Andhra: `கம்பேக்' சந்திரபாபு ; `பவர்' பவன் கல்யாண் - ஆந்திரா அரசியல் யுத்தத்தில் சாதித்தது எப்படி?

நாடாளுமன்றத்துடன் சேர்த்து சட்டமன்றத்துக்கும் ஒருசேர நடந்த ஆந்திர மாநிலத் தேர்தலில் இரண்டிலும் பெருவாரியான வெற்றி பெற்று வாகை சூடியிருக்கிறது பா.ஜ.க தலைமையிலான சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணி! மத்தியில் தெலுங்கு தேசம் கட்சி இல்லாமல் ஆட்சி இல்லை; மாநிலத்தில் (Andhra) மூன்றாவது முறையாக முதலமைச்சர் என குதூகலத்தில் இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. அதேபோல, பா.ஜ.க, தெலுங்கு தேசம், தனது ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகளையும் ஒரே கூட்டணியில் இணைத்தது முதல், முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றது, மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக அரியனை ஏறவிருப்பது என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் பவன் கல்யாண். இவையெல்லாம் எப்படி சாத்தியமானது? முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி எப்படி வீழ்த்தப்பட்டார்? ஆந்திர அரசியலில் அப்படி என்னதான் நடந்தது? விரிவாக அலசுவோம்.

பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரா: ஜெகன்மோகன் ஆட்சியில் பழிவாங்கப்பட்ட சந்திரபாபு நாயுடு!

2019-ல் ஆந்திர முதல்வராக ஆட்சிக்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்த போதிலும், தனக்கு எதிரணியில் இருந்த சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை நெருக்கடிக்குள்ளாக்கவும் தயங்கவில்லை. குறிப்பாக, ஜெகன் அரியனை ஏறிய கையோடு செய்த முதல் வேலையே சந்திரபாபு நாயுடுவின் பிரஜா வேதிகா கட்டடத்தை இடித்ததுதான். ஜெகனுக்கு முன்பாக ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு கிருஷ்ணா நதிக்கரை அருகே ஒரு வீட்டையும், கட்சியினர் விருந்தினர்களை சந்திப்பதற்காக ரூ.5 கோடியில் பிரஜா வேதிகா என்ற கட்டடத்தையும் கட்டியிருந்தார். அந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு `சந்திரபாபு நாயுடு கட்டிய பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விதிமுறைகளை மீறி, ஆபத்தான முறையில் நதிக்கரைக்கு அருகே கட்டப்பட்டிருக்கிறது' என்று குற்றம்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி அந்த கட்டத்தை இடிக்க உத்தரவிட்டார். ஜேசிபி மூலம் சந்திரபாபு விரும்பி கட்டிய கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அதன்பிறகு, 2021 நவம்பர் மாதம் நடைபெற்ற ஆந்திர சட்டமன்றக் கூட்டத்தொடரில் சந்திரபாபு நாயுடுவை தகாத வார்த்தைகளால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அவமதித்த சம்பவமும் அரங்கேறியது. குறிப்பாக, ஆந்திர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, கூட்டத்தொடரின்போது ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த, ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சந்திரபாபு நாயுடுவைச் சரமாரியாக எதிர்விமர்சனம் செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சட்டப்பேரவையிலிருந்து சந்திரபாபு நாயுடு வெளிநடப்பு செய்தார்.

பிரஜா வேதிகா கட்டடம் இடிப்பு

அதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ``என்னுடைய 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில், நான் பல போராட்டங்களைப் பார்த்திருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். சட்டப்பேரவையில் காரசாரமான வாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் இதுபோன்ற அவமானத்தை நான் சந்தித்ததில்லை! கடந்த 2 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார்கள். என் மனைவியைப் பற்றி ஆளுங்கட்சியினர் தவறான வார்த்தைகளால் அவதூறு பேசுகிறார்கள்" என்று கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார். இது ஆந்திர மக்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுதாப அலையை உருவாக்கியது.

கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு

அந்த நிலையில்தான் கடந்த 2023 செப்டம்பரில், சந்திரபாபு தனது ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு ஆந்திர சிஐடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். அதாவது சந்திரபாபுவின் முந்தைய ஆட்சிக்காலத்தில், அமைச்சரவையின் ஒப்புதலே இல்லாமல் திறன் மேம்பாட்டு கழகத்தில் முறைகேடாக சில தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி, அதன் மூலம் 10 % லஞ்சம் பெற்றதாகவும் அதன்மூலம் ரூ.371 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை மீண்டும் தோண்டிய ஜெகன்மோகன் ஆட்சியின் சிஐடி போலீசார் எஃப்.ஐ.ஆர் காப்பி கூட வழங்காமல் வலுக்கட்டாயமாக கைதுசெய்து சிறையிலடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் பேருந்துகளை வழிமறித்து பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். போக்குவரத்து தடைபட்டு ஒட்டுமொத்த ஆந்திராவே ஸ்தம்பித்தது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த பழிவாங்கும் சம்பவம் ஆந்திர மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆந்திரா: பாய்ந்து வந்த பவன் கல்யாண்; கைதில் மலர்ந்த கூட்டணி!

ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவை அன்றைய தினமே சந்திக்க ஓடிவந்தார் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண். மெகா ஸ்டார் சிரஞ்சீவின் தம்பியும், பவர் ஸ்டார் பட்டத்துடன் முன்னணி நடிகருமாக இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்த பவன் கல்யாணுக்கு இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு அதிகம் என்பதால், கூட்டத்தோடு சிறைச்சாலையை நோக்கி காரில் புறப்பட்டு வந்தார். அப்போது, அவரை பாதி வழியிலேயே இடைமறித்த ஆந்திர போலீஸ்,``சட்ட ஒழுங்கை கவனத்தில்கொண்டு திரும்பிச் செல்லுங்கள்; உங்களை இதற்குமேல் அனுமதிக்க முடியாது" என தடைபோட்டது. இதனால் அதிருப்தியடைந்த பவன் கல்யாண் தனது கட்சித் தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

பவன் கல்யாண் போராட்டம்

அதன்பின்னர், சந்திரபாபு நாயுடுவை சிறையில் சந்தித்துப் பேசிய பவன் கல்யாண், ``ஆந்திராவின் நலனுக்காக ஜனசேனாவும் தெலுங்கு தேசமும் ஒன்றிணைந்து செயல்படும்!'' என ஜெகன்மோகன் ரெட்டிக்கு சவால் விடும் வகையில் அதிரடியாக அறிவித்தார். அதன்பிறகு பவன் கல்யாணும் பல்வேறு வகையில் ஜெகனால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார். வேறுவகையில் வெவ்வேறு போராட்ட வழக்குகளில் பவன் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கவும்பட்டார்.

பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா: பா.ஜ.க-தெலுங்கு தேசம்- ஜனசேனா: மூன்றையும் இணைத்த பவன் கல்யாண்!

2014 தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றிருந்த சந்திரபாபு நாயுடு, அதன்பிறகு பா.ஜ.கவின் வழக்கமான சித்துவேலைகளால் பல்வேறு வகையில் நெருக்கடிக்குள்ளானார். ஒருகட்டத்தில் பா.ஜ.க செய்த அவமதிப்பை பொறுத்துக்கொள்ளமுடியாமல் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அதேசமயம், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கட்சித் தொடங்கியது முதலே பா.ஜ.க-வுடன் சுமுகமான உறவை மேற்கொண்டுவந்தார். அந்தநிலையில், `ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்தவேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து இருவரும் தேர்தலை சந்திக்கவேண்டும்' என திரியைக் கொளுத்தினார் பவன் கல்யாண். தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்த பாஜக-தெலுங்கு தேசம் இரண்டு தரப்பையும் பரஸ்பரம் சமாதானம் செய்த பவன் கல்யாண், பா.ஜ.க-வுக்கும் சந்திரபாபுவுக்கும் இடையேயான கசப்புணர்வை போக்கி கூட்டணி அமைய வழிவகுத்தார். மேலும், கூட்டணி நலனுக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளையும் விட்டுக்கொடுத்தார்.

தேர்தல் முடிவு: `கிங் மேக்கரான சந்திரபாபு  ...கேம் சேஞ்சரான பவன் கல்யாண்'

சிறைமீண்ட சந்திரபாபு, பவன் கல்யாண், ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்டோர் ஓரணியில் ஒன்றுதிரண்டு ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டனர். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த ஊழல், அரசியல் பழிவாங்கல், தலைநகர் கட்டமைப்பது தொடர்பான குழப்பங்கள், சட்ட ஒழுங்கு பிரச்னைகள், மதுபான கொள்கை, அதிருப்திகள் என அனைத்து விவகாரங்களையும் முன்னெடுத்துப் பேசினர். இதன்விளைவாக, தேர்தல் முடிவில் பாஜக-தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி இமாலய வெற்றிபெற்றது. ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க 8 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. 21 தொகுதிகளில் நின்ற பவன் கல்யாணின் ஜனசேனா அனைத்து போட்டியிட்ட இடங்களிலும் வெற்றிபெற்றது.

மோடி, பவன் கல்யாண் , சந்திரபாபு நாயுடு

ஆந்திர நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 25 தொகுதிகலில் தெலுங்கு தேசம்-16, பா.ஜ.க-3, ஜனசேனா-2 தொகுதிகளிலும் வெற்றியை பதிவுசெய்திருக்கிறது. ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சட்டமன்றத்தில் 11 தொகுதிகளையும், நாடாளுமன்றத்தில் 4 தொகுதிகளை மட்டுமே வென்று மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடு மூன்றாவது முறையாக ஆந்திர முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். அதேபோல, பவன் கல்யாணும் முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவராகவிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from Vikatan Latest news https://ift.tt/yWqk6gT

Post a Comment

0 Comments