைச்சரவைக் கூட்டத்தில், எந்தவித எதிர்ப்புக் குரலும் வெளிப்படவில்லை. இறுதியாக ஜூன் 26-ம் தேதி ‘வானொலி அறிவிப்பின் மூலமாக நாடு முழுவதும் ‘எமெர்ஜென்சி’ நடைமுறைப்படுத்தப்பட்டது!
1975-க்கு முன்பாக சீனாவுடனான போரின் போதும் (1962) பாகிஸ்தான் போரின் போதும் (1971) இந்தியாவில் எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டதுண்டு. ஆனால், இந்த முறை ‘உள்நாட்டுக் குழப்பங்கள்’ எனும் பேரால், சுயநல, அரசியல் காரணங்களால் அறிவிக்கப்பட்ட ‘எமெர்ஜென்ஸி’ திட்டமிடப்பட்ட ஒன்று! 635 நாள்கள்… நாட்டு மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. 34,630 மிசா கைதுகள், 72,000-க்கும் மேற்பட்டோருக்குச் சிறைத் தண்டனை என கடுமையான காலகட்டமாக அமைந்த ‘ எமெர்ஜென்ஸி’ வாபஸ் பெறப்பட்டபோது, மக்கள் மன்றத்தில் தன் செயலுக்கான பலனை அனுபவித்தார் இந்திரா.
1977 மார்ச் 21 அன்று எமெர்ஜென்சி வாபஸ் பெறப்பட்ட அதேநாளிலேயே நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவுப்பும் வெளியானது. உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் களமிறங்கிய இந்திரா தோற்கடிக்கப்பட்டார். அவரை 55,202 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் சாட்சாத் ஜெயபிரகாஷ் நாராயண்தான். அந்தத் தேர்தலில், உத்தர பிரதேசத்தின் 85 இடங்களையும் இழந்தது காங்கிரஸ். மேற்கு வங்கத்தில் மூன்று, பீகார், ராஜஸ்தானில் தலா ஒன்று, இமாச்சலில் பூஜ்ஜியம் என இந்திரா எதிர்ப்பலை பல மாநிலங்களிலும் எதிரொலித்தது.
1971-ம் ஆண்டு 352 எம்.பி-க்களுடன் மத்தியில் ஆட்சியமைத்த இந்திரா, 1977-ல் 154 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தார். காங்கிரஸ் கட்சியின் இந்தப் படுதோல்விக்குக் இந்திராவும் அவர் கொண்டுவந்த எமெர்ஜென்ஸியுமே காரணம் குற்றச்சாட்டுடன் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் கட்சி உடைபட்டது.
அப்போது இந்திராவை எதிர்த்துக் கலகம் செய்த முக்கிய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவர் சரத் பவார்!
மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் தாலுகாவில் அமைந்திருக்கும் நந்த்வால் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கோவிந்த்ராவ் பவார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களால் நிரம்பிய இந்தக் கிராமத்தின்மீது ஆங்கிலேய அரசு கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அதோடு 1920களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக கோவிந்தராவ், புனேவிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாராமதி கிராமத்துக்கு இடம்பெயர்ந்தார்.
பாராமதிக்கு வந்துசேர்ந்த கோவிந்தராவுக்கு கூட்டுறவு கொள்முதல் சங்கத்தில் வேலை கிடைத்தது. அரசியல் ஈடுபாடுகளின் காரணமாக பாராமதி விவசாயிகள் சங்கத்திலும், ஒருங்கிணைந்த மகாராஷ்டிரா போராட்டத்திலும் பங்கேற்றார். நாளடைவில் வறட்சி மிகுந்த பாராமதி தாலுகாவின் முக்கியஸ்தராக உருமாறினார் கோவிந்தராவ்.
இந்தச் சூழலில் செழிப்புமிக்க கோலாப்பூரின் போஸ்லே குடும்பத்தில் பிறந்து, ஏழாம் வகுப்புவரை படித்திருந்த சாரதாவுக்கும் கோவிந்தராவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. கோவிந்தராவைத் திருமணம் செய்துகொண்டு பாராமதியில் குடிப்புகுந்தார் சாரதா. அங்கு, ‘மகாராஷ்டிரா டைம்ஸ்’ நாளேடு வாசிக்குமளவுக்கு ‘அதிகம் படித்த’ பெண்ணாக சாரதா மட்டுமே இருந்தார்.
