செக்ஸ் உணர்வை ஆண்கள்தான் முதலில் வெளிப்படுத்த வேண்டுமா? | அவளின் சிறகு

அன்றைய ரயில் பயணத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. என் பைகளை சீட்டின் அடியில் அடுக்கிவிட்டு அமர்ந்தேன். எனக்கு எதிரில் கிராமத்திலிருந்து சென்னை நோக்கி வரும் குடும்பம் ஒன்று அமர்ந்திருந்து. ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் கொண்டு வந்திருந்த புளியோதரையை வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ' ரெண்டு தட்டுதான் இருக்கு. அண்ணணும், அப்பாவும் சாப்பிட்டதும், நாம சாப்பிடுவோம்' என அந்த அம்மா உணவைப் பரிமாற ஆரம்பித்தார். 13 வயது மதிக்கத்தக்க சிறுமி  அவளின் அண்ணன் சாப்பிடுவதையே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள். தட்டு அவளின் கைக்கு வந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தவளிடம், 'பொட்டப்புள்ள இப்படியா  சாப்பாட்டை  சிந்துவ...சிந்தாம சாப்பிடு' என அம்மா அதட்டினாள். சாப்பிட்டு முடித்து அண்ணணும், தங்கையும் ஒரே செல்லில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென சத்தமாக சிரிப்பு சத்தம் எழுந்தது. 'பொட்டப்புள்ள பொது இடத்துல இப்படியா சத்தமா பல்ல பல்ல காட்டி சிரிக்கிறது. பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க' என அந்த அம்மா சிறுமியிடம் மீண்டும் கடிந்து கொண்டாள். இதைப் பார்த்தபோது என் சிறுவயதில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. 

அவளின் சிறகு

13 வயதில் வாடகை சைக்கிள் ஓட்டுவதற்காக அம்மாவிடம் காசு கேட்டபோது அம்மா தர மறுத்துவிட்டார். ஆனால், ஓட்டியே ஆக வேண்டும் என மனது அடம்பிடிக்க, கிச்சனில் இருந்த இரண்டு ரூபாயை சொல்லாமல் எடுத்துவிட்டேன். அடுத்த தெருவில் நான் வாடகை சைக்கிள் ஓட்டுவதை அம்மாவிடம் யாரோ பற்ற வைத்துவிட்டார்கள். கோபத்துடன் வந்தவர், ஓங்கி கன்னத்தில் அறைந்து சைக்கிளுடன் இழுத்துச் சென்றார். திருடியது தவறுதான். ஆனால், என் அத்தை மகன் முன்னால் என்னை அறைந்தது எனக்கு அவமானமாக இருந்தது. அதனால், அம்மாவின் மீது கோபம். அன்றிரவு சாப்பிடாமல் படுத்திருந்தேன். இரவு பத்துமணிக்கு வந்த அப்பா, என்னை சமாதானம் செய்ய வந்தபோது, ' பொட்டப்புள்ளைக்கு என்ன அம்புட்டு ரோஷம். சாப்பிடாம படுத்தா படுக்கட்டும்...பசிச்சா, தானா வந்து திங்கும். நீங்க போயி கொஞ்சுனா, நாளைக்கு கல்யாணம் ஆகிப் போற இடத்துல அவமானப்பட்டு தான் நிக்கணும்' என அம்மா கடிந்துகொண்டாள். பொண்ணுக்கு ரோஷம் இருக்கக்கூடாதா என்று கேட்கத் தெரியாத வயது அது. ஆனாலும், சாப்பிடாமல்தான் படுத்தேன். அன்றிலிருந்து இன்று வரை இந்தக் கேள்வி இன்னும் தொடரத்தான் செய்கிறது.

