``20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்திருக்கிறது பா.ஜ.க" என்ற ராகுல் காந்தியின் விமர்சனம்?

ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க

“அபத்தமான கருத்து. உண்மையில் ராகுல் காந்தி ரொம்பவே குழப்பிக்கொள்கிறார். குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வாரிசுகள், அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. அப்படி வருபவர்களை ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்து, தேர்வு செய்கிறார்கள். ஆனால், மன்னராட்சிபோல ஒரு குடும்பம் அரசியலில் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கிறது. நேரு... அவருக்குப் பிறகு இந்திரா காந்தி... அடுத்து ராஜீவ் காந்தி... அவர்களுக்குப் பிறகு சோனியா... ராகுல் என்று ஒரு குடும்பமே அதிகாரத்தைக் கைப்பற்றிப் பலனடைந்துகொண்டிருக்கிறது. இந்தக் குடும்ப அரசியலின் காரணமாகவே போஃபர்ஸ் ஊழல் தொடங்கி ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், சவப்பெட்டி ஊழல் என்று கிட்டத்தட்ட 37 இமாலய ஊழல்கள் நாட்டைச் சீரழித்தன. மத்தியில் காங்கிரஸ் என்றால், தமிழ்நாட்டில் தி.மு.க குடும்பம். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். பா.ஜ.க-வில் இப்படியான அரசியலுக்கு என்றுமே இடமில்லை. எந்த ஊழல், முறைகேட்டுக்கும் இடம் கொடுக்காமல் மூன்றாவது முறையாக மக்கள் எங்களுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ராகுல் உள்ளிட்டவர்கள் புலம்புகிறார்கள்.”

ஜி.கே.நாகராஜ், ஹசீனா சையத்

ஹசீனா சையத், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர்

“பா.ஜ.க-வின் முகத்திரையைக் கிழிக்கும்விதமாக உண்மையைச் சொல்லியிருக்கிறார் ராகுல். வார்த்தைக்கு வார்த்தை, ‘காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்கிறது’ என்று போகுமிடமெல்லாம் மோடி பேசிவந்தார். கடந்த ஆட்சியில், அமித் ஷா மகன் ஜெய் ஷா-வுக்கு எந்தத் தகுதியுமில்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் பொறுப்பு கொடுத்த போதே பா.ஜ.க-வின் ‘வாரிசு அரசியல்’ பல்லிளித்துவிட்டது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, வாரிசு அரசியல் விமர்சனத்தை மீண்டும் கையிலெடுத்த பா.ஜ.க., தமிழ்நாட்டில் அமைச்சர் உதயநிதி தொடங்கி ஒடிசாவில் பி.கே.பாண்டியன் வரை அவதூறுகளை அள்ளி இறைத்தது. ஆனால், இன்று பா.ஜ.க அமைச்சரவையே வாரிசுகளால் நிரம்பியிருக்கிறது. காங்கிரஸ்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கும் இவர்களின் தேர்தல் பத்திர ஊழலை உச்ச நீதிமன்றமே அம்பலப்படுத்தியதை மறக்க முடியுமா... தேசப் பாதுகாப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் செய்தவர்களுக்கு காங்கிரஸ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது... இத்தனை காலமும் கேள்வி கேட்க ஆளில்லாமல் அவர்கள் ஆட்டம் போட்டிருக்கலாம். இனிதான் எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் வலிமையை மைனாரிட்டி பா.ஜ.க-வும், ‘வாரிசு அமைச்சரவை’யும் எதிர்கொள்ளப்போகின்றன.”



from Vikatan Latest news https://ift.tt/jSNqRP3

Post a Comment

0 Comments