1932-ல் புனே மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. முதன்முதலாக ஒரு பெண் அந்தத் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அது சாரதாவேதான். இயல்பிலேயே அவருக்கு இருந்த தலைமைப் பண்பும் எதற்கும் துணிந்த குணமும் அவரைத் தொடர் வெற்றிகளுக்கு இட்டுச் சென்றது. அடுத்த இருபது ஆண்டுகள் பாராமதியின் உள்ளாட்சி வளர்ச்சியில் முக்கியப் பங்குவகித்தார் சாரதாபாய்.
ஒருபுறம் அப்பா கோவிந்தராவ் மறுபுறம் அம்மா சாரதாபாய் என அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த 11 குழந்தைகளில் எட்டாவது மகனாகப் பிறந்தவர்தான் சரத் சந்திர கோவிந்தராவ் பவார்!
அம்மா காங்கிரஸ்காரர், அப்பா விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர், அண்ணன்கள் வழக்கறிஞர், கூட்டுறவுச் சங்க நிர்வாகி, தொழிலாளர் கட்சிப் பிரமுகர் என வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தபோது… சரத்பவார் தனது அம்மாவின் வழியைத் தேர்ந்தெடுத்தார்.
16 வயது பள்ளி மாணவராக இருந்தபோது, கோவா விடுதலைப் பேரணியில் பங்கேற்ற பவார், கல்லூரி படிக்கும் காலத்தில் புனே இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராகிவிட்டார். கல்லூரி கபடி அணியின் கேப்டனாகவும் இருந்த நிலையில், ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க அன்றைய மகாராஷ்டிர மாநில முதல்வர் யஸ்வந்த்ராவ் சவானை, சரத்பவார் சந்தித்த நாள் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாகவே மாறிவிட்டது.
பவாரின் துறுதுறுப்பும் செயல்திறனும் யஸ்வந்த்ராவ் சவானை ரொம்பவே ஈர்த்து விட்டது. விளைவு, 22 வயது இளைஞனான சரத் பவாருக்கு இளைஞர் காங்கிரஸின் புனே மாவட்டத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. கூடவே, கட்சியின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் எழுத்துச் சென்று, உள்ளூரில் இளைஞர் காங்கிரஸின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமென்ற டாஸ்க்கும் அவருக்கு வழங்கப்பட்டது.
சொன்னதைத் திறம்படச் செய்து முடித்தார் பவார். அவரது வேகம் விவேகம் இரண்டுமே சவானை ஆச்சர்யப்படுத்தியது. பதிலுக்கு, 35 வயதில் கிடைக்க வேண்டிய மாநிலப் பொறுப்பை 24 வயதில் சரத்பவாருக்கு அளித்தார் சவான்.
அடுத்தக்கட்டமாக மகாராஷ்டிராவின் மூலை முடுக்குகளெல்லாம் மேடை பிரசாரம், தொகுதிவாரியாக முன்னணிகளை உருவாக்குவது, தொண்டர் குழுவின் பயிற்சிக்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கி அதை நிர்வகிப்பது என்று அதிரடி காட்டினார் பவார். அந்த இதழுக்கு ‘நவயுவக்’ என்று பெயரிடப்பட்டது. விரைவிலேயே அது மேல்மட்ட காங்கிரஸ் தலைவர்களின் மேசைகளைச் சென்றடைந்தது.
அப்போது உலக நாடுகள் சர்வதேச அளவிலான இளையோர் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துகொண்டிருந்தன. இந்திய அளவில் காங்கிரஸ் தனது இளைஞரணி நிர்வாகிகளை அதில் பங்கேற்கச் செய்தது. மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பில் சரத் பவாரின் பெயரைப் பரிந்துரைத்தார் முதல்வர் யஸ்வந்த் சவான்.
