“சமூக நீதிக்கு எதிரான தி.மு.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்ற ராமதாஸின் விமர்சனம்?

எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா, செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க

“அப்பாவி மக்களின் சாதிவெறியைத் தூண்டிவிட்டு அரசியல் பிழைப்பு நடத்தும் ராமதாஸ், சமூக நீதி குறித்து தி.மு.க-வுக்குப் பாடம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. ‘சமூக நீதிக் காவலர்’ என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் ராமதாஸ், சமூக நீதியின் ஓர் அங்கமான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும், அது பற்றி இழிவாகப் பேசும் பாசிச பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன்... சாதிவாரி மக்கள்தொகை விவரம், அவர்களின் கல்வி, பொருளாதாரச் சூழல் குறித்த புள்ளிவிவரங்கள் போன்றவை இல்லாமல் எந்தச் சமூகத்துக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்பதையும், அப்படியே வழங்கினாலும் உச்ச நீதிமன்றம் அதை ரத்துசெய்துவிடும் என்பதையும் அறியாதவரா ராமதாஸ்... ஒரு தரப்பு மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக, போலியாக இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு என்று பேசுபவர்கள் யார்... சாதி, மத பேதமில்லாமல் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்றரீதியில் சமூக நீதி ஆட்சியை நடத்திவருவது யார் என்பது மக்களுக்குத் தெரியும். சமூக நீதி விஷயத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருப்பது தி.மு.க என்பதால்தான், மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றியைக் கொடுத்த மக்கள், பா.ம.க-வுக்கு வாக்குரிமை மூலம் பாடம் புகட்டினார்கள்!”

எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா, திலகபாமா

திலகபாமா, பொருளாளர், பா.ம.க

“மருத்துவர் அய்யா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கொள்கையில் மட்டும் சமூக நீதி, சமத்துவம் என்று வாய்கிழியப் பேசிவிட்டு, அதற்கு எதிர்மறையாகச் செயல்படக்கூடியவர்கள்தான் தி.மு.க-வினர். வேங்கைவயல் விவகாரத்தில் தொடங்கி, பட்டியலினப் பெண்மணியை, ‘நீ

எஸ்.சி-தானே...’ என்று தி.மு.க அமைச்சர் ஒருவரே கேட்டது, பட்டியலினத்தவரை நிற்கவைத்து தி.மு.க அமைச்சர் கால் மேல் கால்போட்டுப் பேசியது, திருப்பூரில் தூய்மைப் பணியாளர்களைக் கழிவறையில் தங்கவைத்து அங்கேயே சமைத்துச் சாப்பிடவைத்தது வரை தி.மு.க ஆட்சியில் நடக்கும் சமூக அநீதிக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பா.ம.க மட்டுமே சமூக நீதிக்கான உண்மையான அரசியல் இயக்கம். எங்கள் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே சாதிக் கட்சி என்று முத்திரையைக் குத்துகிறார்கள் தி.மு.க-வினர். வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக, தரவுகள் இல்லை என்று ஏமாற்றுகிறது தி.மு.க அரசு. அந்த நாடகத்துக்கு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் துணைபோகிறது. பா.ம.க வன்னியர்களுக்காக மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான இட ஒதுக்கீட்டுக்காகப் போராடிய கட்சி என்பதை வரலாறு சொல்லும்!”



from Vikatan Latest news https://ift.tt/Nhse2S7

Post a Comment

0 Comments