USA vs PAK: 'சூப்பர் ஓவரில் அமெரிக்கா திரில் வெற்றி!' - பாகிஸ்தான் எப்படி தோற்றது?

நடப்பு டி20 உலகக்கோப்பையின் முதல் அப்செட் நிகழ்ந்திருக்கிறது. டாலஸில் நடந்த போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று அமெரிக்கா அணி பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது. உலகக்கோப்பையில் தங்களின் முதல் போட்டியையே அதிர்ச்சிகரமான தோல்வியோடு தொடங்கியிருக்கிறது பாகிஸ்தான்.
Pak V USA

'நாங்கள் எந்தவித தயக்கமுமின்றி இப்படியே துணிச்சலான கிரிக்கெட்டைதான் ஆட விரும்புகிறோம். இந்தியா, பாகிஸ்தான் என எந்த அணிக்கு எதிராகவும் எங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டோம்.' என கனடாவுக்கு எதிரான போட்டியை வென்ற பிறகு அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங் படேல் கூறியிருந்தார். இது வெறுமென பேச்சாக மட்டும் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பேசியதை செயலிலும் காட்டினர்.

Pakistan

அமெரிக்க அணிதான் டாஸை வென்று முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் பேட்டிங். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை பாகிஸ்தான் எடுத்திருந்தது. இந்த 159 ரன்களையும் பாகிஸ்தான் சௌகரியமாக எடுக்கவில்லை. தட்டுத்தடுமாறிதான் அடித்திருந்தனர். அதிலும் தொடக்கத்தில் ரொம்பவே தடுமாறியிருந்தனர்.

'பேட்டிங்கில் பவர்ப்ளேயில் அந்த 6 ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம். அதேமாதிரி பௌலிங்கிலும் பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்கவில்லை.' தோல்விக்கு இவைதான் முக்கிய காரணமென சுட்டிக்காட்டியிருந்தார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்.
Babar Azam

பேட்டிங்கில் பவர்ப்ளேயில் 30 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். ரிஸ்வான், உஸ்மான் கான், ஃபகர் சமான் என டாப் ஆர்டர் மொத்தமும் காலி. க்ரீஸில் நின்ற கேப்டன் பாபர் அசாமும் ரொம்பவே தடுமாறிக் கொண்டிருந்தார். ரொம்பவே தற்காப்பு அணுகுமுறையோடு ஆடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 50 க்கும் கீழாகவெல்லாம் இருந்தது. நாஸ்தோஷ், சவுரப், அலி கான், ஜாஸ்தீப் சிங் ஆகியோர் அமெரிக்கா சார்பில் சிறப்பாக வீசியிருந்தனர்.

பாபர் அசாம் அமைதியாக ஆட ஒரு கட்டத்தில் ஷதாப் கான் கொஞ்சம் நன்றாக அதிரடியாக ஆடி பாகிஸ்தான் அணியின் ரன் வேகத்தை கொஞ்சம் உயர்த்தினார். இவரால்தான் பாகிஸ்தான் அணி 159 ரன்களை எட்ட முடிந்தது. இப்திகார் அஹமது, ஷாஹீன் அப்ரிடி ஆகியோரும் கடைசி நேரத்தில் கொஞ்சம் உதவியிருந்தனர். பாபர் அசாம் 43 பந்தில் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்திருந்தார். முழுமையாக அவர் நினைத்ததை போன்ற ஒரு ஆட்டத்தை அவரால் ஆட முடியவில்லை.

அமெரிக்க அணிக்கு டார்கெட் 160. நடப்பு டி20 உலகக்கோப்பையில் 160 என்பதே மிகப்பெரிய டார்கெட்தான். அப்படியிருக்க, நஸீம் ஷா, ஷாகீன் ஷா, ஹரீஸ் ராஃப், ஆமிர் என அபாயகரமான பௌலர்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் எளிதில் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு.

Monank Patel
'டாப் 3 வீரர்கள் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டும் என நினைத்தோம். நினைத்ததை போலவே பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதுவும் வெற்றிக்கு முக்கிய காரணம்.' என அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங் படேல் பேசியிருந்தார்.

