நோட்டமிட்டு வெட்டி சாய்த்த கும்பல்; சென்னையை பரபரப்பாக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை - என்ன நடந்தது?

சென்னை பெரம்பூர், வேணுகோபால்சாமிகோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). வழக்கறிஞரான இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தார். தற்போது அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் இன்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை தன்னுடைய ஆதரவாளர்கள் பெரம்பூரைச் சேர்ந்த வீரமணி (65), பாலாஜி ஆகியோருடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மூன்று பைக்கில் வந்த ஆறுபேர் கொண்ட கும்பல், திடீரென ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து வெட்டத் தொடங்கியது. இந்த திடீர் தாக்குதலில் அவர் நிலைகுலைந்தார். அதைப்பார்த்த வீரமணியும் பாலாஜியும் தடுத்தனர். அதனால் அவர்களுக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் ஆம்ஸ்ட்ராங் வெட்டப்பட்ட சம்பவம் காட்டு தீ போல பரவியது. அதனால் அந்தப்பகுதியில் ஏராளமானவர்கள் குவியத் தொடங்கினர். இதைத் பார்த்த அந்த ஆறுபேர் கொண்ட கும்பல், பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

ஆம்ஸ்ட்ராங் கொலை

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். அவருடன் வெட்டுப்பட்ட பாலாஜி, வீரமணி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட தகவலைக் கேள்விபட்டதும் அவரின் ஆதரவாளர்கள் குவிய தொடங்கினர். இதையடுத்து சென்னை கூடுதல் கமிஷனர் அஸ்ரா கர்க் உத்தரவின்பேரில் போலீஸ் டீம் குவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அதனால் அங்கேயும் பகுஜன் சமாஜ் கட்சியினர், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்தனர். அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை

இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து நாட்டு வெடிகுண்டு, இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் அரசியல் படுகொலைகள் நடந்து வருவதாகவும் எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

ஆம்ஸ்ட்ராங் சடலம் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இயக்குநர் ரஞ்சித், நடிகர் தினா உள்பட பலர் வந்தனர். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் அங்கு குவிந்திருக்கிறார்கள்.

இந்தக் கொலை குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் மூன்று தடவை எச்சரிக்கை விட்டிருந்தது. அதுதொடர்பாக அவரை அலெர்ட்டாக இருக்கும்படியும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை ஒரு டீம் கண்காணித்து வந்திருக்கிறது. அந்த டீம்தான் இந்தக் கொடூர கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

ஆம்ஸ்ட்ராங்கை பொறுத்தவரை கட்சி பணியில் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். அதோடு சில விவகாரங்களிலும் தலையிட்டு வந்தார். அதனால் எப்போதும் அவரைச் சுற்றி ஒரு டீம் இருக்கும். மேலும் அந்த டீமில் உள்ளவர்களும் பாதுகாப்புடன்தான் இருப்பார்கள். அதையெல்லாம் தெரிந்த ஒரு டீம்தான் ஆம்ஸ்ட்ராங்கைக் கண்காணித்து இந்தக் கொலையைச் செய்திருக்கிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம். அதன் பிறகுதான் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/seq2uHC

Post a Comment

0 Comments