உத்தரப்பிரதேசத்தில், திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடமிருந்து அலெக்ஸா (Alexa) எலக்ட்ரானிக் சாதனத்தின் உதவியுடன் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம், ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. முன்னதாக, நிகிதா என்ற 13 வயது சிறுமி அவாஸ் விகாஸ் காலனியிலுள்ள தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அங்கு, குடும்பத்தினர் வீட்டின் வேறு அறையில் இருக்க, நிகிதா தன் சகோதரியின் ஒரு வயது மகளுடன், வீட்டின் முதல் தளத்தில் சமையலறை அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென, குரங்கு ஒன்று சமையலறைக்குள் நுழைந்தது. குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததால், குரங்கு நுழைந்திருப்பதை அவர்கள் அறியவில்லை.
பின்னர், சமையலறையிலிருந்த பாத்திரங்களை எடுத்து வீச ஆரம்பித்த குரங்கு, நிகிதாவையும், குழந்தையையும் நோக்கி நகர்ந்தது. என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை, உடனே அலற ஆரம்பித்தது. அப்போது, ஃபிரிட்ஜ் மேல் அலெக்ஸா இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்ஸாவிடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாகக் குரைக்குமாறு கட்டளையிட்டார்.
அவ்வாறே, அலெக்ஸா சாதனமும் குரைப்பது போல ஒலியெழுப்ப, குரங்கு அச்சப்பட்டு அங்கிருந்து கிளம்பிய பிறகு, குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இறுதியாக, நிகிதாவும் தன்னுடைய சமயோஜித செயலால் தன் சகோதரியின் மகளைக் காப்பாற்றினார். பின்னர் இதுகுறித்து பேசிய குடும்ப உறுப்பினர் பங்கஜ் ஓஜா, `அலெக்ஸாவை நிகிதா இவ்வாறு பயன்படுத்தியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது' என்று தெரிவித்தார்.
from Vikatan Latest news https://ift.tt/u27g0TW
0 Comments