ஓப்பனர் ஸ்டீவன் டெய்லர் பவர்ப்ளேக்குள் அவுட் ஆகியிருந்தாலும் மோனாங் படேலும் ஆண்ட்ரீஸ் கோஸூம் கூட்டாக இணைந்து 68 ரன்களை அடித்திருந்தனர். இந்த பார்ட்னர்ஷிப்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒரு 8 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணியின் பௌலர்களை நேர்த்தியாக எதிர்கொண்டிருந்தனர். ஹரீஸ் ராஃப் இந்த கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தார். மோனாங் படேல் அரைசதம் அடித்து ஆமிரின் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கொஞ்சம் பாகிஸ்தான் ஆட்டத்துக்குள் வந்தது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தினர். ஆனாலும் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஆரோன் ஜோன்ஸ் க்ரீஸில் இருந்தார்.

இந்த ஓவரில் அவர் ஒரு சிக்சர் அடிக்க கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை எனும் போது நிதிஷ் குமார் ஒரு பவுண்டரியை அடித்தார். போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் அமெரிக்கா முதலில் பேட் செய்து 18 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் இந்த ஓவரை வீசியிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரி பாகிஸ்தான் தான் என்பதை போலவே இந்த ஓவர் இருந்தது. ஆமீர் மொத்தமாக 3 ஒயிட்களை இந்த ஓவரில் வீசியிருந்தார். 3 ஒயிட்கள் மூலம் 7 ரன்களை கொடுத்திருந்தார். பாகிஸ்தான் அணி கன்னாபின்னாவென மிஸ் பீல்ட்களை செய்திருந்தது. ஆரோன் ஜோன்ஸ், ஹர்மீத் ஆகியோர் சேர்த்த 11 ரன்களோடு இந்த 7 ரன்களும் சேர அமெரிக்காவுக்கு நம்பிக்கை கூடியது.

Amir

பாகிஸ்தானின் வெற்றிக்கு ஒரு ஓவரில் 19 ரன்கள் தேவை. இப்திகாரும் பகர் சமானும் இறங்கினார்கள். அமெரிக்கா சார்பில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சவுரப் வீசினார். லோ புல் டாஸாக வீசி 3 வது பந்தில் இப்திகாரை காலி செய்தார் சவுரப். கடைசிப் பந்தில் சிக்சர் கொடுக்காமல் வீசினால் போதும் என்ற நிலையில் ஷதாப் கானுக்கு ஒரு ரன்னை மட்டும் கொடுத்து அசத்தி அமெரிக்காவை சூப்பர் ஓவரில் வெல்ல வைத்தார் சவுரப். இப்போது அமெரிக்காவுக்காக ஆடி வரும் சவுரப் இந்தியாவுக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

USA

பேட்டிங், பௌலிங், பீல்டிங் என மூன்றிலுமே பல இடங்களில் பாகிஸ்தான் அணி கடுமையாக சொதப்பியிருந்தது. அதன்வழி கிடைத்த வாய்ப்புகளை அமெரிக்கா சரியாக பயன்படுத்திக் கொண்டது. 'கிரிக்கெட்டை இந்த நாடுகள்தான் ஆட வேண்டும். இவர்கள் ஆடக்கூடாது என்று கிடையவே கிடையாது. கிரிக்கெட் எல்லாருக்குமானது. இன்னும் 10 ஆண்டுகளில் அமெரிக்கா கூட உலகக்கோப்பையை வெல்லலாம்.' என வர்ணனையில் அம்பத்தி ராயுடு பேசிக்கொண்டிருந்தார். உண்மைதான். சரியான சமமான வாய்ப்புகள் கிடைக்கும்போது அசோசியேட் அணிகளும் பெரிய சம்பவங்களை செய்ய முடியும் என்பதற்கு இந்த போட்டியும் ஒரு உதாரணம்.



from Vikatan Latest news https://ift.tt/3BEN90p

Post a Comment

0 Comments