Doctor Vikatan: எங்களுக்கு ஒரு பேத்தியும் பேரனும் உண்டு. பேத்திக்கு 5 வயது, பேரனுக்கு 3. சமீப காலமாக பேத்தி மிகவும் பிடிவாதம் பிடிக்கிறாள். எதற்கெடுத்தாலும் அழுகிறாள். யாருக்கும் தன்னுடைய பொருள்களைத் தர மறுக்கிறாள். மிகுதியாக உண்கிறாள். ஆறேழு இட்லி, சப்பாத்தி சாப்பிடுகிறாள். இன்னும் இன்னும் என்று கேட்டுச் சாப்பிடுகிறாள். படிப்பில் படுசுட்டியாக இருக்கும் அவளுடைய இந்தச் செயல்பாடுகள் எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கின்றன. நாங்கள் என்ன செய்ய வேண்டும்... பேரன் மிகவும் சமர்த்தாகக நடந்து கொள்கிறான். பேத்தியை மாறற ஒரு வழி கூறுங்கள்...
-Uma, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் இருவரையும் ஒருவரோடு ஒருவர் ஒப்பிடக்கூடாது என்பதை பெற்றோர், தாத்தா, பாட்டி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையின் குணாதிசயங்களும் வேறுவேறாகவே இருக்கும். என்னதான் உடன்பிறந்தவர்களாக இருந்தாலும் இருவரும் ஒரே மாதிரி குணங்கள், சிந்தனையுடன் இருக்க வேண்டும் என அவசியமில்லை. உங்கள் பேத்தி, அதிக அளவு சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்னும் இன்னும் என கேட்கும்பட்சத்தில், அந்தக் குழந்தையின் உணவில் போதுமான ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதிசெய்யுங்கள்.
குழந்தையின் உணவில் புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை போதுமான அளவு இல்லாத பட்சத்திலும் பசி அடங்காது. மேலும் மேலும் சாப்பிட நினைப்பார்கள். இட்லியோ, சப்பாத்தியோ கொடுக்கிறீர்கள் என்றால், அதற்குத் தொட்டுக்கொள்ளும் சாம்பார் அல்லது குருமாவில் நிறைய காய்கறிகள் சேர்த்துச் செய்து கொடுக்கலாம். அப்படிச் சாப்பிடும்போது அதிக அளவில் சாப்பிடுவது தவிர்க்கப்படும்.
உங்கள் பேத்தி அவளது வயது மற்றும் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறாளா, அதிக அளவில் இருக்கிறாளா அல்லது எடை குறைவாக இருக்கிறாளா என்று பார்க்க வேண்டும். குழந்தையின் அன்றாட நடவடிக்கைகள், செயல்கள் எப்படியிருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். அடம்பிடிப்பது, யாருடனும் தன் பொருள்களைப் பகிர மறுப்பது என நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களின் பின்னணியில், குழந்தைக்கு வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும்.
குழந்தைக்கு அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். அத்தகைய உணவுகள் குழந்தையை ஹைப்பர் ஆக்டிவ்வாக மாற்றலாம். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் கொடுக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உங்கள் பேத்தியை குழந்தைநல மருத்துவர் அல்லது பிஹேவியரல் தெரபிஸ்ட்டிடம் அழைத்துச் செல்வது அவசியம் என்று தெரிகிறது. ஊட்டச்சத்து ஆலோசகரிடமும் குழந்தையைக் காட்டி, அவளது உணவுப்பழக்கம் தொடர்பான விஷயத்தில் தெளிவு பெறலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/C0Oc7wF
0 Comments