 'ஆண் அழக்கூடாது' என அவர்களின்  உணர்வை வீரத்தோடு ஒப்பிட்டு கட்டுப்படுத்திய சமூகம், பெண் சிரித்தாலோ, கோபப்பட்டாலோ, சுயமரியாதை எதிர்பார்த்தாலோ, அவளுக்கு வேண்டிய ஒன்றுக்கு ஆசைப்பட்டாலோ... இதெல்லாம் பொட்டப்புள்ளைக்கு வேண்டாத வேலை என்றோ, திமிர் என்றோ, தேவையில்லாத ஒன்று என்றோ அவளின் எதிர்காலம் சார்ந்து பேசி, அவளின் தேவைகளை, உணர்வுகளை கேள்விக்குறியாகவோ, முற்றுப்புள்ளியாகவோ வைத்துவிடுவது எதனால்? இதை பற்றி பல நாள் யோசிக்கும்போதெல்லாம், 'எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்றோம்' என்ற வாக்கியத்துக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றே எனக்கு தோன்றும்.

அப்பா - மகள் பாசம்

இன்று மகள்களை தேவதைகளாகக் கொண்டாடும் அப்பாக்கள், மகள் கேட்டதை வாங்கிக் கொடுக்கும் போது, 'செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க' என்ற வசனம் கட்டாயம் முன்வைக்கப்படும். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்து, அதன்பின் கிடைக்காமல் போகும்போது, அல்லது குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக என எல்லா ஆசைகளையும் அடக்கி வாழ்பவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும். அந்த வலியின் ஆழத்தை அப்பாக்கள் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம்தான்.

என் தோழி ஒருத்தி நீண்ட நாள் கழித்து போன் செய்தாள். சென்னையில் பெரிதாக யார் அறிமுகமும் இல்லை என்று உதவி கேட்டாள். அன்று காலை எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தபோது. ஏதோ வேலைக்கான இன்டர்வியூக்கு வந்திருப்பதாகச் சொன்னாள். எதுவும் கேட்டுக்கொள்ளாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். காலை உணவை முடித்தபின், ' எனக்காகவும், என் குழந்தைக்காகவும் நான் வேலைக்குப் போகணும்னு முடிவுபண்ணிட்டேன்.

அவளின் சிறகு - 10

வீட்டுக்காரர் நல்ல வேலையில் இருக்காரு.. கை நிறைய சம்பளம் வாங்குறாரு. ஆனா, என் உணர்வுகளுக்கு சுத்தமா மதிப்பு கொடுத்ததே இல்ல. நான் ஆசைப்பட்ட சாப்பாட்டை சாப்பிடணும்னா, பிடிச்ச உடையைப் போடணும்னா, அம்மா வீட்டுக்குப் போகணும்னா ஆயிரம் முறை கெஞ்சணும். 'டைம் இல்ல', 'எனக்கு இந்த சாப்பாடு பிடிக்காது', 'உனக்கு இந்த டிரெஸ் நல்லா இல்ல', 'உனக்கு எதுக்கு வேலை'னு என்னோட உணர்வுகளை ஈஸியா கடந்திடுவாரு. சின்ன விஷயங்களுக்கு சந்தோஷப்பட்டு ரொம்ப நாள் ஆயிருச்சு. சந்தோஷங்கள் ஏக்கமா மாற ஆரம்பிச்சு, அழுத்தமாகி, என் மீதே எனக்கு கோபம் வந்துச்சு. தொலைச்ச என்னைத் தேடும் போதுதான் சுயமரியாதையும் சேர்ந்து தொலைஞ்சது தெரிஞ்சுது. வாழ்க்கையில் சுயமரியாதையைத் தேட ஆரம்பிச்சேன். என் நிலைமையை வீட்ல சொன்னபோது, ' குழந்தை பொறந்தா எல்லாம் சரியாகும்' னு சொன்னாங்க. குழந்தை பொறந்த பிறகும் எதுவும் மாறல. 'புள்ள பொறந்துருச்சு புள்ளைக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'னு சொல்ல ஆரம்பிச்சாங்க. இந்த அந்தா -னு நானும் பத்து வருசத்தை ஓட்டிட்டேன். எங்க வீட்டுல இருக்க குப்பைத்தொட்டியும் நானும் ஒரே மாதிரிதான் இருந்தோம். குப்பைத்தொட்டியை சுத்தம் செய்யக்கூட நான் இருந்தேன். ஆனா, எனக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்ல....'பொறுத்துக்கோ', 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோ', 'இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் எதிர்பார்க்கக்கூடாது'ங்கிற பதில்தான் என்னை துரத்துச்சு. 

கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பிச்சப்போ, 'சும்மா வீட்ல இருக்க உனக்கு எதுக்கு இவ்வளவு ரோஷம், எதுக்கு மரியாதை'னு பேச ஆரம்பிச்சாரு. இதை வீட்ல சொன்னபோது, 'புள்ள வளர ஆரம்பிச்சிருக்கு. இப்போ போயி சண்ட போடாத. புள்ள மனசு பாதிக்கும். இன்னும் கொஞ்சம் வருசம்தான் புள்ள வளர்ந்துட்டா எல்லாம் சரியாகிரும்' னு சொல்றாங்க. என் புள்ளைக்காகத்தான் வாழ்க்கை. அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்ல. ஆனா, புள்ளைக்காக என்னை அழிச்சுட்டு, தொலைச்சுட்டு வாழத்தேவையில்ல. அதான் வேலை தேடலாம்னு சென்னை வந்துட்டேன். இருட்டுல நின்னு வழிகாட்டுறதைவிட வெளிச்சதுல நின்னு வழிகாட்டுறது நல்லதுனு தோணுச்சு. இப்ப கூட, ' நீ என்னதான் செய்யுறேன்னு பார்ப்போம், எப்படி புள்ளைய வளர்க்கிறனு பார்ப்போம்'னு சாபம் விட்டுதான் அனுப்பிச்சாங்க' என்று அவள் சொன்னபோது, வெறித்து நின்ற அவளின் கண்களில் கோபம், தேடல், அழுகை, பயம் எல்லாம் தெரிந்தன. இப்படித்தான் இருக்கிறது பெருவாரியான பெண்களின் நிலை.

அவளின் சிறகு

உணர்வு தேடலில் வெளிவரும் பெண்களை, 'ஒழுங்கா வாழத்தெரியல' என்ற வார்த்தையைத்தானே சொல்கிறது இந்தச் சமூகம். இதை பொதுவெளியில் பேசினால், 'பெண்களின் நிலைமை மாறிருச்சு, முன்ன மாதிரியெல்லாம் இல்ல. என் மனைவியை, அம்மாவை, மகளை நான் ராணி மாதிரி பார்த்துக்குறேன். அவங்க சொல்றதை தான் குடும்பமே கேட்கிறோம்' என்று சொல்லும் ஆண்கள் அதிகம். அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், ராணிபோல் வாழ்தல் என்பது ராணியாக வாழ்வதிலிருந்து வேறுபட்டது. இதில் ஆண்களை மட்டும் குறை சொல்லமுடியாது. ஆண்கள் ஆணாதிக்கத்தின் கருவியாக வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். குழந்தைகளை ஆண் - பெண் வேறுபாடுடன் வளர்க்கும் பெண்களிடம் மாற்றம் வேண்டும். ஆனால், அவர்களுக்கு பழக்கியதைத் தானே அவர்கள் தன் குழந்தைகளுக்கு பழக்குகிறார்கள்...

பெண்கள் அழுகும்போது, 'இப்படி அழுதுட்டே இருந்தா வீடு வெளங்குமா', கோபப்படும் போது, 'ஆனாலும், பொம்பளைக்கு இவ்ளோ ஆங்காரம் ஆகாதுப்பா. இதெல்லாம் குடும்பத்துக்கு லாயக்கே இல்ல', சிரிக்கும்போது, 'பொறுப்பா இருக்கத் தெரியல, இதெல்லாம் எங்க குடும்பத்தை கவனிச்சுக்கப்போகுது', மரியாதை எதிர்பார்க்கும் போது, 'பொண்ணுக்கு இவ்வளவு திமிர் ஆகாது' என ஒவ்வோர் உணர்வையும், வார்த்தைகளால் அறுப்பது என்பது ரோஜா பூக்களின் மீது மின்சாரம் பாய்ச்சுவதற்கு சமம்தானே...

