திருச்சி எஸ்.பி மீது அவதூறு கருத்து... நாம் தமிழர் கட்சியினர் 25 பேர் மீது வழக்கு; இருவர் கைது!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி மாவட்ட தி.மு.க-வைச் சேர்ந்த அருண் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரை திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், அவர் கைது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து அவதூறாக பேசியுள்ளதாகவும், அதேபோல அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரும் வருண் குமார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்பட்டது.

மேலும், சமூக வலைதளங்களில் வருண் குமார் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும், ஆபாசமாகவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் கருத்துக்களை பரப்பி உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், இது குறித்து திருச்சி தில்லை நகரில் வசிக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மிரட்டல் விடுப்பது, ஒரு நபரை அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவது, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் மற்றும் 22 பேர் மீது திருச்சி மாநகரம், தில்லைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைதானவர்கள்

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கண்ணன் மற்றும் மதுரையை சேர்ந்த திருப்பதி ஆகிய இருவரை தில்லைநகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 1 நீதிபதி சுபாஷினி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் 16 - ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் இது குறித்து பேசுகையில், "இருவரையும் கைது செய்த போலீஸார், '10 நிமிடத்தில் அனுப்பி வைத்து விடுவோம்' எனக்கூறி அழைத்து சென்றார்கள். எங்கே அழைத்து சென்றார்கள், எதற்காக அழைத்து சென்றார்கள் என எதையும் கூறவில்லை நாங்களாகவே அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டு வந்தோம். அவர்கள் இருவரையும் போலீஸார் அடித்துள்ளனர். இதனால், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் எந்த தவறையும் செய்யவில்லை" என அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

திருச்சி மாவட்ட எஸ்.பி மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 25 பேர் மீது திருச்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/G03D5q4

Post a Comment

0 Comments