பொறந்தோமா நாலு பேத்த போட்டு பொளந்தோமா என விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், வேண்டா வெறுப்பா புள்ள பெத்து, அதுக்கு விளையாட்டுகூட காட்டாத கதையாக விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற அணி பெங்களூரு கேப்டன் டு ப்ளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காயம்பட்ட சிங்கக் கூட்டத்தில் காயம் காரணமாக மேக்ஸ்வெல் இல்லை. நியூசிலாந்து வேகம் ஃபெர்குஸன் சேர்க்கப்பட்டார். ப்ளேயிங் லெவனிலிருந்த முகமது சிராஜ் 'மாற்று வீரர்கள்' வரிசைக்கு மாற்றப்பட்டு, யஷ் தயாள் சேர்க்கப்பட்டார். அதே கடப்பாரை லைன் அப்போடு களமிறங்கியது பேட் கம்மின்ஸ் தலைமையிலான எஸ்.ஆர்.ஹெச்.
ஹைதராபாத் அணிக்கு அபிஷேக்கும், ஹெட்டும் தொடக்கம் கொடுத்தனர். பெங்களூரு அணி சார்பாக ஜேக்ஸ் 'சுழற்றிய' முதல் ஓவரில் 7 ரன்களும், டாப்லீ வீசிய 2வது ஓவரில் பறக்க விடப்பட்ட சிக்ஸர்களும் என மொத்தம் 20 ரன்கள் கிடைத்தன. விஸ்வரூப டார்கெட்டை வைக்க ரெடியான ஹைதராபாத்திற்கு, தனது இரண்டாவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஜேக்ஸ். யஷ் தயாளின் அட்டகாசமான 4வது ஓவரை பவுண்டரிகளாக மாற்றத் திணறிய அபிஷேக் - ஹெட் கூட்டணி, 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகபந்துவீச்சாளர் ஃபெர்குசன் 5வது ஓவரை வீசினார். அதை அடுத்தடுத்து சிக்ஸர்கள் ஆக்கினார் ஹெட். மிஸ் ஃபீல்ட்களும் கைகொடுக்க, அந்த ஓவரில் 18 ரன்கள் குவிந்தன.
யஷ் தயாளின் 6வது ஓவரிலும் ஹெட்டின் அதிரடி தொடர, பவர்ப்ளே முடிவில் 76 ரன்கள் குப்பையாகச் சேர்ந்துவிட்டன. 20 பந்துகளில் அரை சதம் கடந்தார் ஹெட். "இன்னைக்கு அவன் நம்மகிட்ட சிக்கல. நாம அவன்ட சிக்கி, அவன்ட நாம சிக்கி, அவன்ட சிக்கி நாம ஆகிருக்கோம்" என மனதளவில் ஒரு பெரிய பேரிடரை எதிர்கொள்ளத் தயாரானார்கள் ஆர்.சி.பி ரசிகர்கள். 7வது ஓவரில் ஜேக்ஸ் மீண்டும் சுழலுடன் வந்தார். ஜேக்ஸை மொத்தமாக ஹை-ஜேக் செய்த ஹெட், சிக்ஸர்களாகச் செதுக்கி, 21 ரன்களை வழிபறி செய்தார். "இவர் யார்னு பாத்து அடிக்கிறவன் இல்ல சார். அடிச்சுட்டுதான் யார்னே பாக்குறான்" எனச் சொல்ல வைத்தது, வைஷாக் ஓவரிலும் பறந்த ஹெட்டின் சிக்ஸர். 7.1வது ஓவரிலேயே 100 ரன்களை வாரிச் சுருட்டியது ஹைதராபாத்.
