`இடமாற்றம்... இடிப்பு?' - பிராட்வே பேருந்து நிலையம், குறளகம் குறித்த அரசின் திட்டம் என்ன?

புதிய பேருந்து முனையம் அமைப்பதற்காக, சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

பிராட்வே பேருந்து நிலையம்

சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்துவருகிறது. தொடக்கத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து பயண சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. (தற்போது கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது). அதைத் தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகரப் பேருந்துகள்(MTC) மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிளாம்பாக்கம் என சென்னை மாநகருக்குள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், பிராட்வே பேருந்து நிலையம் அருகில் ரயில் நிலையம், நீதிமன்றம், குறளகம், வணிக வளாகங்கள், பஜார், சந்தைகள் என மக்கள் கூடும் இடமாக நகரின் முக்கியப் பகுதியாக பாரிமுனை இருப்பதால், நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும் பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவருகிறது. அதேசமயம் இந்த பேருந்து நிலையம் சரிவர பராமரிக்கப்படாமல், நவீன வசதிகள் மேற்கொள்ளப்படாமலும் கைவிடப்பட்டதால் பொலிவிழந்து, அடிப்படை வசதிகளே மோசமான நிலையில் இருக்கும் சூழலுக்கு உள்ளானது. இவற்றையெல்லாம் சரிசெய்து, பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பிராட்வே பேருந்து நிலையம்

அந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிதாக பார்க்கிங் வசதிகள், வணிக வளாகங்களுடன்கூடிய மிகப்பெரிய பேருந்து முனையத்தை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் பெரிய அளவில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில், தமிழக சட்டமன்றத்தில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலன், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ``சென்னை 44,640 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட குறளகம் கட்டடங்கள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ரூ.100 கோடி செலவில் போதிய வாகன நிறுத்த வசதியுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும்!" என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மே மாதம் சென்னை மாநாகராட்சி மாமன்ற கூட்டத்தில் பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்ட அறிக்கை தயார் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

குறளகம்

இதையடுத்து, 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ``பிராட்வேயில் ரூ.823 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகள் கொண்ட மல்டி மாடல் பேருந்து முனையம் கட்டப்படும்" என அறிவித்தார். இந்த நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தையும், அதனருகில் உள்ள குறளகத்தையும் இடித்துவிட்டு, புதிதாக `மல்டி மாடல் இன்டெகரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமும், பன்னடுக்கு வணிக வளாகமும் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியபோது, ``பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. அதில் முதல் இரண்டு தளங்களில் மாநகரப் பேருந்துகள் நிறுத்தம், உணவகங்கள், கழிவறை வசதிகள் அமையப்பெற்றிருக்கும். மற்ற தளங்கள் வணிகவளாகங்களாக செயல்படும். அதேபோல, குறளகம் கட்டடமும் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவிருக்கிறது. அதன் அடித்தளத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் நவீன பார்க்கிங் வசதிகள் செய்யப்படும். மேலும், பயணிகள் வசதிக்காக அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் சுரங்க நடைபாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களும் அமைக்கப்படவிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜுன் 4-ம் தேதிக்குப் பிறகு இதற்கான டெண்டர் விடப்படும்" எனத் தெரிவித்தனர்.

தீவுத்திடல்

மேலும், `இந்தப் பணிகளுக்காக வரும் ஜூலை மாதத்துக்குள் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்படும். தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கான அடிப்படை வசதிகளை தீவுத்திடலில் ஏற்படுத்துவதற்காகவும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.95 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும்' தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, கடந்த மார்ச் 30-ம் தேதி, சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம், சென்னை போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Vikatan Latest news https://ift.tt/TGs2o97

Post a Comment

0 Comments