`சொத்து விவரங்கள் சமர்பிக்காவிட்டால் சம்பளம் கிடையாது'- 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த யோகி

உத்தரப்பிரதேச அரசு, அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக அனைவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 17.88 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அரசு இணையதளத்திற்குச் சென்று தங்களது சொத்து விவரங்களை அறிவிக்கவேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த விவரங்களைத் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் பெரும்பாலானவர்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து இக்காலக்கெடு கடந்த ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இதுவரை வெறும் 26 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை அறிவித்து இருக்கின்றனர்.

யோகி ஆதித்யநாத்

இன்னும் 13 லட்சம் பேர் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை. அரசு பல முறை காலக்கெடுவை நீட்டித்தும் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத காரணத்தால், இப்போது பிறப்பித்துள்ள உத்தரவு இறுதி உத்தரவாகப் பார்க்கப்படுகிறது. மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் இது தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லையெனில், அவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாநில அமைச்சர் டேனீஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், ``முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஊழல் விவகாரத்தில் எந்த வித சமரசமும் செய்துகொள்ளாது என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது" என்றார்.

ஆனால் அரசின் இந்நடவடிக்கையை சமாஜ்வாடி கட்சி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஸ்தோஷ் வர்மா அளித்துள்ள பேட்டியில், ''மாநில அரசு இத்திட்டத்தை 2017-ம் ஆண்டே ஏன் கொண்டு வரவில்லை. தங்களது அரசு ஊழியர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் இத்திட்டத்தை மாநில அரசால் இன்னும் செயல்படுத்த முடியவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். மாநில தலைமைச் செயலாளர் இது தொடர்பாகப் பணியாளர் நலத்துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை பணியாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அனைத்து கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்களுக்கு அனுப்பி இருக்கிறார்.



from Vikatan Latest news https://ift.tt/IquSzMX

Post a Comment

0 Comments