ஒருபக்கம் கல்லூரித் தேர்வு, மறுபுறம் ஜப்பான் நாட்டின் பிரதமர் தலைமையில் உலக இளைஞர் பேரவையில் பங்கேற்கும் வாய்ப்பு… சரத் பவார் இரண்டாவதைத் தேர்வு செய்தார். அந்த அனுபவம் அவரை கனடாவுக்கும், அமெரிக்கா, எகிப்து, டென்மார்க் என சர்வதேச நாடுகளின் தலைவர்களிடையேயான தொடர்பையும், வளர்ந்துவரும் நவீன வேளாண்மை, தொழில்நுட்பம் குறித்த அனுபவங்களையும் பெற வாய்ப்பளித்தது. இந்தச் சூழலில் 1967-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது, டென்மார்க்கிலிருந்த பவாருக்கு பாராமதி தொகுதியில் சீட் ஒதுக்கப்பட்டது.
முதல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோதே பவாருக்குப் பல தடைகள் இருந்தன. கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகளை மீறி, பவாரைத் தேர்தல் களத்துக்குள் இழுத்துச் சென்றவர் சவான்தான். 27 வயதில் தனது முதல் தேர்தலைச் சந்தித்த பவார், யாரும் எதிர்பாராதவகையில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்தார். வெற்றி மட்டுமல்ல… முதல் நாளிலிருந்தே தொகுதியில் களமிறங்கு வேலைசெய்யவும் தொடங்கிவிட்டார். அதாவது, அடுத்துவந்த கால் நூற்றாண்டு காலம் பாராமதி என்றால் அது சரத் பவார் தொகுதி என்று கருதும் நிலையை உருவாக்கிவிட்டார்.
எம்.எல்.ஏ ஆனதும் தனது தொகுதியை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்த ஆய்வில் இறங்கினார். பாராமதியிலுள்ள முக்கிய கிராமங்கள் அனைத்தும் பாசன வாய்க்கால் மூலம் நீராதாரம் பெற்றுவந்த நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் வறட்சி தலைவிரித்தாடியது. நீரைச் சேமிக்கும் குளங்கள் வெட்டுவது, பழைய நீர்நிலைகளைத் தூர்வாருவது, மாற்று நீர்மேலாண்மை திட்டங்களை நடைமுறைப் படுத்துவது எனச் செயலில் இறங்கினார் பவார். இவை அனைத்தும் மக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற சம்பவங்கள்!
‘அரசிடம் நிதி இல்லை’ என்ற நிலையில், ‘நம் வாழ்வின் சிற்பிகள் நாம்தான்!’ என்று மக்களிடம் பிரசாரம் செய்தார் பவார்! அவரது சொல் மக்களிடையே எடுபட்டது. 1967ல் பவார் தொடங்கிய முதல் ஏரித் திட்டம் கிட்டத்தட்ட 80 கிராமங்களில் நீர்மட்டம் உயரக் காரணமாக அமைந்தது. விவசாயிகள் கண்கூடாக வெற்றியைக் கண்டுவிட்டார்கள். ‘ஜப்பானுக்கும் கனடாவுக்கும் வெறுமனே ஊர் சுற்றிப் பார்க்கச் செல்லவில்லை பவார்…’ என்பது செயலில் உணர்த்தப்பட்டுவிட்டது. நவீன வேளாண்மை பாராமதிக்குள் நுழைந்தது.
தவிர, தனது அயல்நாட்டுத் தொடர்புகள் மூலமாக தொகுதியிலும் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக மருத்துவ வசதிகளை மேம்படுத்தினார். சக்கரை ஆலை, வேளாண் வளர்ச்சி நிறுவனம், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப மையங்கள், கூட்டுறவு வங்கிகள், காடு வளர்ப்பு, கால்நடை வளர்ச்சி, பால் உற்பத்தி, என்று பாராமதியை அடுத்த இருபது ஆண்டுகளில் முன்னேறிய நகரமாக மாற்றுவதற்கான பணிகளை வெறும் ஐந்து ஆண்டுகளில் செய்து முடித்தார்.
இதனால், மராத்தாவின் பின்தங்கிய கிராமத்திலிருந்து அரசியலுக்குள் நுழைந்த பவார் அப்போது டெல்லி தலைமைகளுடன் நேரடியாகத் தொடர்பெடுத்துப் பேசும் அளவுக்கு வளர்ந்திருந்தார். கட்சியில் சீனியர்களே பெரும் முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், இளைஞர்களின் பங்களிப்பை உறுதிசெய்யும் விதமாக உருவாக்கப் பட்ட ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் ஃபோரம்’-ன் மாநிலத் தலைவரானார். கூடுதலாக, புனே தேசிய மாநாட்டின் பொறுப்புத் தலைமையும் சரத் பவார் வசம் அளிக்கப்பட்டது. எல்லாமே 27-32 வயதுக்குள் நிகழ்ந்த ‘மேஜிக்!’
