IND v BAN: வேகம் கூட்டிய விராட், ஹர்திக்; வளைத்துப் போட்ட பௌலர்கள் - வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா!

"முதலில் பந்துவீசி இந்திய அணியை குறைவான ரன்களுக்குள் சுருட்டுவோம்" எனத் தீர்க்கமாக டாஸில் பேசிவிட்டு போட்டியை தொடங்கிய ஷாண்டோவின் வங்கதேசம் இந்தியாவிடம் பரிதாபமாகத் தோற்றிருக்கிறது. சூப்பர் 8 சுற்றில் இரண்டு போட்டிகளை வென்றிருப்பதன் மூலம் இந்திய அணி ஏறக்குறைய அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டது.
IND v BAN

"டாஸைத் தோற்றாலும் நாங்களும் முதலில் பேட்டிங்தான் செய்ய வேண்டும் என நினைத்திருந்தோம். அதனால் மகிழ்ச்சிதான். நாங்கள் அதே அணியுடன் ஆடுகிறோம். மாற்றம் ஏதும் இல்லை" என பாசிட்டிவ்வாக ஆரம்பித்தார் ரோஹித். பேச்சில் மட்டுமில்லை, பேட்டிங்கிலுமே ரோஹித் ரொம்பவே பாசிட்டிவ்வாகத் தொடங்கி வைக்க ஒட்டுமொத்த இந்திய பேட்டர்களும் நேர்மறையான அணுகுமுறையையே கைகொண்டிருந்தனர்.

"இந்திய வீரர்கள் 20-30 ரன்களை வேகவேகமாக அடித்துவிட்டு அவுட் ஆகும் அணுகுமுறையை நாம் இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டோம். இப்படியான அணுகுமுறையை கொண்டாட வேண்டிய நேரமிது. அதுவும் முதலில் பேட் செய்கையில் கட்டாயம் பாராட்டிய ஆக வேண்டும். இதுவரைக்கும் இந்திய அணி வெளிக்காட்டியிருக்கும் இண்டண்ட் அருமை!" என அஸ்வின் ட்வீட் செய்திருந்தார். டி20 யின் ட்ரெண்ட் மாறிக்கொண்டிருக்கிறது. நின்று அரைசதம், சதம் அடித்துக்கொண்டிருப்பதை விட அட்டாக்கிங் மனநிலையில் வேகவேகமாக ஆளுக்கு 20-30 ரன்களை அடிப்பதே சிறந்தது எனும் நிலை இயல்பானதாகிக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த ஐ.பி.எல்தான் இதற்கு சரியான சாட்சி.

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் முழுமையாக அப்படியில்லையென்றாலும் இந்திய அணி கொஞ்சம் முந்திக் கொண்டு அந்தப் பாணியை கையில் எடுப்பது சிறப்பான விஷயமே. ரோஹித் 23 ரன்களைத்தான் எடுத்திருந்தார். ஆனால், ஸ்பின்னர்களை நன்றாக அட்டாக் செய்தார். ஷகிப் அல் ஹசனின் ஓவரில் இரண்டு பவுண்டரிக்களையும் சிக்ஸரையும் அடித்தார். ஷகிப்பிடமே விக்கெட்டையும் இழந்தார். பெரிய ஷாட்டுக்கு முயன்று அதே அட்டாக்கிங் மனநிலையில்தான் விக்கெட்டையும் விட்டிருந்தார். விராட் கோலி இதுவரைக்கும் அவர் மீதான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் ஆடவில்லை. அவர் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், இன்று நன்றாகவே ஆடியிருந்தார். ஸ்பின்னர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் என இருதரப்பையும் க்ளீன் ஹிட்டாக அடித்து அசத்தினார்.

