தஞ்சாவூர், மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டு விளார் லாயம் பகுதி, ஜெகநாதன் நகரில் பாதாளச் சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை குழாய்களை மாற்றும் பணி நடைபெற்று வந்தது. தனியார் ஒப்பந்ததாரரான கோபி என்பவர் இதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக சாலைக்கு நடுவே பள்ளம் தோண்டி கீழ் பகுதியில் செல்லும் பாதாளச் சாக்கடை குழாய்களை மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாரியம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த மாரி்முத்து மகன் ஜெயநாராயண மூர்த்தி (27), புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே வளவம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தேவேந்திரன் (32) ஆகிய இருவரும் சுமார் 25 அடி பள்ளத்தில் இறங்கி மாற்று குழாய் பொருத்தும் பணியைச் செய்து கொண்டிருந்தனர். மாலையானதும் கிட்டத்தட்ட பணி முடித்துவிட்டு இரண்டு பேரும் மேலே ஏறுவதற்கான சூழலில் இருந்தனர். அப்போது சுமார் 6:20 மணியளவில் பக்கவாட்டிலிருந்த மண் இருவர் மீதும் சரிந்தது.
தேவேந்திரனை மார்பளவு வரை மண் மூடியிருந்தது. அருகிலிருந்த ஜெயநாராயண மூர்த்தி மேல் மண் முழுவதுமாக சரிந்தது. இதில் அவர் சுத்தமாக மண்ணுக்குள் புதைந்தார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் மாநகராட்சி மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மார்பளவு மண்ணில் சிக்கியிருந்த தேவேந்திரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா, மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. 21 அடி பள்ளத்துக்குள் சிக்கியிருந்த ஜெயநாராயண மூர்த்தியை உயிருடன் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக போராடிய நிலையில் ஜெயநாராயண மூர்த்தி இறந்த நிலையில் மீட்கபட்டது, சோகத்தை ஏற்படுத்தியது. இதை பார்த்த பலரும் கண்கள் கசக்கினர். அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்பட்டதும் ஆம்புலன்ஸில் ஏறிய அவரது அக்கா ஜெயபகவதி, `எழுந்திரிய்யா, உனக்கு ஒன்றும் ஆகலை, உன் பிள்ளைகள் உனக்காக காத்திருக்காங்க வாய்யா' என்றபடி உடலை போட்டு குலுக்கி கதறியது, கண்ணீரை வரவழைத்தது.
இதில், ஜெயநாராயண மூர்த்தி சிக்கிய பள்ளத்தில் இறங்கி பக்கவாட்டில் குழிகள் எடுத்து அவரை மீட்கும் முயற்சியில் அவரது அண்ணன் வீரமணிகண்டனும், அக்கா கணவர் செங்கமலமும் ஈடுபட்டது பெரும் துயரம். `என் தம்பியை உயிருடன் வெளியே கொண்டு வந்திடுவோம் என நினைச்சேன், ஆனால், மண்ணுக்குள்ள சிக்கியவன் பொணமா வெளியில வருவான்னு நினைக்கலை' என வீரமணிகண்டன் கதறியது அங்கிருந்தவர்களை கலங்கடித்தது.
இது குறித்து உயிரிழந்தவரின் அக்கா ஜெயபகவதியிடம் பேசினோம், ``என் தம்பி 15 வருடங்களாக பாதாளச் சாக்கடை சீரமைக்கும் பணி செய்து வந்தான். இந்த பகுதியில் பத்து நாள்களுக்கு மேலாக பள்ளத்தில் குழாய் மாற்றும் பணி நடந்தது. தொழிலாளர்களை காப்பதற்காக, அவர்களின் நலனுக்காக எந்த விதிமுறைகளையும் ஒப்பந்ததாரரோ, மாநகராட்சி நிர்வாகமோ செய்யவில்லை. வயித்து பொழப்புக்காக உயிரை கையில பிடிச்சிக்கிட்டுத்தான் இந்த வேலையை எல்லோரும் செய்து வந்தனர். ஊரை சுத்தமாக்க குழியில் இறங்கியவனுக்கு இப்படி ஒரு நிலையா. அவனுக்கு இரண்டு வயசில் ஒரு பெண் குழந்தையும், பிறந்து எட்டு மாதமே ஆன ஆண் குழந்தையும் உள்ளனர். கைக்குழந்தையுடன் நிற்கும் அவனது மனைவியை எப்படி தேற்றப்போகிறோம், இனி யார் அவர்களை பாதுகாப்பார்கள் என நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. அரசு தான் அந்த குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கணும்" என்றார்.
from Vikatan Latest news https://ift.tt/TNsYV5Z
0 Comments