1972-ல் மீண்டும் பாராமதி எம்.எல்.ஏ ஆனார் பவார். இந்த முறை சவானின் அமைச்சரவையில் 22வது அமைச்சராகப் பதவியும் தேடிவந்தது. உணவு, சிவில் சப்ளை, வீடு, விளையாட்டு எனப் பெரிய போர்ஃபோலியோ! ஆனால், கெடுபிடியான நடவடிக்கைகளால் அதிகாரிகள் இவரைக் கண்டாலே கதிகலங்கினார்கள். சவான், பவாருக்கு கொஞ்சம் அரசியல் பாடமெடுத்தார்.
‘நீ டாஸ்க் மாஸ்டர் தான்… ஆனால் எல்லோரும் இங்கே உன்னைப் போன்றவர்கள் அல்ல…’ என்று நீக்கு போக்குகளைச் சொல்லிக் கொடுத்தார்! விரைவிலேயே சீனியர்களை முந்தி கேபினட் அமைச்சரும் ஆனார். கல்வி, இளைஞர் நலன், விவசாயம், நீர்வளம் எனத் தனக்குப் பிடித்த துறைகளில் நினைத்த முன்னேற்றங்களை மாநிலம் முழுக்கச் செயல்படுத்தினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் பேரிடியாக மாறியது ‘எமெர்ஜென்சி’.
1977 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா காங்கிரஸுக்குப் பெரிய பாதிப்புகள் இல்லாதபோதும், நாடாளுமன்றத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தார் இந்திரா. மத்தியில் அரசமைமைத்த ஜனசங்-ஜனதா கூட்டணி, மொரார்ஜி தேசாயைப் பிரதமராக்கிய கையோடு, இந்திராவையும் அவரின் மகன் சஞ்சய் காந்தியையும் சிறையிலடைத்தது.
காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பங்கள் தலைவிரித்தாடின. முதலமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள சீனியர்கள் துடித்தார்கள். நிலைமை இப்படியே போனால் காங்கிரஸுக்கு எதிர்காலமில்லை என்று ஜூனியர்கள் அறைகூவல் விடுத்தார்கள்.
மகாராஷ்டிராவில் சீனியர்களிடமிருந்து முரண்பட்ட 35 எம்.எல்.ஏ-க்களைத் தனது தலைமையில் அணிதிரட்டினார் சரத் பவார். கூடுதலாக குடியரசுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவையும் திரட்டினார்.
மாநில முதலமைச்சராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் வசந்த் தாதா பாட்டீலின் ஆட்சியைக் கவிழ்த்து, 1978 ஜூலை 18-ம் தேதியன்று தனது 38-வது வயதில் மகாராஷ்டிராவின் முதல் இளம் முதலமைச்சர் ஆனார் சரத் சந்திர பவார்!
சரியாக ஒருவருடகாலம் இந்த ஆட்சி நீடித்தது. வளர்ச்சித் திட்டங்களால் பெயர் பெற்ற சரத் பவார், தனது ஆட்சிக் காலத்தை ‘முற்போக்கு அரசாங்கம்’ என்றே அறிவித்தார். 40 அம்ச வளர்ச்சித் திட்டம், கடன் தள்ளுபடி, விவசாய பாசன ஆணையம், கிராம சாலைகள், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு என முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
இதற்கிடையே இந்திராகாந்தி மீதான மக்களின் அதிருப்தி மறையத் தொடங்கி, அனுதாபம் பன்மடங்கு உயர்ந்தது. அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யென்று ஆகின. சிறையிலிருந்து வெளியேவந்த இந்திரா, தனது தலைமையிலான அணியுடன் நாடாளுமன்றத் தேர்தலையும் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தார். இருபுறமும் மகத்தான வெற்றி!
அரியணையில் அமர்ந்ததும் முதல் வேலையாக ஜனதா கூட்டணியின் முதுகெலும்பை உடைக்கும் வேலையில் இறங்கினார் இந்திராகாந்தி. சரத் பவாரின் குருவான யஸ்வந்த்ராவ் சவான் இந்திராவின் அணியில் இணைந்துகொண்டார். ஆனால், சரத்பவார் சோசலிஸ்ட் காங்கிரஸாகத் தனித்து நின்றார்.
