சென்செக்ஸ் @ 80000... தேவை, நிதானம்!

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த வாரத்தில் 80000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாவது இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் முக்கியமான மைல்கல் எனலாம். இந்த ஆண்டின் முடிவிலேயே சென்செக்ஸ் புள்ளிகள் 90000 புள்ளிகளைத் தொடும் என இப்போதே சிலர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

அண்மைக் காலங்களில் இந்தியப் பங்குச் சந்தை வளரும் வேகத்தைப் பார்த்தால், மகிழ்ச்சியாக இருக்கிறது; கூடவே, சற்று பயமாகவும் இருக்கிறது. காரணம், 10 ஆண்டுகளுக்குமுன் இருந்த புள்ளிகளைவிட இரண்டு மடங்கு கூடுதல் புள்ளிகளைப் பெற்று அபார வளர்ச்சி கண்டிருக்கிறது சென்செக்ஸ். 2019-ல் 40000 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், ஐந்தே ஆண்டுகளில் 100% அதிகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் சென்செக்ஸ் 20000 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது.

பங்குச் சந்தைப் புள்ளிகள் இப்படி அதிவேகமாக உயர என்ன காரணம்? உலக அளவில் இந்தியாவின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி; வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்வது; விரைவில் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும்; விரைவில் தாக்கலாக இருக்கும் மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான பல அறிவிப்புகள் வரலாம் எனப் பல எதிர்பார்ப்புகள் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

இப்படி எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எதிர்பார்ப்புகள் எல்லாமே நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, அமெரிக்க ‘பெட்’ அமைப்பு வட்டி விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கையை இந்த ஆண்டு எடுக்காமலே போகலாம். மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புகள் வராமலே போகலாம். அப்போது பங்குச் சந்தையானது இப்போது அடைந்து வருவதைப் போன்ற வேகமான வளர்ச்சியை அடையாமல் போகலாம்; அவ்வளவு ஏன், இறக்கம்கூட காணலாம்.

இப்படி, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நிலையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது மிக மிகக் கவனத்துடன் இருப்பது நல்லது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத் தேவைப்படாத பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, நன்கு விஷயம் தெரிந்த நிபுணருடன் கலந்தாலோசித்த பின்பே முதலீடு செய்வது, முதலீடு செய்ததை மாதத்துக்கு ஒருமுறையாவது பார்த்து கண்காணிப்பது, குறுகிய காலத்தில் நஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவதைப் பெறுவது எனப் பல புதிய ஒழுங்குகளை நமக்குள் உருவாக்கிக்கொள்வது அவசியம்.

பங்குச் சந்தை என்றாலே ஏற்றம்தான். குறுகிய காலத்தில் பெரும் லாபம் குவித்துவிடலாம் என்கிற பேராசையில் அதில் இறங்கினால், பெருநஷ்டத்தை சந்திக்க வேண்டிய அவலம்கூட ஏற்படலாம்! நாம் எந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, நம் முதலீட்டைப் பலவற்றிலும் பரவலாக்கி வைத்திருப்பது போன்ற யுக்திகளை முதலீட்டாளர்கள் பின்பற்றாவிட்டால், பல பாடங்களைக் கற்றுகொள்ள வேண்டிய நிலையே ஏற்படும்!

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/pBQlms3

Post a Comment

0 Comments