டாப்லீயின் 8வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார் அபிஷேக். அடுத்து வந்தார் க்ளாசன். "சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்ச் புடிச்சேன்... ஹைய்யோ ஹைய்யோ... அபிஷேக்கையே திரும்ப வரச் சொல்லுங்க" என்ற பெங்களூருவின் மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் சத்தமாகவே வெளியே கேட்டது. "என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்" என ஒரு பக்கம் பவுண்ட்ரிகள், சிக்ஸர்கள் என அடித்துக்கொண்டிருந்தார் ஹெட். ஃபெர்குசனின் ஓவரில் தனது எட்டாவது சிக்ஸை அடித்து, ஹைதராபாத்தை 125 ரன்களைத் தாண்ட வைத்தார் ஹெட். யாக்கர்கள் ஓரளவிற்கு பவுண்ட்ரிகளைக் குறைத்தாலும், மோசமான ஃபீல்டிங்கும் எக்ஸ்ட்ராஸும் ஒருபக்கம் ரன்களை தானம் செய்துகொண்டே இருந்தன.
சிக்ஸர்கள், பவுண்ட்ரிகள் குவிந்தாலும், சிங்கிள்களை இரண்டு ரன்களாக மாற்றத் தவறவில்லை ஹைதராபாத். இதுவே ஓவருக்கு 3 ரன்கள் வரை உறுதி செய்ததோடு, பௌலர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தது. அடுத்து வைஷாக்கின் ஓவரிலும் ஃபீல்டிங்கில் உள்ள கேப்புகளை தன் பவுண்ட்ரிகளால் நிரப்பினார் ஹெட். "அவன் குறுக்கால மட்டும் போய்டாதீங்க சார்" என ஹைதராபாத் ரசிகர்கள் கர்ஜித்து கொண்டிருந்தனர். 39 பந்துகளில் சதத்தைக் கடந்தார் ஹெட். ஐ.பி.எல் வரலாற்றில் இது நாலாவது அதிவேக சதம். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தன.
"ஹெட்டோட புஷ்பாஞ்சலி முடிஞ்சது. அடுத்து என்னோட புஷ்பமஞ்சனம்" என க்ளாஸனும் சிக்ஸர்களால் அதிரடிக்கு அடியெடுத்து வைத்தார். மறுபக்கம், ஃபெர்குசன் பந்தை சிக்ஸருக்குக் கிளப்ப முயன்ற ஹெட் கேட்ச் ஆனார்.
விக்கெட் ஒரு பக்கம் விழுந்தாலும், பவுண்ட்ரிகளும் சிக்ஸர்களும் குறையவே இல்லை. 13வது ஓவர் முடிவில், 171-2 என்ற நிலையிலிருந்தது ஹைதராபாத். இடது கை சுழற்பந்துவீச்சாளர் லாம்ரோம் 16வது ஓவரை ஒயிடுகளால் பிசைந்து வீசினார். ஒயிடு ஆகாத பந்துகளை க்ளாசன் சிக்ஸர்களாக மாற்ற, அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தன. வைஷாக்கின் 15வது ஓவரில் 16 ரன்கள், டாப்லீயின் 16வது ஓவரில் 12 ரன்கள். "போதும் ப்ரோ டிக்ளர் பண்ணிட்டு, பௌலிங் போட வாங்க..." என பெங்களூரு அணி ரசிகர்களே ஹைதராபாத் நிர்வாகத்துக்கு மனு அளிக்கத் தொடங்கியிருந்தனர்.
ஃபெர்குசனின் ஓவரில் கூரைக்கு மேல் பந்தை அடித்தார் க்ளாசன். "ஆத்தி... அடுத்த சிக்ஸ் ஓசூர், கிருஷ்ணகிரி போகுமோ?" எனக் குழம்பிப் போனார்கள். அடுத்த சில பந்துகளிலேயே கேட்ச் ஆகி வெளியேறினார் க்ளாசன்.