ஆனாலும் 47 எம்.எல்.ஏ-க்களுடன் பின்தங்கி, மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்த பவார், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் அரசியல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதேநேரம், மத்தியில் இந்திரா காந்தியை எதிர்க்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஒரு செயல்திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டுமென்பதை ஒரு பிரசாரமாக மாற்ற நினைத்தார் பவார். 1984-ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, அதில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற பவார், அதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தினார்.
டெல்லி, ஹைதராபாத், ஸ்ரீநகர், கொல்கத்தா என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தார். தேசிய அரசியலில் தனது வலிமையை நிரூபிக்க முயன்றதோடு, இந்திராவின் மிருக பலம் வீழ்த்த முடியாத ஒன்றல்ல… என்றும் கர்ஜித்தார்.
இந்த நிலையில் 1985-ல் மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. மீண்டும் பாராமதியில் களமிறங்கி, வென்ற போதும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பவாரின் சோசலிஸ்ட் காங்கிரஸுக்குப் போதுமான எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை.
அதேநேரம், தேசிய அரசியலில் நிலைமைகள் மாறியிருந்தன. இந்திராவின் துர்மரணம் பல மாற்றங்களைக் காங்கிரஸ்க்குள் ஏற்படுத்தியிருந்தது. யாரை எதிர்த்து சரத் பவார் உள்ளிட்டோர், காங்கிரஸிலிருந்து பிரிந்து புதிய புதிய கட்சிகளாகக் கிளைத்தார்களோ, அந்தக் காரண கர்த்தாவே இறந்துவிட்ட நிலையில், பழைய சகாக்கள் ஒன்றுகூடும் தேவை இந்திய அரசியலில் ஏற்படத் தொடங்கியிருந்தது.
1987-ல் தனது சோசலிஸ்ட் கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார் பவார். அதற்கு கைமேல் பலனாக மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராகும் வாய்ப்பு சரத் பவாருக்குக் கிடைத்தது. 1990-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பவார் தலைமையில் 141 இடங்களில் வென்றது காங்கிரஸ். மூன்றாவது முறையாக மகாராஷ்டிரா முதல்வரானார் பவார். ஆனால், இந்த முறை ஆட்சியைப் பறிக்க சோதனை வேறோரு வடிவில் காத்திருந்தது.
1991-ல் மும்பையில் நடைபெற்ற வகுப்புவாதக் கலவரங்கள் வெடித்தன. அதன் எதிர்விளைவ்பாக மாநில முதல்வர் பொறுப்பு சரத் பவார் கைவிட்டுப் போனது. இடையே ராஜீவ் காந்தி பிரதமராகி, அவரும் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மத்தியில் ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் தனது அமைச்சரவையில் சரத் பவாரை நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார். தேசிய அளவில் சரத் பவாரின் செல்வாக்கு காங்கிரஸுக்குள் உயரத் தொடங்கியது.
சரியாக 1993 மார்ச் மாதம் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் மீண்டும் சரத் பவாரை மகாராஷ்டிரா அரசியலுக்குள் இழுத்துவந்தது. 12 இடங்களில் மட்டுமே குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தபோது, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார் பவார்.
பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சோதனை, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார். மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்த நிலையில் அதை 13 இடங்களில் (இஸ்லாமியர் வசிக்கும் பகுதியிலும்) வெடித்ததாகச் சொல்லி, அப்போது ஏற்படவிருந்த வகுப்புவாதப் பதற்றத்தைத் தடுத்தார். ஆனால், குண்டுவெடிப்புக்குக் காரணம் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம் என்று சரத் பவார் திசை திருப்பியது இந்துத்துவ சக்திகளின் தமிழர் விரோத எண்ணங்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக மாறிவிட்டது. அந்த விமர்சனங்களிலிருந்து சரத் பவார் இதுவரை மீளவேயில்லை.
