சர்ச்சைகளில் சிக்கும் கர்நாடக அரசு; அடித்து ஆடும் எதிர்க்கட்சிகள் - சித்தராமையாவுக்கு நெருக்கடி?!

தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் ஆட்சியை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், ஆட்சியதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க., மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து சித்தராமையா பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்திவருகிறது.

எடியூரப்பாவுடன் விஜயேந்திரா

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தொடர்ந்து எழுப்பிவருகிறது. தற்போது, ‘மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய ஊழல்’ விவகாரத்தில் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா வலியுறுத்தியிருக்கிறார்.

சமீபகாலமாகவே, சித்தராமையா அரசு தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிவருகிறது. கர்நாடகாவில் தனியார் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை திடீரென்று கொண்டுவந்தது சித்தராமையா அரசு. அதற்கு, தொழில் நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சித்தராமையா

எனவே, அந்த மசோதாவை நிறுத்திவைத்துவிட்டார்கள். அடுத்ததாக, ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கான பணி நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை சித்தராமையா அரசு மேற்கொண்டுவருகிறது. இது, கர்நாடகாவில் ஐ.டி ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு மத்தியில் எதிர்க்கட்சிகளான பா.ஜ.க-வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் கிளப்பிவருகின்றன. கர்நாடகா அரசுக்கு சொந்தமான ‘வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழக‘த்தில் ரூ.187 கோடி முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற விவகாரத்தை பா.ஜ.க-வினர் தீவிரமாகக் கிளப்பிவருகிறார்கள்.

குமாரசாமி

மேலும், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்தியது. அதற்கான மாற்று நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டிவருகிறார்கள். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க-வினர், இது தொடர்பாக கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்தனர்.

‘மைசூரு நகர வளர்ச்சி ஆணைய நில ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கர்நாடகா ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினோம். இதில், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் விஜயேந்திரா கூறினார்.

டி.கே.சிவக்குமார்

வால்மீகி ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மாநில காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது. அந்த எஃப்.ஐ.ஆருக்கு உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. உயர் நீதிமன்றத்தின் தடையுத்தரவு, மாநில அரசு மீது விழுந்த அடி என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள். வால்மீகி ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரபரப்பான சூழலில், சித்தராமையா அரசுக்கு எதிராக பெங்களூருவிலிருந்து மைசூரு வரையிலான பாதயாத்திரையை ஆகஸ்ட் 3-ம் தேதி பா.ஜ.க தொடங்குகிறது. மைசூரு நில விவகாரத்தில் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஏழு நாள்கள் இந்தப் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சித்தராமையா

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, தற்போது மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். பாதயாத்திரை குறித்து தங்களுடன் கலந்தாலோசிக்காமல் பா.ஜ.க தன்னிச்சையாக முடிவெடுத்ததால் கடுப்பான மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்கள், பா.ஜ.க நடத்தும் பாதயாத்திரையில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தனர். பிறகு, ‘இந்தக் குற்றச்சாட்டைப் பொருத்தளவில் பாதயாத்திரையால் எந்தத் தீர்வும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, நாங்கள் இதை சட்ட ரீதியாக அணுகப்போகிறோம்’ என்று குமாரசாமி கூறினார்.

பொதுவாகவே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையில் நிலவி வரும் மோதல் போக்கு, கர்நாடகாவிலும் நிகழ்ந்துவருகிறது. சித்தராமையா அரசுக்கு எதிராக பா.ஜ.க-வினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அது குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட். அதனால் கோபமடைந்த முதல்வர் சித்தராமையா, ‘மாநில அரசிடம் விளக்கம் கோரி ஆளுநர் நோட்டீஸ் அனுப்புவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின் பொம்மையாக ஆளுநர் இருக்கிறார்’ என்று சாடினார்.

கர்நாடக சட்டமன்றம்

சித்தராமையா அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகவேதான், அவர்கள் இருவரையும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை சமீபத்தில் அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியானது. மேலும், அரசுக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்துவரும் நிலையில், திடீரென்று டெல்லிக்குச் சென்று தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் சந்தித்திருக்கிறார்கள். சொந்தக் கட்சியினராலும், எதிர்க்கட்சியினராலும் வரும் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் சித்தராமையா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/LwUS5yV

Post a Comment

0 Comments