Amethi: காங்கிரஸில் 40 வருட கட்சிப் பணி; 63 வயதில் முதல் வாய்ப்பு - யார் இந்த கிஷோரி லால் சர்மா?

ரேபரேலி மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்.பி சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யார் இங்கு போட்டியிடுவார் என்று பெரும் கேள்வியெழுந்தது. அதேபோல், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்ததால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி இங்கு மீண்டும் போட்டியிடுவாரா அல்லது நேரு குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராவது களமிறக்கப்படுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது.

சோனியா காந்தி - கிஷோரி லால் சர்மா

இந்த நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியை வேட்பாளராக அறிவித்திருக்கும் காங்கிரஸ், யாரும் எதிர்பாராத விதமாக அமேதியில் கிஷோரி லால் சர்மா என்பவரைக் களமிறக்கியிருக்கிறது. அமேதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரைக் காங்கிரஸ் களமிறக்கியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

காங்கிரஸின் 40 ஆண்டுகால விசுவாசி கிஷோரி லால் சர்மா!

1981-ல் அமேதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு வென்ற மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணிக்கும் இளைஞர் குழுவில் 1983-ல் இணைந்ததன் மூலம் அமேதிக்கு அறிமுகமாகிறார் கிஷோரி லால் சர்மா. இவர் தன்னுடைய 20-வது வயதில் முதல்முறையாக அமேதி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திலோய் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராகும் வாய்ப்பை பெற்றார். அதன்தொடர்ச்சியாக, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய நாடாளுமன்றத் தேர்தலில் அமேதியில் ராஜீவ் காந்திக்கு ஆதரவாக அவரது அணியில் தீவிரமாகத் தேர்தல் வேலைகளைக் கவனித்து காங்கிரஸில் நெருக்கமானார்.

அமேதி (Amethi) வேட்பாளர் கிஷோரி லால் சர்மா

மேலும், 1991-ல் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அமேதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் 1996 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சதீஷ் சர்மாரின் வெற்றிக்கும் தனது தேர்தல் பணி மூலம் முக்கிய பங்காற்றினார். இருப்பினும், 1998-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் சதீஷ் சர்மா தோல்வியடையவே, 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி களமிறக்கப்பட்டார். இன்னொருபக்கம், ஒரு தோல்விக்குப் பிறகு கிஷோரி லால் சர்மா இன்னும் அதிகமாக தேர்தல் களப்பணியற்றத் தொடங்கினார்.

இறுதியில், சோனியா காந்தி வெற்றிபெற அமேதி மீண்டும் காங்கிரஸ் வசமானது. ஆனால், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி அமேதி தொகுதியை மகன் ராகுல் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு, ரேபரேலியில் போட்டியிடச் செல்லவே கிஷோரி லால் சர்மாவின் பணி இரண்டு தொகுதிகளுக்கும் விரிவடைந்தது. இதில், 2009 நாடாளுமன்றத் தேர்தல் வரை அமேதி, ரேபரேலி என இரண்டு தொகுதிகளையும் இவர் கவனித்துவந்தார்.

ராகுல் காந்தி - கிஷோரி லால் சர்மா

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அமேதியில் ராகுல் தனது அணியை தேர்தல் வேளைகளில் ஈடுபடுத்தவே, கிஷோரி லால் சர்மா முழுமையாக ரேபரேலி தொகுதியிற் கவனிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சோனியா காந்தியும் 2004 தற்போது வரை ரேபரேலி தொகுதியின் எம்.பி-யாகவே இருக்கிறார். இத்தகைய சூழலில், சோனியா காந்தி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ரேபரேலியில் யார் என்று கேள்வியெழுந்தது. அமேதி தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமலிருந்ததால் இந்த இரண்டில் ஏதேனும் ஒரு தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்டது.

இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியை ரேபரேலி தொகுதி வேட்பாளராக இன்று அறிவித்த காங்கிரஸ், தன்னுடைய 20 வயது முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் கிஷோரி லால் ஷர்மாவை அமேதி தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியது. தற்போது 63 வயதாகும் கிஷோரி லால் ஷர்மாவுக்கு தேர்தலில் போட்டியிடுவதும் இதுவே முதல்முறை.

பிரியங்கா, சோனியா, கிஷோரி லால் சர்மா

காங்கிரஸ் தன்னை தேர்ந்தெடுத்ததற்குப் பிறகு தனியார் ஊடகமொன்றிடம் பேசிய கிஷோரி லால் ஷர்மா, ``40 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் கட்சிப் பணி செய்துவருகிறேன். அமேதியை நன்கு அறிவேன். 1983-ல் இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதியாக ராஜீவ் காந்திக்காக வேலை செய்ய இங்கு வந்தேன், அன்றிலிருந்து இன்றுவரை இங்கேயே இருக்கிறேன். 1981 தேர்தலைத் தவிர, ராஜீவ் காந்தி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் நான் பணியாற்றியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

அமேதியில் இவர் தேர்வுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில், ``எங்கள் குடும்பம் கிஷோரி லால் ஷர்மாவுடன் நீண்டகாலமாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. அமேதி, ரேபரேலி மக்களுக்கு சேவை செய்வதில் அவர் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்" என்று ட்வீட் செய்து வரவேற்றார். அதோடு, ஊடகத்திடம் பேசுகையில், ``அவர் ஒரு நல்ல தேர்வு. நீண்ட காலமாக அமேதியை அவர் கவனித்து வருகிறார். 1999-ல் நான் முதன்முறையாக இங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டபோது, ​​நாங்கள் ஒன்றாக இணைந்து களப்பணி செய்தோம். அமேதியின் ஒவ்வொரு கிராமத்தையும், சந்துகளையும் அவர் நன்கு அறிவார்" என்று கூறினார்.

பிரியங்கா, கிஷோரி லால் சர்மா

களம் எப்படி?

அமேதி தொகுதியைப் பொறுத்தவரை, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை விட இரண்டு சதவிகித வாக்குகள் அதிகமாகப் பெற்று அதாவது, சுமார் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். அதோடு, தற்போது அமேதிக்குட்பட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு சமாஜ்வாதியிடமும், மூன்று பா.ஜ.க-விடமும் இருப்பது ஸ்மிருதி இரானிக்கு சாதகமான களமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமேதியில் ஸ்மிருதி இரானியை விட கிஷோரி லால் சர்மா நன்கு பரிச்சயமான முகம் என்பதாலும், சமாஜ்வாதி கூட்டணியிலிருப்பதாலும் காங்கிரஸுக்கும் சரிபாதியான களம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எதுவாயினும், இறுதியில் யாருடைய கை ஓங்கும் என்பது ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/0jWIRBk

Post a Comment

0 Comments