இந்தக் காலகட்டத்தில் சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும் தலித் புரட்சிகர அமைப்புகளும் மராட்டிய அரசியலில் தீவிரமாக வளர்ந்துகொண்டிருந்தன. தேர்தல் அரசியலில் தங்களுக்கான இடங்களை உருவாக்கும் தீவிரத்தில் பலமுனை யுத்தங்கள் நிகழும் மண்ணாக மகாராஷ்டிரா மாறியிருந்தது. இதனால், மராட்டிய சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத அளவுக்கு இழுபறி நிலைமைகள் உருவாகத் தொடங்கின.
1995 சட்டமன்றத் தேர்தலில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 80 இடங்களிலும் சிவசேனா 73 இடங்களிலும், பா.ஜ.க 65 இடங்களிலும் ஜனதா தளம் 11 இடங்களிலும் பிற கட்சிகள் 14 இடங்களிலும் சுயேட்சைகள் 45 இடங்களிலும் வென்றிருந்தனர். காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் கன்னாபின்னாவென அடி வாங்கியது.
ஒருமித்த கருத்துகொண்ட கூட்டணியை அமைத்தால்தான் ஆட்சி வசமாகும் என்ற நிலையில் பால் தாக்ரேவின் சிவசேனாவும் பா.ஜ.க-வும் கைகோத்துக் கொண்டன. மகாராஷ்டிராவில் இந்துத்துவ அரசியல் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
இந்தச் சூழலில், ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் என்பதுபோல, மாநில அரசியலிலும்; மத்திய அரசிலும் ஒருசேர இயங்கிவந்த பவார், 1995-ல் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவரானார். அதே வீச்சில், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கான தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், சீதாராம் கேசரி அந்தப் பதவியைத் தட்டிச் சென்றார்.
மீண்டும் 1998-ல் கட்சியின் தேசியத் தலைமையாகும் வாய்ப்பு சரத் பவாருக்குக் கிடைத்தபோது, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். நேரு குடும்பத்தின் கையில் மீண்டும் காங்கிரஸ் சென்றது ஒருதரப்புக்கு மகிழ்ச்சியும் மறுதரப்புக்கு கசப்பையும் கொடுத்தது. பவார் கசப்புக் கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளரானார். கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். “இந்திய தேசிய காங்கிரஸுக்கு அயல்நாட்டவர் தலைவர் ஆகலாமா…’ என்ற கேள்வியுடன் காங்கிரஸை விட்டே விலகினார் சரத் பவார்.
காங்கிரஸிலிருந்து விலகிய பவார் இந்த முறை, தனக்கென ஒரு தனிக்கட்சி அவசியம் என்ற முடிவை எடுத்தார். 1999-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி தனது ‘தேசியவாத காங்கிரஸ்’ கட்சியைத் தோற்றுவித்தார் சரத் பவார். கட்சியின் சின்னமாக கடிகாரம் ஏற்கப்பட்டது. அதே மூவர்ணக் கொடி, ஆனால் பட்டையாக இல்லாமல் முக்கோணக் கீற்றாக அமைக்கப்ப்பட்டது.
1999ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 58 இடங்களில் வென்றார் பவார். காங்கிரஸ் 75 இடங்களிலும் சிவசேனா 69 இடங்களிலும் வென்றிருந்தது. பா.ஜ.க 56 எம்.எல்.ஏக்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது. சுயேட்சைகள் 12 ஆகக் குறைந்திருந்தார்கள்.
கடந்த முறை நிகழ்ந்த தவறைச் சரிசெய்யும் நோக்கத்துடனும் வேறு வழியில்லாத நிலைமையிலும் காங்கிரஸுடனே கூட்டணி அமைக்க முடிவெடுத்தார் பவார். இந்த சமரசத்துக்காக முதல்வர் பதவியை அவர் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. அதற்குப் பதிலாக துணை முதல்வர் பொறுப்பும், மாநில உள்துறை அமைச்சர் பதவியும் தேசியவாத காங்கிரஸுக்குப் (என்.சி.பி) பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன.
2004-ல் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி ஆன பவார், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் விவசாயத்துறை அமைச்சரானார். பவாரின் சகாக்களுக்கு விமானப் போக்குவரத்து, கிராமப்புற வளர்ச்சி என முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டன. எனினும் மாநிலத்தில் முதலமைச்சர் பொறுப்புக்காக காங்கிரஸுடன் முட்டிமோதிக்கொண்டேதான் இருந்தது என்.சி.பி!
