பல லட்சம் டன் கிராவல் மண் வெட்டிக் கடத்தல்; ஆய்வுசெய்த வட்டாட்சியருக்கு மிரட்டல் - நடந்தது என்ன?

நீர்நிலைகளைத் தூர்வாரும் விதமாகவும், அதிலுள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கும், மண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் இலவசமாக வழங்க தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இதைப் பயன்படுத்தி சிலர் விவசாயிகள் என்ற போர்வையில் வண்டல் மண்ணை அள்ளுவதற்குப் பதிலாக நீர்நிலைகளில் உள்ள கிராவல் மண்ணை வெட்டி எடுத்து வெளியில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில், குறிப்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை, குடிமங்கலம், பல்லடம், காங்கேயம், குண்டடம், எலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், குண்டடத்தை அடுத்த காத்தாங்கண்ணி கிராமத்தில் சாந்தாமணி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் காத்தாங்கண்ணி கிராமத்தில் உள்ள சாந்தாமணியின் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். டன் கணக்கில் கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், "சாந்தாமணி என்பவரின் தோட்டத்தில் ஆய்வு செய்தபோது, 200 அடி நீளம், 200 அடி அகலத்தில் 30 அடி ஆழத்தில் கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக சாந்தாமணி மற்றும் அவரது கணவர் ராஜுவிடம் விசாரித்தபோது, பண்ணைக்குட்டை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், பண்ணைக்குட்டை என்ற பெயரில் பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி கிராவல் மண்ணை வெட்டி எடுத்து பல லட்சங்களுக்கு வெளியில் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மண் கடத்தல்

மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்யவிடாமல் சாந்தாமணி மற்றும் அவரது கணவர் ராஜு அவரது மகன்கள் அருண்குமார், மோகன்குமார் சேர்ந்து வட்டாட்சியர் கோவிந்தசாமிக்கு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த குண்டடம் போலீஸார் மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்" என்றனர்.

இதுகுறித்து குண்டடம் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் கோவிந்தசாமி அளித்த புகாரின்பேரில் சாந்தாமணி, அவரது கணவர் ராஜு, மகன்கள் அருண்குமார், மோகன்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பண்ணைக்குட்டை என்ற பெயரில் சட்டவிரோதமாக செயல்பட்ட கிராவல் மண் கடத்தலை தடுத்த வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



from Vikatan Latest news https://ift.tt/S5nAwBV

Post a Comment

0 Comments