யஷ் தயாளின் லோ ஃபுல் டாஸில் மார்க்ரம் கேட்ச் ஆக, அதை 'ஃப்ரீஹெட்' ஆக அறிவித்தார் நடுவர். பெங்களூரு பௌலர்கள் முகத்தில் 2.27 நொடிகள் மட்டும் சிரிப்பு வந்து மறைந்தது. 'இம்பாக்ட் ப்ளேயர்' அனுஜ் ராவத்தின் 19வது ஓவரிலும் 4, 4, 6, 6, 4 என சமத் அடிக்க, 25 ரன்கள் கிடைத்தன. "இம்பாக்ட்னுதான் சொன்னேன். யாருக்கு இம்பாக்ட்னு சொன்னேனா?" என நகர்ந்தார் அனுஜ். சமத்தின் சிக்ஸர் மீண்டும் மைதான கூரைக்கு மேல் விழ, அங்கேயும் ஏணி போட்டு ஒரு ஃபீல்டரை நிற்க வைக்க முடிவு செய்தது பெங்களூரு. வைஷாக்கின் 20வது ஓவரில் 4, 6, 6 என ரன்கள் குவிய, 20 ஓவர்கள் முடிவில் என்ற 287-3 என்ற வலுவான நிலையை எட்டியது எஸ்.ஆர்.ஹெச். மொத்தத்தில் காயம்பட்ட சிங்கத்தைத் துவைத்துக் காயப்போட்டுவிட்டது ஹைதராபாத்.
ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை எட்டியது ஹைதராபாத். தன்னுடைய முந்தைய சாதனையைத் தானே முறியடித்து, தனக்கு தானேதான் போட்டி என நிரூபித்தது ஹைதராபாத். பெங்களூரு அணி சார்பில் பந்து வீசிய நான்கு பேர், 50+ ரன்கள் கொடுத்தனர். அதில் இருவர் 60+ ரன்கள். இதுவும் ஒரு சாதனைதானப்பா!
எளிய டாக்கெட்டையே இமாலய டார்கெட் போல அன்ன நடை போட்டு விளையாடும் பெங்களூரு, இந்த 'விண்வெளி டார்கெட்டை' எந்த ஏவுகணையை வைத்து எட்டப் போகிறதோ என ஒட்டு மொத்த கிரிக்கெட் பிரபஞ்சமும் ஆவல் கொண்டது.
பெங்களூரு அணிக்கு கோலியும் கேப்டன் டு ப்ளெஸ்ஸியும் தொடக்கம் கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா வீசிய முதல் ஓவரில் 10 ரன்கள், புவனேஷ்வர் குமாரின் 2வது ஓவரில் 11 ரன்கள், ஷபாஷின் 3வது ஓவரில் 4, 6, 6 உட்பட 18 ரன்கள் எனப் பெரிய போருக்குத் தயாரானது கோலி - டு ப்ளெஸ்ஸி கூட்டணி. புவனேஷ்வர் குமாரின் 4வது ஓவரில் 4, 4, 4, 4 என விஸ்வரூபம் எடுத்தது பெங்களூரு. "சாதிக்க பொறந்தவன்டா இந்த சங்கரபாண்டி" எனச் சொல்லிச் சொல்லி அடித்த ஹைதராபாத்திற்கு, "உன்ன சோதிக்க பொறந்தவன்டா இந்த சக்திவேலு" என பவுண்ட்ரிகளால் புரட்டி எடுத்து பதில் சொன்னது பெங்களூரு. 'சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்' நடராஜனின் 5வது ஓவரிலும் 14 ரன்கள் கிடைக்க, 70 ரன்களை எட்டியது பெங்களூரு.
அதிரடிக்கு அணைக்கட்ட கேப்டன் கம்மின்ஸ் 6வது ஓவரை வீசினார். 9 ரன்கள் மட்டும் கொடுத்தார். பவர் ப்ளே முடிவில் 79 ரன்கள் என்ற நம்பிக்கையான நிலையிலிருந்தது பெங்களூரு. 7வது ஓவரில் 'இம்பாக்ட் ப்ளேயர்' மார்கண்டேவின் 'கூக்ளி'யில் போல்ட் ஆனார் கோலி. கம்மின்ஸின் திட்டம் கைகூட, பெங்களூருவின் பெரும் நம்பிக்கை தகர்ந்தது. உனத்கட்டின் 8வது ஓவரை சிக்ஸருடன் தொடங்கினார் டு ப்ளெஸ்ஸி. அதே ஓவரில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார் ஜேக்ஸ். மார்கண்டேவின் 9வது ஓவரில் பவுண்ட்ரிகள் பறந்தாலும், பட்டிதர் கேட்ச் ஆகி வெளியேறினார். கம்மின்ஸின் ஓவரை பவுண்ட்ரிகளாக விளாசத் தொடங்கிய டு ப்ளெஸ்ஸி, க்ளாசனிடம் கேட்ச் ஆனார். கேப்டனின் இன்னிங்க்ஸ் முடிந்தது. அடுத்து சௌகனும் வெளியேற, 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் சேர்த்திருந்தது பெங்களூரு.