சரத் பவார் தேசிய அரசியலில் ஆழம் பார்த்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், மகாராஷ்டிராவில் என்.சி.பி-யை வைத்து அகல உழுதுகொண்டிருந்தவர் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தான்! எண்பதுகளில் அரசியலுக்குள் நுழைந்தவர். தன் சித்தப்பா சரத் நாடாளுமன்றம் சென்றபோது சட்டமன்றத்தில் களமிறங்கினார் அஜித். 1991 முதல் 2019 வரை அங்கு அவர்தான் எம்.எல்.ஏ.
முன்பு சரத்பவார் அரசியலில் நுழைந்தபோது, இளைஞர்களிடையே ஏற்படுத்திய தாக்கங்களை அஜித் தேசியவாத காங்கிரஸுக்குள் நிகழ்த்திவந்தார். ஆனால், அந்த வெற்றிகள் அனைத்திலும் சரத் பவார் என்ற பிம்பமே முதன்மையாக இருந்தது. மும்பை கலவரத்தின் போது, சரத் பவார் முதலமைச்சர் ஆனாரென்றால் அவரது அமைச்சரவையில் அஜித் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார். மராத்தாவில் சிவசேனா எழுச்சியின்போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மும்பை கலவரத்தின் போது என நெருக்கடியான காலகட்டங்களில் சரத் பவாரின் தளபதியாக அஜித் பவாரே செயல்பட்டார்.
ஆனால், சரத்பவார் குடும்பத்திலிருந்து அவரது வாரிசுகள் மராத்திய அரசியலுக்குள் நுழைந்த பிறகு நிலைமை தலைகீழானது. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ யுத்தத்தில் சிம்மாசனம் யாருக்கு என்ற மோதல் என்.சி.பி-க்குள் தீவிரமானது. அஜித் உழைப்புக்கான பலனைக் கோரினார். ஆனால், அவரது நேர்மை கட்சியினரால் சந்தேகத்துக்குள்ளானது. இந்தச் சூழலில் 1999-ம் ஆண்டில் அஜித் பவார் அமைச்சராகப் பொறுப்பு வகித்த நீர்வளத்துறை ஊழல் வழக்கு ஒன்று அவரது காலைச் சுற்றிய பாம்பாக மாறியது. அஜித் வழக்குக்கு அஞ்சினார். பதவிக்காக மாறி மாறி அணி தாவினார். தன் சித்தப்பாவுக்கு எதிராகவே கலகம் செய்தார். கட்சியையும் உடைத்தார்… எம்.எல்.ஏ-க்களைத் தூக்கிச் சென்று, சித்தாந்த எதிரிகளுடன் கூட்டு வைத்தார். என்.சி.பி-யினரின் சந்தேகம் நிரூபணம் ஆனது. அஜித் பவாரின் அரசியல் வரலாற்றையே துரோக வரலாறு என மாற்றிவிட்டது.
இன்று தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் வசமாகிவிட்டது. நீதிமன்றம் அப்படித்தான் சொல்கிறது. தன் அண்ணன் மகனை எதிர்த்து வயது, தள்ளாமை, முதுமை எல்லாவற்றையும் தூக்கி வீசியடித்துவிட்டு சரத் பவார் களத்துக்கு வந்திருக்கிறார். ``நான் சட்டபூர்வமான போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை. மக்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்றிருக்கிறார்.
தனது பெயரிலான புதிய, ‘தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்)’ கட்சிக்கு எக்காளம் முழங்கும் மராத்தியர் உருவத்தைச் சின்னத்தைப் பெற்றிருக்கிறார். 2024 நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் ஒருபுறம் இந்தியா, என்.சி.ஏ கூட்டணிக்கான தேர்தல் என்ற நிலையில், மகாராஷ்டிராவில் அதுவும் குறிப்பாக தேசியவாத காங்கிரஸில், பவார் குடும்பத்துக்கிடையிலான துவந்த யுத்தமாகவே மாறியிருக்கிறது. பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ‘இந்தியா கூட்டணி’யை உருவாக்கிய சரத் பவார் தன் சொந்தக் கட்சியை மீட்பாரா… என்பது விரைவில் தெரிந்துவிடும்.
(தொடரும்..!)
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/ycZQqjM
0 Comments