`பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு இல்லை...' - ‘இந்தியா’ கூட்டணிக்கு பலமா, பலவீனமா? - ஓர் அலசல்!

‘இந்திய அரசியலில் மோடிக்கு நிகரான தலைவர்கள் யாரும் இல்லை’ என்று கூறும் பா.ஜ.க., நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக களமிறக்குகிறது. ஆனால், தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்காமலேயே ‘இந்தியா’ கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்தியா கூட்டணி

இந்த நிலையில், தங்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் இருப்பதாக பா.ஜ.க விமர்சிக்கிறது.

ஒவ்வோர் அணியும், அல்லது ஒவ்வொரு கட்சியும் தங்கள் பிரதமர் வேட்பாளர் இவரென்று அறிவித்துவிட்டு, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வழக்கம், இந்திய அரசியலில் இருந்ததில்லை. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள், இயல்பாகவே பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார்கள். வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், தேவ கவுடா ஆகியோரும்கூட ‘பிரதமர் வேட்பாளர்’ என்று அறிவிக்கப்பட்டு, பிரதமர்களாக வந்தவர்கள் இல்லை.

மோடி

‘பிரதமர் வேட்பாளர்’ என்ற சொற்றொடரை பிரபலப்படுத்தியதே பா.ஜ.க-தான். குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், ‘பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர்’ என்று திடீரென முன்னிறுத்தி, நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர். 2019 தேர்தலிலும் அவரே பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராகத் தொடர்ந்தார்.

இரண்டாவது முறையாக மோடி பிரதமரான பிறகு, 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் கொண்டுவரப்படுவார் என்ற செய்தி அடிபட்டது. மோடியை கீழே இறக்கிவிட்டு, யோகியை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வுக்குள் ஒரு பிரிவு தீவிரமாக வேலை செய்கிறது என்றெல்லாம்கூட செய்திகள் அடிபட்டன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

யோகி ஆதித்யநாத்

2024 தேர்தலிலும் மோடிதான் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக இருக்கிறார். ஒருவேளை 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் போட்டிக்கு யோகி ஆதித்யநாத் வரக்கூடும். மோடிக்கு இப்போதும் மவுசு இருப்பதாக பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் கருதுவதால்தான், இந்த முறையும் மோடியே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

அதற்காக, ‘இந்தியா’ கூட்டணியால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லையே என்று பா.ஜ.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சிக்கின்றன. ‘இந்தியா’ கூட்டணி தனது பிரதமர் வேட்பாளரை இப்போது தேர்வுசெய்வதற்கோ, அறிவிப்பதற்கோ வாய்ப்பே கிடையாது. காரணம், ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றின் நெருக்கடியின் காரணமாகவே பா.ஜ.க-வுக்கு எதிராக திரண்டிருக்கின்றன. இன்னொரு முறை பா.ஜ.க வந்தால், அமலாக்கத்துறை ஏவிவிட்டு தங்களை பா.ஜ.க ஒழித்துக்கட்டிவிடும் என்ற அச்சம் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு இருக்கிறது.

மம்தா பானர்ஜி

அந்த அச்சம் இருந்தும்கூட, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்ளாமல், மேற்கு வங்கத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. அப்படியிருக்கும்போது, ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை ஒரு மனதாக இவர்களால் எப்படி தேர்வுசெய்ய முடியும். மம்தா பானர்ஜிக்கு கூட பிரதமராகும் ஆசை இருக்கலாம். ஆனால், ‘இந்தியா’ கூட்டணில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதுதான் இயல்பானதாக இருக்கும், என கூட்டணியில் இருப்பவர்கள் கருதுகிறார்கள்.

அந்த வகையில், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக வர முடியும். அல்லது மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளராகலாம். இவர்களை ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளுமா? வாய்ப்பே இல்லை. எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மூலமாகத்தான் பிரதமர் யார் என்பதை முடிவுசெய்ய முடியும். அதே நேரத்தில், ‘பிரதமர் வேட்பாளர்’ என்பது ஒரு பெரிய பிரச்னையே அல்ல.

ராகுல் காந்தி - காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் இதற்கான விளக்கத்தைத் தெளிவாகச் சொல்கிறார். ‘பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்று அவசியமில்லை. 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றபோது, பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. வெற்றிபெற்ற பிறகுதானே மன்மோகன் சிங்கை பிரதமராகத் தேர்ந்தெடுத்தோம்’ என்கிறார் ப.சிதம்பரம். எனவே, ‘பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டால் அது பலமும் அல்ல.. அறிவிக்காவிட்டால் அது பலவீனமும் அல்ல. என்ன கொள்கைக்காக நிற்கிறோம்... என்ன வாக்குறுதிகளை அளிக்கிறோம் என்பதுதான் முக்கியம்‘ என்கிறார்கள் இந்தியா கூட்டணியின் தலைவர்கள்.

பிரதமர் முகம் இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



from Vikatan Latest news https://ift.tt/0gizSaT

Post a Comment

0 Comments