``அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும் பாஜக-வுடன் கூட்டணி கிடையாது..!” - ஜெயக்குமார் சுளீர்

சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது , மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து அதிர்ச்சி தரக்கூடியதாகவும், வேதனையாகவும் இருப்பதாகத் தெரிவித்த அவர், ``தொடர் ரயில் விபத்துகளால் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை விழிப்புணர்வுடன் இருந்து விபத்துகளைத் தடுக்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து அதிமுக இடைத்தேர்தல் புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, ``அதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணித்தது தொடர்பாக திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். அரசியல் வரலாற்றில் திமுக பலமுறை தோல்வி அடைந்த வரலாறு உண்டு.

ஜெயக்குமார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது. புதுக்கோட்டை இடைத்தேர்தல் மட்டுமில்லாமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் திமுக ஏன் போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் பொதுமக்களைப் பட்டியில் அடைத்து ஜனநாயக படுகொலை செய்தது திமுக. தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாக நடத்தினால் நாங்கள் போட்டியிடத் தயார். அந்த உறுதியைத் தேர்தல் ஆணையம் வழங்குமா... அதனால்தான் நாங்கள் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் . இந்த அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் விக்கிரவண்டியில் முகாமிடுவார்கள். அங்கு அதிகார துஷ்பிரயோகம் நடைபெறும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பண விரயம் மட்டும் அல்ல கால விரயமும் கூட. அதிமுக தலைமை மட்டுமின்றி அதிமுகவிற்கு வாக்களிக்கும் தொண்டர்களும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பார்கள்.

கடந்த தேர்தலை விட நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆறு சதவிகிதம் குறைவாக வாக்கு பெற்றுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.” என்றார். சசிகலா குறித்துப் பேசியவர், "சசிகலா கட்சியிலேயே இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளாத சசிகலாவைப் பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். எக்சிட் ஆனவர் என்ட்ரி ஆக முடியாது. சாதி, மதம், இனம் ,மொழி கடந்து அனைத்து சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து அனைவரும் சமம் என்ற சமத்துவத்தின் அடிப்படையில் அதிமுக செல்கிறது. சசிகலா சாதி என்ற மலிவான பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளது மக்களிடம் எடுபடாது. அதேபோல் குழப்பவாதி, சந்தர்ப்பவாத, சுயநலவாதியான ஓ.பி.எஸ் கனவும் பலிக்காது" என்றார்.

ஜெயக்குமார்

பாஜக தலைவராக அண்ணாமலை நீக்கப்பட்டால் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா என்ற கேள்விக்கு, "அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது. அண்ணாமலையின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் பாஜக தனித்து நிற்க வேண்டும். அதைத் தவிர்த்து பத்து பேர் உடனான கூட்டணியைச் சேர்த்து பத்து சதவிகிதம் வாக்கு பெற்று விட்டோம் என்று கூறினால் அது சரியல்ல. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமே கிடையாது. அவர்கள் தனித்துப் போட்டியிட்டாலும் சரி, பிற கட்சிகளின் கூட்டணியோடு சேர்ந்து போட்டியிட்டாலும் சரி தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை" என்று பதிலளித்தார்.

மேலும், தமிழிசை சௌந்தர்ராஜனை அமித் ஷா கண்டித்துப் போல வெளியான வீடியோ குறித்து கேள்விக்கு, "அது உட்கட்சி விவகாரம். இருந்தபோதிலும் மேடை நாகரீகம் இருக்கிறது. கண்டிக்கவேண்டுமென்றால் அவரை டெல்லிக்கு அழைத்து அலுவலகத்தில் வைத்துக் கண்டித்திருக்கலாம். ஒரு பொது மேடையில் பெண் என்று பாராமல் மேடையில் வைத்து ஒரு மத்திய மந்திரி அவமானப்படுத்தியது தவறு" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/KE4oVPq

Post a Comment

0 Comments