Virat

ஷகிப்பை மடக்கி லெக் சைடில் சிக்ஸர் அடித்தார். தன்ஷீமின் முதல் ஓவரிலேயே பவுண்டரி. முஷ்டபிஷீரை லாங் ஆனில் 94 மீட்டருக்கு நோ லுக் சிக்ஸர், லெக் ஸ்பின்னர் ரிஷாத்தை இறங்கி வந்து தலைக்கு மேல் சிக்ஸர் என கோலி அட்டகாசம் செய்தார். அரைசதத்தை கடந்துவிடுவார் என நினைக்கையில் தன்ஷீமின் பந்தில் இறங்கி வந்து லாங் ஆனில் அடிக்க முயன்று மிஸ் ஆகி ஸ்டம்பைப் பறிகொடுத்தார். அதே ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு அடுத்த பந்திலேயே எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார் சூர்யா. கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்திருந்த சூர்யா, இந்த முறை வெறும் 6 ரன்களில் வெளியேறினார். ஆனாலும் இந்திய அணியின் வேகம் குறையவில்லை. மெதுவாக ஆரம்பித்த பண்ட், முஷ்டபிஷுரையும் ரிஷாத்தையும் அட்டாக் செய்து வேகமாக 20 ரன்களைச் சேர்த்துவிட்டு தன் பணியை செவ்வென செய்துவிட்ட திருப்தியில் வெளியேறினார். பின்னர் ஹர்திக்கும் துபேவும் கூட்டணி சேர்ந்தனர்.

இருவருமே செட்டில் ஆக இரண்டு ஓவர்களை எடுத்துக் கொண்டனர். அதன்பின் எந்தத் தயக்கமும் இல்லை, அதிரடிதான். ஷகீப், முஷ்டபிஷூர், ரிஷாத் என மூவரின் ஓவரிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டு 34 ரன்களில் ரிஷாத்தின் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார் துபே. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை எடுத்திருந்தது. இதில் 32 ரன்களை ஹர்திக் சேர்த்துக் கொடுத்திருந்தார். முஷ்டபிஷூர் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை அடித்து அரைசதத்தையும் கடந்தார். இந்திய அணி 196 ரன்களை எட்டியது.

Hardik

பௌலிங்கிற்குப் பெரிதாக ஒத்துழைக்காமல் முழுக்க முழுக்க பேட்டர்களுக்குச் சாதகமாக பிட்ச் இருந்ததால் வங்கதேசம் எதுவும் சவாலளிக்குமா எனும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. இந்தப் போட்டியையும் இந்திய சௌகரியமாக வென்றுவிட்டது. தன்ஷீத்தும் லிட்டன் தாஸூம் ஓப்பனிங் வந்தார்கள். இந்தக் கூட்டணி 35 ரன்களைச் சேர்த்திருந்தது. அந்த சமயத்தில் பவர்ப்ளே முடியப்போகிற தறுவாயில் அந்த அழுத்தத்திலேயே லிட்டன் தாஸ் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஹர்திக்கின் பந்தில் அவுட் ஆனார். குல்தீப்தான் மிடில் ஓவர்களில் வேக வேகமாகாக அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை நிலைகுலைய வைத்தார்.

Kuldeep
தன்ஷீத், ஹிரிதாய், ஷகிப் என மூவரும் குல்தீப்பிடம் வீழ்ந்தனர். இந்தச் சமயத்திலேயே ரன்ரேட் எகிற ஆரம்பித்துவிட்டது. பும்ரா தன் பங்குக்கு வங்கதேசத்து கேப்டன் சாண்டோவை வெளியேற்றினார். தேவைப்பட்ட ரன்ரேட் 20க்கும் மேல் எங்கேயோ சென்றுவிட்டது. அழுத்தத்திலேயே சில பேட்டர்கள் விக்கெட்டை விட்டனர். வங்கதேசம் 50 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு பரிதாப தோல்வியை அடைந்தது.
India

பேட்டிங் பிட்ச்சில் வங்கதேசத்தை எந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்த விடாமல் இந்திய பௌலர்கள் அசத்தியது மிகச்சிறப்பான விஷயம். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏறக்குறைய அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



from Vikatan Latest news https://ift.tt/xwTuF0a

Post a Comment

0 Comments