இனியன் ராபர்ட், மாநிலச் செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
“மக்களின் வலியைச் சொல்லியிருக்கிறார். பணக்காரர்கள் வாங்கும் ஹெலிகாப்டருக்கு 5% வரி, ஏழைகள் வாங்கும் பைக்குக்கு 28% வரி. இதிலிருந்தே இந்த பட்ஜெட்டின் லட்சணத்தைத் தெரிந்துகொள்ளலாம். மக்களைக் கசக்கிப் பிழியும் ஒரு பட்ஜெட்டை அறிவித்துவிட்டு, ‘தங்கம் விலை குறைந்திருக்கிறதே?’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள் பா.ஜ.க-வினர். அதே சமயத்தில் சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் அரிசி, பருப்பு தொடங்கி பெட்ரோல், டீசல் விலைகள் ஏறியதற்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை. விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்தியும் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எந்த மிடில் கிளாஸ் மக்களின் வாக்குகளால் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்ததோ, அதே மிடில் கிளாஸ் மக்களின் முதுகில் வரிச்சுமையை ஏற்றி குரூரமாக ரசிக்கிறது பா.ஜ.க. இந்த வரி விதிப்பால், இப்போது நடுத்தர வர்க்கமாக இருப்பவர்கள், வறுமைக்கோட்டுக்கும் கீழே தள்ளப்படுவார்கள். தங்களின் ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஆந்திராவுக்கும் பீகாருக்கும் பெரும் தொகையை ஒதுக்கிவிட்டு, தங்களுக்கு வாக்களிக்காத மாநில மக்களை மொத்தமாகப் புறக்கணித்திருக்கிறது பா.ஜ.க. இந்த பாரபட்சத்துக்கு நிச்சயமாக அவர்கள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்.”
ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க
“வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார் ராகுல். இந்த பட்ஜெட், நாட்டிலுள்ள ஏழைகள் தொடங்கி அனைவருக்குமான பட்ஜெட்டாக வெளியாகியிருக்கிறது. கடந்த பத்தாண்டு பா.ஜ.க ஆட்சியில் மட்டும் 25 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பட்ஜெட்டிலும் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க, புதிய திட்டங்கள் தொடங்கி மூன்று கோடி ஏழைகளுக்கு வீடு என அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருக் கின்றன. விவசாயத் திட்டங்களுக்கு நிதி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த புதிய திட்டம், 10 லட்ச ரூபாயாக இருந்த முத்ரா கடன் தொகை 20 லட்ச ரூபாயாக உயர்வு, நாடு முழுவதும் சுற்றுலாத்துறை மேம்பாடு, கல்விக்குக் கூடுதல் ஒதுக்கீடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதில் அதிகம் பயன்பெறப்போவது நடுத்தர மக்கள்தான். ஆனால், மிகவும் மோசமான ஆட்சியைக் கொடுத்த காங்கிரஸ், நல்லாட்சி தரும் பிரதமர் மோடியைக் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடர்ந்து விமர்சித்துவருகிறது. எந்த ஒரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. நாட்டின் வளர்ச்சியை நாசமாக்கியதால், மக்களால் ஓரங்கட்டப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் என்ன பொய் சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.”
from Vikatan Latest news https://ift.tt/pAeHiYN
0 Comments