சென்னையில் உள்ள ஒரு வீட்டில் பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அது தொடர்பான விசாரணையில் சென்னையைச் சேர்ந்த 70 வயதாகும் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது அந்த முதியவர், தனக்கு பெண் ஒருவர் தான் பள்ளி மாணவியை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் அவருடன் சந்தோஷமாக இருந்ததாகவும் அதற்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``இந்த வழக்கில் கைதாகியுள்ள பெண் பாலியல் தொழில் புரோக்கராக செயல்பட்டு வந்திருக்கிறார். இவரின் மகள், பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அதனால், அப்பெண் தன்னுடைய மகள் மூலம் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்திருக்கிறார். இதற்காக அவர், தன்னுடைய மகளை அவளுக்குத் தெரிந்தவர்கள், அவளுடன் படிப்பவர்கள் என அனைவருடனும் சகஜமாக பழக வைப்பாராம். பின்னர் மகள் மூலம் அவர்களின் குடும்ப சூழல்களைத் தெரிந்து கொண்டு ஏழ்மையானவர்களை டார்க்கெட் செய்வாராம். பின்னர் அவர்களுக்கு பணத்தாசை காண்பித்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.” என்றார்.
குறிப்பாக பள்ளி படிக்கும் சிறுமிகளை மட்டுமே பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளி, பின் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி தொடர்ந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கரித்திர பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத்துக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2023 ஆம் அக்டோபர் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் என்ற நபர் ஆளுநர் மாளிகை முன்பு இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது.
கடந்த 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் சிறைக்கு சென்றபோது அவரை ஜாமீனில் எடுத்தது யார் என்பது குறித்து இரு அரசியல் கட்சிகள் இடையே ஒரு பெரும் விவாதமே நடந்தது. இதனை அப்போது விசாரித்த என்.ஐ.ஏ, தற்போது பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பெண் தான் அன்று கருக்கா விநோத்தை ஜாமீனில் எடுத்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்கு சமீபத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் 5 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. செல்போனை ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் பல்வேறு சிறுமிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பாலியல் தொழிலால் லோக்கலில் எழும் சிக்கல்களை சமாளிக்க கருக்கா வினோத்தும் இந்த பாலியல் கும்பலுக்கு உதவியிருக்கிறார். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில் தான் தமிழக காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இவர்கள் யார் யாருக்கு சிறுமிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய ரெளடி கருக்கா வினோத் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கருக்கா வினோத்துக்கு நெருக்கமான 37 வயதான பெண்ணின் வீட்டில் என்ஐஏ சோதனையிடும் போது கண்டெடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், மேலும் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மாநில பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு என்ஐஏ தகவல் அளித்தது.
இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் தன் மகளின் பள்ளித் தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம் கற்றுத்தருவதாகவும், அழகுக் கலை கற்றுத் தருவதாகவும் ஆசை காட்டி அந்த குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சீரழித்த அவலம் வெளிப்பட்டது. குறிப்பாக, ஐதராபாத், கோவை போன்ற நகரங்களுக்கு அந்த பெண்களை அழைத்துச் சென்று கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது.
மேலும், அந்தக் குழந்தைகளின் குடும்ப நிலைமையை தெரிந்து கொண்டு பண ஆசை காட்டியும், மறுத்தால் ஏற்கெனவே ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை 7 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இந்த கொடூர குற்றம் மன்னிக்க முடியாதது.
அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவசரகதியான உலகத்தில், பொருளீட்டும் நிர்ப்பந்தத்தில் இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள் என அறிந்து கொள்ளாமலும், எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளாமலும், அவர்களின் எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருப்பது பெரும் துயரம்" என தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/GgqvW5k
0 Comments