மிகப்பெரிய பொறுப்பு தினேஷ் கார்த்திக்கின் தலையில் விழுந்தது. மார்கண்டேயின் 11வது ஓவரில் 5 ரன்கள், நடராஜனின் 12வது ஓவரில் 3 ஒயிடுகளுடன் 8 ரன்கள். மார்கண்டேயாவின் 13வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள், பவுண்ட்ரி என 25 ரன்கள் அடித்து, எள்ளளவு நம்பிக்கையை அளித்தார் டிகே. இதற்கடுத்து எல்லா ஓவர்களுமே இதுபோல 'பிக் ஓவர்களாக' இருக்க வேண்டும் என்ற நிலையில், "தோக்குறோமோ ஜெயிக்குறோமோ சண்ட செய்யணும்" என தன் அதிரடியைத் தொடர்ந்தார் டிகே!
14வது ஓவர் முடிவில் 181ரன்கள். 6 ஓவர்களில் 107 ரன்கள் இலக்கு என்ற நிலைக்கு பெங்களூரைக் கொண்டு சென்றது டிகே - லாம்ரோர் கூட்டணி. ஆனால், 15வது ஓவரை வீசிய கம்மின்ஸ், லாம்ரோரை போல்டு ஆக்கி, மொத்த சின்னசாமியையும் 'சைலண்ட்' ஆக்கினார். 'இம்பாக்ட் ப்ளேயர்' அனுஜ் ராவத் டிகேவுடன் கைகோர்த்தார். அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தன. நடராஜனின் 16வது ஓவரின் முதல் பந்தையே கூரைக்குப் பறக்கவிட்டார் டிகே. ஆனால், அந்த ஓவரில் மொத்தம் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு. கம்மின்ஸின் ஓவரில் பவுண்ட்ரிகளாக அடிக்க, 23 பந்துகளில் அரை சதம் கடந்தார் டிகே. தனியாளாக நின்று அரண்மனைக்கு வெள்ளையடித்துக்கொண்டிருக்கும் டிகே-வின் ஆட்டம் தேவையான நம்பிக்கையை பெங்களூருக்குக் கொடுத்தது. 17 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள். 18 பந்துகளுக்கு 72 ரன்கள் எடுக்க வேண்டிய எவரெஸ்ட இலக்கு!
புவனேஷ்குமாரின் 18வது ஓவரில் 14 ரன்கள். நடராஜனின் 19வது ஓவரில் 6, 4 எனத் தொடங்கினாலும், க்ளாஸனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார் டிகே. 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்து, தனியாளாக சுபாஷைக் காப்பாற்றக் களமிறங்கிய டிகே-விற்கு, மைதானமே எழுந்து நின்று பாராட்டியது. கடைசி ஓவருக்கு 44 ரன்கள் தேவை என்றபோது பெங்களூருவின் போராட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. புவனேஷ்வரின் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்து, 20 ஓவர்கள் முடிவில் 262 ரன்கள் எடுத்து பெரிய போராட்டத்தை நிகழ்த்தி எதிரணிக்கு பயங்காட்டியது பெங்களூரு. ஹைதராபாத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் சேர்த்து இந்தப் போட்டியில் 549 ரன்கள் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவிற்கு இது 6வது தோல்வி என்றபோதும், மிகப்பெரிய இலக்கைத் துரத்தியது அந்த அணிக்குப் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. 4வது வெற்றியைப் பதிவு செய்த ஹைதராபாத், தான் பலமான அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/T8Pd259
0 Comments