தேயும் தாம்பத்யம்

இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்றால்,  தனக்கு செக்ஸ் தேவை இருப்பதையோ, அல்லது வேண்டாம் என்பதையோகூட அவ்வளவு எளிதாக பெருவாரியான பெண்களால் எளிதில் சொல்லிவிட முடியாது. இன்றும் செக்ஸ் என்ற உணர்வை முதலில் முன்னெடுப்பது பெரும்பாலான தாம்பத்திய வாழ்க்கையில் ஆண்களாகவே இருப்பார்கள்.

ஒவ்வொரு முறை உணர்வுகள் கொல்லப்படும்போதும், பெண்களின் சிரிப்பிற்கு, கோபத்திற்கு பின்னால் பறக்க வேண்டிய பட்டாம்பூச்சியின் சிறகுகளை யாரோ பிடித்து வைத்துக்கொண்டு அழகு பார்ப்பது போல்தான் தோன்றுகிறது. சுயமரியாதை என்ற ஒன்றை பொதுவெளியில் பேசும் போதெல்லாம், 'வாங்க, போங்க'னு மரியாதை கொடுக்கிறோம்' , 'சம்பாதிக்க வேலைக்கு அனுப்புறோம்', 'பிடிச்ச டிரெஸ் போட சுதந்திரம் கிடைச்சிருக்கு', இன்னும் என்னதான் எதிர்பார்க்கிறீங்க என்ற கேள்விகளை நண்பர்கள் முன்வைப்பதுண்டு. சின்ன தேவைகளுக்கு, ஆசைகளுக்குகூட யாருடைய அனுமதியையோ எதிர்பார்க்கிறோமே அதற்குதான் முற்றுப்புள்ளி வேண்டும்.  'வாங்க, போங்க' என்று அழைப்பதும், 'உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க, கனவுகளுக்காகப் போராடுங்க, தேவைகளுக்காக ஓடுங்க உங்கள் மீது எந்த விமர்சனமும் முன்வைக்கமாட்டோம்' என்பதும் ஒன்றில்லையே.

அவளின் சிறகு

அழுகை, கோபம், வெறுப்பு, இயலாமை, மகிழ்ச்சி இவற்றையெல்லாம் அடக்கி 'உணர்வுக்கொலை' செய்வதென்பது தற்கொலையைவிட கொடூரமானது. ஆனால், அந்த உணர்வுக்கொலையை அனுதினமும் ஓராயிரம் முறை பெண்கள் செய்துகொள்கிறோம். இதெல்லாம் இன்றைய நிலைமை இல்லை. பழைய கதையைப் பேசாதீர்கள் என்று சொல்வதற்கு முன்னால், மனப்பூர்வமாக உங்கள் குடும்பத்து பெண்களிடம் அமர்ந்து பேசுங்கள். அவர்களின் எந்த உணர்வை மறைத்து இப்போது உங்கள் முன் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை' என்ற பதில்கூட உணர்வுக்கொலையின் காற்புள்ளிதான்.

அழுத்தமாகக் கேளுங்கள். சத்தமாக சிரிக்கவோ, கோபப்படவோ, அழவோ, கொட்டித்தீர்க்கவோ' ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். கொட்டித்தீர்க்க ஆயிரம் உணர்வுகளை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் உணர்ந்த பிறகு, திறந்த மனதுடன் அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். கேட்காமல் கிடைப்பதே உரிமை. அதுவே சுகம். உணர்வுகளைக் கொட்டித்தீர்த்த பறவையின் சிறகுகள் உங்கள் கண்முன்னே விரிந்து பறக்கின்றன பாருங்கள்.

சிறகுகள் இன்னும் வேகமாக விரியட்டும்.



from Vikatan Latest news https://ift.tt/SR09NxL

Post a Comment

0 Comments